அநுரவின் பட்ஜட்டுக்கு தமிழரசு நடுநிலை ஏன்? எதற்காக? எப்படி?  : விதுரன் 

2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு,செலவுத் திட்டத்தின், இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 14-11-2025ஆம் திகதி வெள்ளிக்கிழமை 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதில் 160வாக்குகள் ஆதரவாகவும், 42வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன. ஜீவன் தொண்டமான், மனோகணேசன், திகாம் பரம், இராதாகிருஷ்ணன் வலிந்து ஆதரவை வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், தொழிலாளர்கட்சியின் தலைவர் காதர் மஸ்தான் உட்பட 12 எம்.பி.க்கள் சபையில் பிரசன்னமாக வில்லை.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழக் கம் போல, எதிர்த்து வாக்களிக்க, கடந்த தடவை ஆதரித்து வாக்களித்த செல்வம் அடைக்கலநாதன் இம்முறை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்ட ணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் கடுமையான பிரயத்தனத்துக்கு மத்தியில் எதிர்த்து வாக்களித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதனும் இறுதி நேரம் வரையில் இரண்டும் கெட்டான் நிலைமையில் தான் இருந்தார். வரவு,செலவுத்திட்டத்தினை எதிர்த்தால் தனது கடந்தகால செயற்பாடுகள் உட்பட அண்மைய நாட்களில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இளைஞனின் தற்கொலை தொடர்பில் தனக்கு நெருக்கடிகள் ஏற்படலாம் என்ற அச்சம் அவருக்கு உள்ளூரக் காணப்பட்டது.
இருப்பினும் இறுதியில், தன்மீதான அண் மைக்கால விமர்சனங்களைக் களைவதற்கும், ஜனயநாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டு முடிவை அங்கீகரிப்பதற்கும் எதிர்த்து வாக்க ளிப்பது தான் ஒரே தெரிவாக அவருக்கு இருந்ததை அவர் உணர்ந்திருப்பார் போலும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை, 1977இல் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஐ.தே.க. அரசாங்கத்திற்குப் பிறகு, தனித்து நின்று பெற்றுக்கொண்டுள்ளதோடு மிகவும் வலுவான கட்சியாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
அத்தகைய நிலையில், வரவு, செலவுத் திட்டத்தினை எதிரணியில் உள்ள தரப்புக்கள் ஆதரிக்கவோ, அல்லது நடுநிலை வகிக்க வேண்டிய எதிர்பார்ப்புக்கூட தேசிய மக்கள் சக்தியிடத்தில் இருக்கவில்லை என்பது யதார்த்தமான விடய மாகும். அப்படியிருக்கவும், இலங்கைத் தமிழரசுக் கட்சி எதற்காக நடுநிலை வகிக்கும் முடிவினை எடுத்தது என்பது பெருங்கேள்வி.
இங்கே, ‘நடுநிலை’ வகிக்கும் முடிவு தானே எடுக்கப்பட்டிருக்கின்றது என்று கூறினா லும் ‘நடுநிலை’ என்பது ஒருவகையில் ‘ஆதரவு’ நிலைப்பாடு தான். ஆகவே எதற்காக தமிழரசுக்கட்சி அவ்விதமான முடிவினை எடுத்தது. அதற்கு என்ன காரணங்கள் என்பது பற்றி சற்றே கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணமிதுவாக உள்ளது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, ஏன் காது கொடுத்துக் கேட்க வோகூட நேரம் ஒதுக்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமாரவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கீடு செய்யுமாறு கோரி எழுத்துமூலமாகக் கடிதம் அனுப்பபட்டு ஐந்து மாதங்களாகியும் பதில் கிடைக்காத நிலைமையே நிலவுகிறது.
இத்தகைய கடுமையான மனோநிலையில் இருக்கும்  அரசாங்கத்தின் வரவு,செலவுத் திட்டத்தை எதிர்கொள்வது குறித்து ஆராய்கின்றபோது ‘எதிர்ப்பதை தவிர வேறு தெரிவை கிஞ்சித்தும் சிந்திப்பதென்பது பொருத்தமற்றதாகும்.
மேலும், இந்த வரவு,செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்கான தனித்துவமான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடுகளோ இல்லை. வழக்கம்போலவே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய, மையவாத சிந்தனையின் வெளிப்பாடுகளையே ஒதுக்கீடுகள் மிகத் தெளிவாகக் காண்பிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்னணியில், தமிழரசுக் கட்சி வரவு,செலவுத் திட்ட வாக்கெடுப் பைப் எதிர்ப்பதை தாண்டி நடுநிலை வகிக்கும் முடிவை எடுத்திருப்பது, அரசாங்கத்திற்கு நல் லெண்ண சமிக்ஞையை காட்டுவதற்காக எடுக்கப் பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், ‘நல் லெண்ண அடிப்படையில் ஆதரிப்பது’ இலகு தமிழில் ‘அரசாங்கத்துக்கு முண்டுகொடுப்பது’ என்பது தமிழ்த் தேசியக் கட்சிகளின் வரலாற்றில் தொடர்ச்சியான சீரழிவையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் வரலாற்று உண்மையாகும்.
