வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்…

“தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு.” என்று தமிழரை அடையாளப்படுத்தினர். வேறு எந்த இனத்திற்கும், மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த, தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்று உலகம் முழுவதும் தடம் பதித்திருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும், சமூகம் என்னும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கின்றது என்று தானே அர்த்தம்.

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல்பு எடுத்துக் கூறுகின்றது. மேலும் வீரர் அல்லாதவர்கள் புறங்காட்ட ஓடுவர், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகின்றது. எதிரி நாட்டுப் படையினனை தாக்கும் போதுகூட ஈரமும், இரக்கமும் இருந்ததை காணமுடியும். அக்காலத்தில் தமிழரிடம் அறப்போர் முறையே அமைந்திருந்தது.

PHOTO 2021 02 18 12 27 38 1 வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்...

பசுக்களும், பசுவை ஒத்த பார்ப்பனர்களும், பெண்களும், நோயுடையவர்களும், புதல்வர்களை பெறாதவர்களும், யாம் அம்பு விடுவதற்கு முன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என வீரன் ஒருவர் கூறுவதிலிருந்து தமிழரின் அறப்போர் முறை விளங்கும். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகை படைகளும் போரில் ஈடுபட்டன. புறமுதுகில் அம்பு பட்டு வீழ்ந்து போவதும் மற்றும் புறமுதுகிட்டு ஓடுவதும் அவமானம் எனக் கருதிய பரம்பரை தமிழ்ப்பரம்பரை. நால்வகைப் படைகளும் உருத்து நின்று போர் புரியும் செருக்களத்தில் ஆண் யானைகளை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டது.

“கைவேல்களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்” என்றார் திருவள்ளுவர். அதாவது வீரன் வீறிட்ட ஆனையின் மீது தன் வேலை விட்டெறிந்தான். அது அடிபட்டு விழுந்தது. அப்பொழுது மற்றொரு யானை அவனைத் தாக்க வந்தது. இன்னொரு வேல் கிடைத்தால், இந்த யானையை முடித்திடலாமே என்று அங்குமிங்கும் பார்த்தான். அந்நிலையில் அவன் மார்பில் தைத்திருந்த வேல் ஒன்றைக் கண்டான். அதுவரை போர் வெறியில் மேனியிற் பாய்ந்திருந்த வேலையும் அறியாதிருந்த வீரன், அதை ஆர்வத்தோடு பறித்து இழுத்தான். வேழத்தைக் கொல்ல ஒரு வேல் கிடைத்தது என்று மகிழ்ந்தான்.

போர்க்களத்தில் புறமுதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல. மார்பிலே காயப்பட்டு, இறப்பதையே பெரிதும் விரும்பினார்கள். இத்தகைய வீரமானவர்களுக்கு இணையான வீரர்களை உலகில் காண முடியாது. முதுகில் காயப்பட்டதினால் பெற்ற மகனையே தாய் வெட்டிக் கொன்ற காட்சிகளை இலக்கியத்திலே காண்கின்றோம்.

PHOTO 2021 02 18 12 27 47 1 வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்...

போரில் அடிபட்டு, மாண்டுபோன தன் மகன் இறந்த செய்தி அறிந்த ஒரு தமிழ்த் தாய் போர்க்களம் நோக்கி நடக்கின்றாள். இறந்து போன தன் மகன் நெஞ்சிலே அம்பு பட்டு இறந்திருக்க வேண்டும். ஆனால் முதுகில் அம்பு பட்டு புறமுதுகு காட்டி இறந்து போயிருப்பானேயானால்  அவன் வாய் வைத்து பால் குடித்த மார்பகங்களை அறுத்தெறிவேன் என்று சபதம் செய்து கொள்கிறாள். போர்க்களத்தில் நெஞ்சிலே அம்பு பட்டு மாண்டு கிடக்கிறான் மகன். அதனைப் பார்த்து அவனை ஆரத்தழுவி, அழும் தாயைத் தான் சங்க இலக்கியங்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றன.

