ஏற்கனவே நலிவடைந்த நிலையில் இருக்கும் இலங்கையின் நிதிநிலைமை, அமெரிக்காவின் தற்போதைய வர்த்தக அழுத்தங்களால் மேலும் பாதிப்படையக்கூடும் என சர்வதேச கடன்தரப்படுத்தல் நிறுவனமான ‘ஃபிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரித்துள்ளது.
இலங்கையின் நிதியியல் நிலையானது தம்மால் ‘சிசிசி10’ ஆகத் தரப்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், இது அமெரிக்காவினால் விதிக்கப்படும் உயர் வரி அறவீட்டினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில், இலகுவில் எதிர்மறைத்தாக்கத்துக்கு உள்ளாககக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
‘அமெரிக்காவின் உயர் வரி அறவீடானது ஆசிய, பசுபிக் பிராந்தியத்திலுள்ள இறையாண்மையுடைய பெரும்பாலான நாடுகளின் கடன் அளவீடுகளில் வலுவான அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆசிய, பசுபிக் பிராந்திய நாடுகள் அமெரிக்காவின் நிபந்தனைகளை சார்ந்திருப்பது இந்த வர்த்தக யுத்தத்தினால் அவை மேலும் நலிவடைவதற்கு வழிகோலும்’ எனவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி இந்த உயர் வரி அறவீட்டினால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த முதலீடுகள் தாக்கத்தை எதிர்கொள்ளும் என்பதால், ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமடையும் என அந்நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக சீனா, வியட்நாம், தாய்வான், தாய்லாந்து மற்றும் கொரியா என்பன உள்ளடங்கலாக இப்பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகளுக்காக அவற்றின் மிகமுக்கிய ஏற்றுமதிச்சந்தையான அமெரிக்காவில் தங்கியிருப்பதாகவும், ஆகவே அந்நாடுகள் குறிப்பிடத்தக்களவு சவால்களுக்கு முகங்கொடுக்கநேரும் எனவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.