அன்னை பூபதி நினைவுதினம் இன்று – மட்டக்களப்பு, நல்லூா், கிளிநொச்சியில் நிகழ்வுகள்

77 அன்னை பூபதி நினைவுதினம் இன்று - மட்டக்களப்பு, நல்லூா், கிளிநொச்சியில் நிகழ்வுகள்அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவுதினமான இன்று மட்டக்களப்பு, நல்லூரில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. தவிர, வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் அன்னை பூபதி நினைவேந்தல் நடைபெறவுள்ளது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மாமாங்கேஸ்வரம் பிள்ளையார் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை நடைபெற்று வழிபாட்டுடன் நினைவேந்தல் காலை 9 மணியளவில் ஆரம்பமாகும்.

யாழ்ப்பாணம் – நல்லூர் திலீபன் நினைவிடத்தில் இருந்து சென்ற அன்னைபூபதி நினைவூர்தி நேற்று மாமாங்கத்தை வந்தடைந்தது. இந்த நினைவூர்தி பல இடங்களுக்கும் பயணித்து பிற்பகல் 4 மணிக்கு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தை வந்தடையும்.

பின்னர் அங்கிருந்து, நாவலடியிலுள்ள அன்னை பூபதியின் நினைவுத் தூபிக்கு ஊர்வலம் செல்லும் என்று அன்னை பூபதி ஊர்தி ஏற்பாட்டாளர்களான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதி நினைவேந்தல் இன்று காலை 9.30 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் நடைபெறவுள்ளது.

அன்னை பூபதியின் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சியில் அடையாள உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை அறிவித்துள்ளது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் காலை 8 மணி முதல் கிளிநொச்சி சேவை சந்தைப் பகுதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்னை பூபதி இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக, உடனடியாக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும், புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற இரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1988 மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

மட்டு. – அம்பாறை அன்னையர் முன்னணி சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெற்றது. தண்ணீரை மட்டுமே அருந்தி தொடர்ந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 1988 ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் நீத்தார்.