தமிழர் விடுதலைக்கூட்டணி, 1965ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங் கத்துடன் இணைந்து செயற்பட்டபோது வரவு, செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தது. ஈற்றில் டட்லி-செல்வா உடன்பாடு கிழித்தெறியப்பட்டது.
பின்னர், 2010-2011இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது நல்லெ ண்ண சமிக்ஞையாக வரவு,செலவத்திட்ட வாக் கெடுப்பில் பங்கேற்காத நிலைமை வெளிக் காட்டப்பட்டது. இதன்விளைவாக, 16 சுற்றுப் பேச்சுக்களின் முடிவில் வெற்றுக்கையுடன் வெளியேற வேண்டிய நிலையே ஏற்பட்டது.
2015இல் மைத்திரி-ரணில் கூட்டு அரசாங் கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தேன்நிலவு கொண்டாடிய காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அத்தனை வரவு, செலவுத் திட்டங்களையும் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் ஆதரித்தபோதும் எந்தப் பயனும் கிடைக் கவில்லை. எனவே, இலங்கைத் தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘நல் லெண்ண அடிப்படையில்’ அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்கப்போய் மூக்குடைப்பட்டுக் கொண் டது தான் வரலாறாகிறது. அப்படியிருக்க, மீண்டும் அதேபோன்றதொரு நிலைப்பாட்டை இலங் கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருப்பது அர்த்த பூர்வ மானதாகக் கொள்ள முடியாது,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்ட வாக்கெடுப் பில் நடுநிலை வகிக்கும் தீர்மானத் துக்குக் காரணம், ஜனாதிபதி அநுரகுமார தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடத் தயா ரென அறிவித்திருப்பது தான் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், அவர் ஜனாதிபதி அநுர அதனை எப்போது கூறினார், எங்கே உத்தியோகபூர்வமாக அறிவித்தார் என்பதை வெளிப்படுத்தவில்லை. தனது தந்தையாரின் மரணச்சடங்கிற்கு வந்திருந்த ஜனாதிபதி அநுர வெளியேறும் போது, ‘நாங்கள் சந்தித்து உரையாடுவோம்’ என்று கூறிவிட்டுச் சென்றார். இது வழக்கமாக உணர்வுபூர்வமான சடங்குகளில் பங்கேற்பவர்கள் கூறுகிற விடயம். ஆகவே, அந்தக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்குமாயின் அது சிறுபிள்ளைத்தனமானது.
இதேநேரம், தமிழரசுக்கட்சிக்குள் காணப்படும் உள்ளகப் பிளவுகளின் பிரகாரம், சாணக்கி யன் உட்பட சுமந்திரன் அணியினர் நடுநிலை வகிப்பதாகத் தீர்மானித்தால், சிறீதரன், சிறீநேசன் போன்றோர் அதனை ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். குறைந்தபட்சம் சாணக்கியனும், சுமந் திரனும் தான் அவ்விதமான முடிவுக்கு காரணமாக இருக்கின்றார்கள் என்பதையாவது வெளிப் படுத்து வார்கள். ஆனால் நடுநிலை விகிக்கும் முடிவு எடுக்கப்பட்ட விடயத்தில் சிறீதர னும், சிறீநேச னும் கூட எதிர்ப்பினை வெளிப் படுத்த வில்லை. அவர்களும் அதனை ஆதரிக்கும் நிலைப் பாட்டையே வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் சார்ந்த எத்தனையோ பொது விடயங் களில் இருதரப்பும் ஒன்றாக ஒரு மேடையில் அமர்வதற்கு கூட மறுத்திருந்த நிலைமைகளில் திடீரென்று எவ் வாறு வரவு,செலவுத்திட்ட விடயத்தில் மாத்திரம் கூட்டுமுடிவு எடுக்கப்பட்டது.
உண்மையில், தமிழ்த் தேசிய உணர்வாளர் களும், தமிழரசுக்கட்சியின் கொள்கைப்பற்று ஆதர வாளர்களும் வெட்கித்தலைகுனிய வேண் டிய நிலைமை. ஏனென்றால் தனிப்பட்டநலன்களுக் குள் தான் தமிழ் மக்களின் தேசியமும், கொள்கைப் பற்றும், உணர்வுகளும் சிக்கவைக்கப்பட்டுள்ளன. ஆம், சிவஞானம் சிறிதரனைப் பொறுத்த வரையில் அரசாங்கத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார பதவிக்குவந்து சொற்ப நாட்களில் அவரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து உரையாடினார். அதன் பின்னர் தற்போது வரையில் மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல் வெளியாகியிருக்கவில்லை.
