வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பா? – சுதந்திர ஊடகவியலாளரிடம் காவல்துறை விசாரணை

394 Views

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர் இன்று  காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் உழைக்கும் ஊடவியலாளர் சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான புண்ணியமூர்த்தி சசிகரனே இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை 10.00மணி தொடக்கம் 11.30மணி வரையில் மட்டக்களப்பு சிரேஸ்ட காவல் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள குற்ற விசாரணைப்பிரிவில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஊடகவியலாளரின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் விசாரணைக்கான அழைப்பினை வழங்கியிருந்த நிலையில், இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை நடாத்தியது நீங்களா,வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பா,விடுதலைப்புலி ஆதரவாளர்களுடன் தொடர்பா? மாவட்டம் தாண்டி ஏன் ஊடக கடமைக்கு சென்றீர்கள் உட்பட பல்வேறு கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தம் செயற்பாடாகவே இதனை கருத வேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது தொடக்கம் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தலகள் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பினை முன்னெடுக்கும்போது அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பாடுகளை முன்னெடுப்பது எதிர்காலத்தில் ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகும் நிலையேற்படும் எனவும் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply