வெளிவந்தது புதிய வர்த்தமானி; பணியிடங்களிலும், வணிக இடங்களிலும் முகக் கவசம் கட்டாயம்

59
92 Views

பணியிடங்களிலும், வணிக இடங்களிலும் நுழையும் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணுதல் மற்றும் பிரதான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை செயல்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கைச்சாத்திட்ட வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக இந்த வர்த்தமானி அறிவிப்பில் வணிக மற்றும் பணியிடங்களில் நுழைவது மற்றும் பணியிடங்களை பராமரிப்பது தொடர்பில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பணியிடங்களிலும், வணிக இடங்களிலும் நுழையும் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றருக்கு குறையாத சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். பணியிடத்திற்குள் நுழைய முன்பு ஒவ்வொரு நபரின் உடல் வெப்ப நிலையும் அளவிடப்படவேண்டும்.

கிருமி நாசினி திரவத்துடன், கை கழுவ வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். உள்வரும் ஒவ்வொரு நபரின் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்புத் தகவலின் பதிவு பராமரிக்கப்படல் வேண்டும்.

அதேபோன்று, பயணத் தடைகள், தனிமைப்படுத்தல் மற்றும் போக்கு வரத்து போன்ற விடயங்கள் தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தவும் இந்த வர்த்தமானி அறிவிப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here