அடுத்து அவருக்கு எதிராக சொத்துக் குவிப்பு தொடர்பான முறைப்பாடு தென்னி லங்கை அமைப்பால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரையில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலைமைகள் ‘பின்கதவு’ உறவுகளை மிகத்தெளிவாக வெளிப் படுத்துகின்றன. ஆகவே கட்சி நடுநிலை முடிவை எடுப்பதாக கூறும்போது சிறிதரனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுவதற்கு ஒப்பானதாகவே இருந்திருக்கும்.
அடுத்து, சாணக்கியன், அவருடைய கடந்தகால அரசியல் வரலாறு, ராஜபக்ஷக்களுட னான பங்காளித்துவத்தையே கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு நிதி முறைகேடுகள், கேள்வி மனுக்கோரல் முறைகேடுகள், சொத்துக் குவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட கிழக்குமாகாண அரசியல்வாதிக ளின் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள்.
குறித்த பட்டியில் சாணக்கியனின் பெயரும் இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னரே, அநுரவை தனியாகச் சந்தித்து உரையாடினார். அச்சந்திப்பின் காரணம் மிகத்தெளிவாக இருந்த போதும் தமிழர்களின் பிரச்சினை பற்றிப் பேச நேரம் கோருவதற்காக சந்தித்ததாக பொதுவெளி யில் கூறியிருந்தார்.
அடுத்ததாக, எம்.ஏ.சுமந்திரன் அநுரவின் மீது மென்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டி ருப்பதற்குக் காரணம், தனது தலைமையில் உரு வாக்கப்பட்ட ‘ஏக்கிய இராச்சிய’ புதிய அரசியலமைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருப்பது தான். சுமந்திரனைப் பொறுத்த வரையில் அமெரிக்காவும், மேற்குலமும் புதிய அரசியலமைப்புக்கான உருவாக்கத்துக்காக பெருந் தொகை நிதியை செலவிட்டுள்ளன.
அத்தரப்புக்கள் தாம் செலவழித்த நிதிக்காக அறுவடையை எதிர்பார்க்கின்றார்கள். அந்த அறுவடையை எப்படியாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுமந்திரன் இருக்கின்றார். ஆகவே தான் சுமந்திரன் ‘ஏக்கிய இராச்சிய’ புதிய அரசியலமைப்புச் செயற் பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றார். அத்தோடு அது தன்னால் வரையப்பட்டது என்று மார்பு தட்டிக்கொள்ள முடியும். அதன்மூலம் இழந்த செல்வாக்கை மீளப்பெற முடியும் என்பது அவருடைய அரசியல் கணக்காக உள்ளது.
அதுபோலத்தான், வைத்தியர் சத்தியலிங் கம், கோடீஸ்வரன் போன்றவர்களின் கடந்தகால நிதி விவகாரங்களும் சார்ச்சைக்குரியவையாக உள்ளன. குகதாசன், வைத்தியர் ஸ்ரீநாத், ரவிகரன் போன்றவர்கள் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து தர்க்கம் செய்வதற்கான இயலுமை அற்றவர்கள்.
இத்தகைய நிலைமைகளில் தான் இலங் கைத் தமிழரசுக்கட்சி ‘நடுநிலை’ முடிவை எடுத் திருக்கின்றது. அதுவொரு தனிப்பட்ட ரீதியில் இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதை மையப்படுத்திய முடிவு தான். தவிர, தர்க்கரீதியாகவோ அல்லது தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தியோ எடுக்கப்பட்ட அர்த்தபூர்வமான, மூலோபாய ரீதி யான முடிவாக அர்த்தம் கற்பிக்க முடியாது.
அரசியல் ரீதியில் பலமானதொரு அரசாங் கத்துக்கு எதிராக, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப்பதற்கு ‘எதிர்ப்பு’ என்பதே கையிலுள்ள ஒரே ஆயும். அந்த ஆயுதத்தை பயன்படுத்தாமல், மீண்டும் ‘நல்லெண்ண சமிக்ஞை’ என்ற பெயரில் ‘நடுநிலை’ வகிப்பது, வரலாற்றுத் தவறுகளைத் திரும்பச் செய்வதாகவே அமைகிறது என்பதற்கு அப்பால் தமிழ்த் தேசியத்தை நீர்த்துப்போகச் செய்யும் தற்குறிச் செயற்பாடு தான்.
இதன்விளைவுகளை அடுத்துவரும் சொற் பகாலத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டு மல்ல ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனமும் அனுபவிக்கும். ஏனென்றால், தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய அரசியலை உறைநிலைக்கு கொண்டு செல்வது என்பதைத் திட்டமிட்டு பல நாட்களாகிவிட்டது