அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோயினால் 10 பேர் உயிரிழப்பு!

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் தொற்று தொடர்பான தற்போதய நிலமை குறித்து வைத்தியரை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அநுராதபுரம் மாவட்டத்தில் வருடந்தோறும் 300 க்கும் அதிகமான எலிக்காய்சல் நோயாளிகள் பதிவாகின்றனர்.

அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர்.கடந்த வருடமும் கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவில் 50 க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாச்யாதுவ,நொச்சியாகம,விளச்சிய,திறப்பனை,இபலோகம,தலாவ,தம்புத்தேகம,ராஜாங்கனை,மதவாச்சி  உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே எலிக்காய்சல் நோயினால் பத்துப்பேர் உயிரிழந்துள்ளனர்.

வருடத்தின் பெரும் போகத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகின்றனர்.அநுராதபும் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில்களின் அளவு குறைவாக உள்ளதால் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சுகாதார தரப்பினர் முகம் கொடுக்கும் பிரதான சவாலாகும் என அநுராதபுரம் மாவட்ட பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க மேலும் தெரிவித்தார்.