வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ‘அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற தமது அரசாங்கம் ஆதரவு வழங்கத் தயாராக இருக்கிறது’ என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
‘மின்சாரக் கட்டணங்களில் நிலையான குறைப்பைப் பேணுவதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்படும’. ‘சில ஆண்டுகளுக்குள் செலவுகளைக் குறைத்து நிலையான விலையை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’.
‘நாட்டின் பொருளாதாரத்தை மற்றுமொரு நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளும்’ என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘ஒரு சிறிய தவறு கூட பொருளாதாரத்திற்கு ஆபத்தான அடியாக அமையக்கூடும் என்பதால், பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
‘பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு நாடு தற்போது கவனமாக நகர்ந்து வருவதால், பரஸ்பர புரிதலுடன் இந்தக் கடினமான தடையைத் தாண்டுவதில் கைகோர்க்குமாறு’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