போரில் கணவனை இழந்து தந்தையை இழந்து இறுதியில் தனக்கு உதவியாக இருந்த ஒரே மகனையும் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த புறநானூற்று தாயும் தமிழிச்சி என்பதில் பெருமை கொள்வோம். வீரப்புகழ் வெறும் புனைந்துரையன்று. மிகையுரையன்று. வரலாறு காட்டம் செய்தியே ஆகும். புறப்பொருள் தொடர்பான நாநூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு. அதில் பெரும்பாலான பாடல்கள் பண்டைய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றுகின்றன. இங்கு வீரம் என்பது கல்லைத் தக்குவதும், காளையை அடக்குவதுமல்ல. மற்றும் பொழுதுபோக்கிற்காக அத்தை மகள், மாமன் மகள் மற்றும் சில கன்னியர்களின் மனதில் இடம்பிடிக்க செய்யப்படும் வேலைகள் அல்ல. இங்கு வீரம் என்பது போர்க்களத்தில் புரிந்த சாகசங்களை பற்றியதாகும்.

முப்படைகள் வந்தாலும் போர்க்களத்தில் எதிர்த்து நின்று எதிரியை வென்ற பாகுபலி மன்னர்கள் புறநானூற்று காலத்தில் நாட்டை ஆண்டு வந்திருக்கிறார்கள். கூடலும், கூடல் நிமிர்தமுமாக காதலோடு கொஞ்சிக்குலாவிக் கொண்டிருந்தாலும் போர் என வந்து விட்டால் ஏன் எதற்கு எனக் கேள்வி கேட்காமல் போரிற்கு சென்றுவிடுவார்கள். எனது கணவன் சிறந்த போர் வீரன் என சொல்லிக் கொள்வதையே பெருமையெனக் கருதினர் பெண்கள்.

சங்ககாலத்தில் போர் நிலவும் காலத்தில் போர்க்களத்திற்கு அனுப்புவதற்கு ஆட்களை தேடி பணியாளன் ஒருவன் மக்கள் வசிக்கும் தெருவிற்கு வந்து அங்கு நிற்கும் பெண்ணொருவரிடம் உன் மகன் எங்கே எனக் கேட்ட போது, என் மகன் எங்கு இருக்கிறான் என எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி தங்கி விட்டுப் போன கல் குகையைப் போன்றது. அத்தகைய புலிபோல வீரம் கொண்டவனை போர்க்களத்தில் தான் காணமுடியும் என்றாள்.

PHOTO 2021 02 18 12 27 36 1 வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்...

“வீரப்போர் செய்து பெறும் புண் விழுப்புண்” அதாவது முதுகில் பெறும் புண் புறப்புண் எனப்பட்டது. பெருஞ்சேரலாதன் என்ற மன்னன் சோழன் கரிகால் பெருவளத்தானும் வெண்ணிப் பறத்தலை என்ற களத்தில் போரிட்டனர். கரிகாலன் எறிந்த வேல் சேரலாதனின் நெஞ்சைத் துளைத்து முனை, முதுகின் வழி ஊடுருவி விட்டது. மார்பின் வழியாக பெற்ற புண்தான். ஆனாலும் முதுகிலே புண்பட்டு விட்டதே. இது இழிவு என்று கருதி அந்த வீரன் உண்ணா நோன்பிருந்து (வடக்கிருத்தல் என்று பெயர்) உயிர் விட்டான். வெற்றி பெற்ற வீரத்தைக் காட்டிலும் மார்பின் வழியாக பட்டாலும் அது புறப்புண் தான் என்று உயிர்விட்ட பெருஞ்சேரலாதனின் வீரமே பெருவீரமாகும்.

இந்த சமூகம் பண்பட வேண்டும் என்றால், நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதை தமிழ் இனம் இவ்வுலகத்திற்கு கற்றுக் கொடுத்திருக்கின்றது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டையும் வீரத்தையும் கட்டிக்காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். கொடுப்பதிலும், பெறுவதிலும் மட்டும் பண்பாட்டைக் காட்டவில்லை. வீரத்திலும், பண்பாடடை விதைத்து சென்றவன் தமிழன். இதற்கு புறநானூற்று நூலிலே இதற்கு சாட்சிகள் உள்ளது.

நம் முன்னோர்களின் பேர்க் குணத்தையும், வீரத்தையும் புறநானூற்றில் காண்கிறோம். “என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில் இருப்பான்” என்று மொழியும் தாயின் சொற்களில் கொப்பளிக்கும் வீரம் எவ்வளவு சூடு மிகுந்தது. புறநானூற்றிலிருந்து நாம் எடுத்துப் பேண வேண்டியது இந்த வீரத்தைத் தான்.

உ.டனன்சியா,

முகாமைத்துவபீடம்,

யாழ். பல்கலைக்கழகம்