அநுரகுமாரவின் ‘கச்சதீவு விஜயம்’ இந்தியாவுக்கு சொல்லியுள்ள ‘செய்தி’ – விதுரன் 

சீனாவின் தியான்ஜினில் சீனாவின் ஷி ஜின் பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புட்டின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலக ஒழுங்கு மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவர் மீது ஒருவர் சகோதர பாசத்தை காண்பித்து கட்டிணைத்துக் கொண்டிருக்கையில் இந்தியாவின் தென்பிராந்தியத்தில் மிக நெருக்க மாக இருக்கும் இலங்கை டில்லிக்கும், தமிழ் நாட்டுக்கும் மிக அமைதியாக ஒரு பெரும் செய்தியை அனுப்பியிருக்கின்றது.
நான்காவது தடவையாக செம்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோக பூர்வ அறிவிப்புக்களைச் செய்யாது முன்கூட்டிய திட்டமிடல்கள் ஏதுவுமின்றி கடற் படையின் படகில் கச்சதீவுக்கு மேற்கொண்ட பயணம், சில மணிநேரங்களில் நிகழ்ந்தேறிய நிகழ்வு என்பதற்கு அப்பால் புவிசார் அரசியலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
கச்சதீவு பற்றிய வரலாற்றை ஒருதடவை பின்னோக்கிப் பார்த்தால்,  பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். போருக்கு முன்னைய காலத்தில் தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களால் வலைகள் உலர்த்துவதற்கும், சிறு ஒய்வுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இக்காலப்பகுதியில் இந்தத் தீவின் உரிமை குறித்து இருநாடுகளின் அரச மட்டங்களிடையே நீண்ட விவாதங்கள் காணப்பட்டபோதும், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட இரு ஒப்பந்தங்கள் மூலம் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தங்களின்படி, கச்சதீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதொரு பகுதியாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
இருப்பினும், குறித்த கச்சதீவு ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வில்லை என்றும், இதனால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக குற்றம் சாட்டி வருகின்றன.
இத்தகையதொரு பின்னணியில், தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் அவ்வப்போது கச்சத் தீவை ‘மீட்டெடுக்க’ வேண்டும் என்று கோசமிடு கின்றனர். இதுவொரு தேர்தல் அரசியல் கோசமாக இருந்தாலும், மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு உணர்வுபூர்வமான கருவியாகவே பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்று கருதிய பாரதீய ஜனதாக் கட்சி, தனது தமிழகத் தலைவர் அண் ணாமலையை வைத்து கச்சதீவை மீளப்பெற வேண்டும் என்ற கோசத்தை தூசி தட்டியிருந்தது. அவர், தமிழகத்தில் மட்டுமல்ல. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்திலும் கச்சதீவு மீட்பு கோசத்தை கைவிட்டிருக்கவில்லை. இவ்வாறாக அக்கோசத்தை கையெடுத்தவர்களின் பட்டியலில் இறுதியாக இணைந்து கொண்டவர் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்.
நடிகராக விஜயை தென்னிலங்கை சிங்கள மக்களும் நன்கறிந்திருந்த நிலையில் அவரது மதுரை மாநாட்டில் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற கோசம் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந் தது. கச்சதீவு வடபிராந்தியத்தில் இருந்தாலும் எமது தேசத்தை மீளப்பெற இந்தியா முயற்சிக்கின்றது என்ற பார்வையில் அதிகமான உணர்வு பூர்வமான விடயமாக மாறியிருந்தது.
ஆனால், கச்சதீவு மீட்பு பற்றிய அரசியல் வாதங்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத் தும் ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற அழிவுகரமான முறைகளால் கடல்வளம் குறைந்துவரும் உண்மையான பிரச்சினையை மூடிமறைக்கின்றன. கடல்வளம் குறைந்ததால், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கின்றனர் என்றும் இதன் விளைவாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படு வது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற பிரச்சனைகள் தொடர்கின்றன என்றும் பூசிமெழுகும் நிலைமையே உள்ளது.
இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுரகு மார கச்சதீவுக்கான விஜயத்தின் மூலமாக கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதனுடைய இறையாண்மையை நாட்டின் தலைவராக நான் உறுதிப்படுத்துகின்றேன் என்ற செய்தியை டில்லிக்கும், தமிழ் நாட்டுக்கும் தெளிவாக சொல்லியுள்ளார்.
மேலோட்டமாக பார்க்கையில் ‘கச்சத்தீவை மீட்டெடுப்போம்’ என்று குரல் கொடுக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு நேரடியான பதிலடி யாக அமைந்திருக்கின்றது என்றாலும், அதனைத் தாண்டியும் டில்லிக்கு வலுவானதொரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ‘காங்கிரஸ் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது’ என்று அண்மையில் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
அதன்பின்னர் இலங்கைக்கு வந்திருந்த பிரதமர் மோடி அநுராதபுரத்திலிருந்து இராமேஸ் வரத்துக்கு செல்கின்றபோது, இராமர் பலத்திற்கு மேலாக பறந்து சென்றிருந்தார். அத்தோடு அத்தருணத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை யும் பகிர்ந்து அவ்வழியால் பயணிப்பது பெரும் பாக்கியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவரது கூற்று குறித்த புரிதல் இலங்கையர் களுக்கு எவ்வளவுக்கு இருந்திருக்குமோ தெரியாது. ஆனால் ஒவ்வொரு இந்தியருக்கும் அந்த புண்ணிய பயணத்தை தமது பிறவிப்பெரும்பேறாக மேற் கொள்ள வேண்டும் என்ற வேணவாவை தோற்று வித்திருக்கும்.
பிரதமர் மோடியின் எதிர்பார்ப்பும் அது தான். நிச்சயமாக கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெறுவதற்கான கோசத்தை மக்கள் மட்டத் திலிருந்து பேரலையாக எழுப்புவதை நோக்கமாக கொண்டதாகும். அதில் அவர் குறிப்பிடத்தக்க அடைவை எட்டியிருந்தார்.
அடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் மோடி கச்சதீவை மக்கள் மயப்படுத்தி தனது தமிழக அரசியல் சகாப்தத்தை ஆரம்பிப்பார் என்ற சூட்சுமமான திட்டத்தினை ஜனாதிபதி அநுர அறிந்திருந்தாரோ தெரியாது ஆனால் தனது அணுகுமுறையால் பிரதமர் மோடி யின் நகர்வை தகர்த்திருக்கின்றார்.
அடுத்து, ஜனாதிபதி அநுர, இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் கால்பதிக்காத கச்சதீவுக்குச் சென்று சிங்கள தேசியவாதிகளின் ஆதரவை மட்டுமல்ல, இலங்கை தேசப்பற்றாளர்களின் பெரு வரவேற்பையும் பெற்றிருக்கின்றார்.
குறிப்பாக, அவர் கச்சதீவில் கடற்படை அதிகாரிகளுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்த நிலையானது, ‘கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட் டோம்’ என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார் என்ற பெரு நம்பிக்கை  சிங்கள பெரும்பான்மை சமூகத்திற்கு அளித்துள் ளது.
அதேநேரம், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, தமிழின அழிப்பின் அடையாளமாக சான்றுரைத்துக் கொண்டிருக்கும் செம்மணிக்கு அவரது அமைச்சரவை சகபாடியான சந்திரசேகரர் அறிவித்தபிரகாரம் செல்லாத ஜனாதிபதி அநுர தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக் கின்றேன் என்ற விடயத்தினையும் வெளிப்படுத்தி யுள்ளார்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களைப் பொறுத்தவரையில் இந்திய மீனவர்களால் படுகின்ற இன்னல்கள் நாளுக்கு நாள் குறைந்த பாடில்லை. அவர்களுக்கு அந்தப் பிரச்சி னைக்கு நிரந்தமான தீர்வு தேவையாக உள்ளது. ஆகவே தமது பக்கமாக நாட்டின் தலைவரே உறுதியாக நிற்கின்றார் என்ற விம்பம் அவருக்கான ஆதரவுத்தளத்தை விரிந்ததாக மாற்றும். ஏனென் றால் யாழ்.மாவட்ட வாக்காளர் தொகையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினர் கரையோரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள். இந்தக் கணக்கு ஜனாதிபதி அநுரவுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், பாகிஸ்தானு டன் ஏற்படுத்திக்கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது. காஷ்மீர் விடயத்தில் 137ஆவது பிரிவை நீக்கி சிறப்பு அந்தஸ்துக்களை அகற்றியுள்ளது. அதுபோன்ற ஒருதலைப்பட்சமான ஒப்பந்த மீறல்களை இந்தியா ‘கச்சதீவு’ விடயத்தில் செய்யாது என்று நம்பமுடியாது.
