வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் – கருணைகொலை செய்யுமாறு கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தமிழக வேலூர் சிறையில் பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி, தன்னை கருணைக்கொலை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறைச்சாலையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முருகன் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கான சிறை சலுகைகள் இரத்து செய்யப்பட்டு அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டதோடு,மனைவி நளினியை சந்திக்கவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து தன்னை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி முருகன் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அதன்பின்னர் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில், மீண்டும் இருவரும் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ள அவர், சிறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.

இதற்கிடையே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

கருணைக்கொலை செய்யக்கோரி தான் அவர் மனு அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் நளினியின் சட்டத்தரணி புகழேந்தி சிறைச்சாலைக்கு வந்து நளினியை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த மனு குறித்து, நளினியின் வக்கீல் புகழேந்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த தகவல் எனக்கும் வந்துள்ளதாகவும் ஆனால் உண்மையா? என தெரியவில்லை. இதுபற்றி ஜெயில் அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஓரிரு நாட்களில் தாம் நளினியை சந்திக்க உள்ளதாகவும் வக்கீல் புகழேந்தி கூறிய நிலையில், அவர் நளினியுடன் பேசிய பின்னரே உண்மையா நிலைப்பாடு தெரியவரும்.