அந்தரத்தில் மலையக அதிகார சபை – மருதன் ராம் 

பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர் பான கருத்தாடல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இந்த அதிகார சபையை அரசாங்கம் முடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களை இந்நாட்டின் சம உரிமை அனுபவிக்கும் பிரஜைகளாக மாற்றும் நோக்கத்துடன் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது 2018 இன் இறுதிக் காலப்பகுதியில் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் இந்த அதிகார சபை உருவாக்கப்பட்டது.  இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இந்த அதிகார சபைக்கு மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது. இதன் பணிகளை பெருந்தோட்ட அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டு இதனை மூடிவிடவேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை நிறை வேற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் உயர்மட்ட நிர்வாக உத்தியோகத் தர்களைக் கொண்ட ஒரு குழு டிசம்பர் 2024இல் நியமிக்கப்பட்டது. இக்குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை யின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக் கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக இத் தீர்மானத்திற்கு தனது உடன்பாட்டினை தெரிவித்திருக்கின்றார். அத்துடன், இந்த சிபாரிசினை நடைமுறைப்படுத்துவதை கண் காணித்து அமைச்சரவைக்கு முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிக்கப்பட்டது. இந்தநிலையில் மலையக அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட இந்த அதிகார சபை நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளது.
வலுக்கும் எதிர்ப்புகள்
அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை உடனடி யாக நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் உடனடி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது ‘2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உரு வாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந் திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை”ஐ மூடி விட, உங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாக கை விடுங்கள்’ என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
மனோ கணேசன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் மேலும்  தெரிவித்துள்ளதாவது; நுவரெலியா, கொழும்பு அவிசாவளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை, மொனராகலை, காலி, மாத்தறை மற்றும் குருநாகலை, ஆகிய மாவட்ட பெருந்தோட்ட பிராந்தியங்களில் வாழும் வாழும், மலையக தமிழ் மக்கள் சமூக, பொருளாதார, கலாசார, வளர்ச்சிகளில் வளர்ச்சி குன்றிய பிரிவினர் என்பதை புள்ளி விபரங்கள காட்டுகின்றன. இது 200 வருட சாபம்.
இதற்கு காரணம், இந்த சமூகம் இந் நாட்டின் தேசிய வரம்புக்குள் கொண்டு வர படாமல் இன ரீதியாக ஒதுக்கி வைக்கபட்டமை ஆகும். இவர்கள் அந்நியர்கள், இவர்கள் தமிழர் கள், இவர்களுக்கு காணி வழங்ககூடாது, வீடு வழங்க கூடாது, தேசிய கல்வி கட்டமைப்புக்குள் கொண்டு வர கூடாது, தேசிய சுகாதார கட்ட மைப்புக்குள் கொண்டு வர கூடாது, பிரஜா உரிமை வழங்க கூடாது, என எம்மீது காட்ட பட்ட, காட்டப்படும் இனவாதம்தான்.
200 வருட ஒடுக்கு முறையில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் இந்த சமூகத்தின், கல்வி தரும் பாடசாலைகள், 1976ம் ஆண்டிலேயே தேசிய கல்வி கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டன. கடைசி தொகுதி குடியுரிமையும் 2003ம் ஆண்டிலேயே வழங்கப்பட்டு முழுமை அடைந்தது.  ஆகவே தேசிய வளர்ச்சி பாதையில் நாம் தாமதமாகவே நடக்க ஆரம்பித்தோம். இதனால், இந்த சமூகம், பின்தங்கிய சமூகமாக இன்றும் இருக்கிறது.
இந்த இன ஒதுக்கல், கொள்கையை இந்நாட்டில் அனைத்து பெரும்பான்மை கட்சிகளும் முன்னெடுத்தன. இந்த சூழலில்,  இதை கணக்கில் எடுத்தே 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அன்றைய நல்லாட்சி அரசில், தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் பல்வேறு நல திட் டங்களை முன்னெடுத்தோம்.
இந்த பிரதான தேவையின் பின்புலத்தில், மலையக மக்களின் விசேட குறைதீர் (Affirmative Policy) கொள்கை தேவையின் அடிப்படை யில் உருவாக்க பட்ட நிறுவனமே, மலையக அதிகார சபை ஆகும்.  நீங்கள் இன்று இதை, ஒரு அமைச்சின் அங்கமாக மாற்ற முயல்கிறீர்கள். அமைச்சு என்பதும் அதன் நடவடிக்கைகளும், நாட்டின் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படுகின்றன.
நாளை குறிப்பிட்ட அமைச்சு இல்லா மல் போகுமானால், அந்த அமைச்சின் அங்க மும் காணாமல் போய் விடும். ஆனால், அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு, பராளு மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட திணைக்களங்கள், அதிகாரசபைகள் என்பன அமைச்சுகள், அரசாங் கங்கள் மாறுகின்ற காரணத்தால், மாறி விடாது. காணாமல் போய் விடாது. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்து கொண்டு, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மலையக அபிவிருத்தி அதிகார சபை கலைக்கப்படக்கூடாது என்ப தனை வலியுறுத்தி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள் ளதாக இந்த அதிகாரசபையை உருவாக்கும் பணியில் முன்னின்று செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலக ராஜா தெரிவித்துள்ளார். மலையக அதிகாரசபை கலைக்கப்படாது என அரசாங்கம் வாய்மொழி மூலம் உறுதி அளித்தாலும், எழுத்து மூல உத்தர வாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியு றுத்தினார்.
அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான பாதீட் டில் இந்த அதிகாரசபைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதன் ஊடாக அது, கலைக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம். மலையக அதிகார சபை யானது, அரசாங்கத்தின் கலைக்கப்படும் நிறுவ னங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் மறுசீரமைப்பின் பெயரில் அதிகாரக் குறைப்பு செய்யப்படக்கூடாது என் றும், சமூக நலனுக்கான அபிவிருத்தி திட் டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் பதில்
மலையக அதிகார சபை என அறியப்படும் பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை மூடி விட மாட்டோம் என்றும் அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் துறை சார் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த உத்தரவாதத்தை அளித்தார்.
உறுப்பினர்களை நியமித்து நிதி ஒதுக்கி, காத்திரமான செயற்பாட்டினூடாக வினைத் திறனை காட்டுவது மூடப்படுவதிலிருந்து தப்பிக்கும் தற்காலிக ஏற்பாடாக இருந்தாலும் அரசாங்கம் செயற்படும் முறைமையை அறிந்த வர்களுக்குத் தெரியும் இந்த அதிகார சபையை மூடுவது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை முறையாக மீளப்பெற வைப்பதே இதற்கான சரியான நீண்டகால தீர்வாக இருக்கும் என்று.
மலையக மக்களின் வாழ்வியலில் முன் னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்த பல அமைச்சுகளினதும், அரச நிறுவனங்களினதும் தொடர் ஒருங்கிணைப்பு அவசியம் என்ற காரணத்தினாலேயே தனி அமைச்சை தாண்டி இத்தகைய அதிகார சபை உருவாக்கப்பட்டது. இதன் அண்மைக்கால செயற்பாடுகள் மந்த கதியிலிருந்திருப்பினும் எதிர்காலத் திட்டங் களை காத்திரமானதாக மாற்றுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
மலையக சமூகம் பொருளாதார ரீதியாக வலுப்பெற்று நாட்டின் அபிவிருத்திக்கு சம பங்குதாரராக பங்களிப்பதை வழங்குவதற்கு இத்தகைய அமைப்பொன்றின் அத்தியாவசிய தேவை உள்ளது. எனவே இந்நிலைமையை மாற்றி அதிகாரசபையை பாதுகாத்து வினைத்திறனாக செயற்படவைக்க வேண்டு மெனின், அரசாங்கத்தில் இருக்கும் மலையகப் பிரதிநிதிகள் இவ்வதிகார சபையின் அவசி யத்தை, கட்சி மற்றும் அரசாங்கத்தின் மேல் மட்டங்களில் இருப்பவர்களுக்குப் புரியவைத்து அமைச்சரவை தீர்மானத்தை மாற்றும் படி கோரவேண்டும்.
அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த வர் என்ற அடிப்படையில் பிரதமரிடமும்  அதற்கு உடன்பட்டவர் என்ற வகையில் ஜனாதிபதி யிடமும் இத்தீர்மானத்தை மீளப்பெறுவதற்கான கோரிக்கையை முன்வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிகார சபைக்கான ஆளணி மற்றும் போதியளவான நிதி ஒதுக்கீட்டை எதிர்வரும் பாதீட்டு திட்டத்தில் கோர வேண்டும்.