ஆகவே, பிரதமர் மோடி முந்திக்கொள் வதற்கு முன்னதாக, கச்சதீவை மீளப்பெறுவது இலகுவான விடயம் அல்ல என்று சொல்வதன் ஊடாக முன்கூட்டிய எச்சரிக்கையாகவும், இலங் கையின் இறையாண்மை ஆட்புல எல்லை உரிமை களை சட்டபூர்வமாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் ஜனாதிபதி அநுர சிந்தித்திருக்கிறார்.
கச்சத்தீவில் கடற்படை ராடர் நிலையத்தை யும், தீவுக்கான கடற்படைப் பிரிவையும் நிறு வியுள்ளது. இந்த நடவடிக்கைகள், தீவின் மீதான இலங்கையின் கட்டுப்பாட்டை மேலும் வலுப் படுத்த உதவுகின்றன. இவ்வாறான நிலை யில் புனித அந்தோனியார் தேவாலயத்தை மையப் படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான திட்டங்களையும் அரசு பரிசீலித்து வருகிறது.
அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவ தாக இருந்தால் அந்தோனியார் திருவிழாவின் போது, அரைச்சொந்தம் கொண்டாடும் இந்தியப் பக்தர்களுக்கு, எங்களது தயவால் தான் கடவுச்சீட்டின்றி எமது நாட்டுக்குள் பிரவேசிக்கின் றீர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை உறைப்பாக எடுத்துரைக்கும் செயற்பாடாகவும் உள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, எண்பதுக ளில் இந்திய எதிர்ப்பு வாதத்தில் இருந்த ஜே.விபி இன்னமும் அதேநிலைப்பாட்டில் அதிகாரத்துடன் மிடுக்காக உள்ளதென்ற செய்தியை டில்லிக்கு மட்டுமல்ல, சிங்கள தேசிய இடதுசாரித்துவத்துக்கும் மிகத் தெளிவாக சொல்லி யிருக்கிறார் ஜனாதிபதி அநுர.
இதேநேரம், இந்தியாவின் பின்னணியில் எதிரணிகளை குழுக்குழுக்களாக அமைத்து அரசியல் குடைச்சல்கொடுத்துக்கொண்டிருந்த ரணிலை கைது செய்து இரு நாட்களுக்கு பின்னர் பிணை வழங்கப்பட்ட நிலையில், ரணிலின் துருப் புச் சீட்டான மிலிந்த மொரகொடவை டில்லி அழைத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பை நடத்தி அநுரவை ‘குட்டிவைக்க’ முனைந்திருந்த நிலையில் அதற்கு உடனடியான பிரதிபலிப்பை செய்திருக்கிறார் அவர்.
கச்சதீவு விஜயத்தால், அநுர தென்னிலங்கை யில் அரசியல் தேசிய நாயகன். வட இலங்கை யில்  மக்கள் காப்பாளன். இந்த நிலைமை அடுத்து வருகின்ற தமிழ்நாட்டு தேர்தலுக்கு மேலும் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், தென்பிராந்திய பாதுகாப்புக்காக வட இலங்கை யில் சீனா கால் பதிப்பதை தடுத்த இந்தியா இயல் பாகவே டில்லியுடன் எதிர்மறையான மனோ நிலையை உடைய தலைவர் எழுச்சி பெறுவதை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதில் அதன் இராஜதந்திரம் தங்கியுள்ளது.