பதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 40 இற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பசறை – மடூல்சீமை வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
விசேட பொறியியலாளர்கள் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
பதுளை – பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் தற்போதுவரை பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசறை பகுதியிலிருந்து நேற்று மாலை எக்கிரிய பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே பாரிய வளைவு பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.