விருத்தி செய்யப்பட வேண்டிய சமூகநலன் வசதிகள் – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் தேசிய வருமானத்தில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி தேசத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.எனினும் இவர்களின் நலனோம்பு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது கம்பனியினரோ எந்தளவு கரிசனையுடன் செயற்படுகின்றார்கள் என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாக உள்ளது.

தொடர்ச்சியாகவே அம்மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இம்மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும் அவர்களுக்கான நலன்புரி விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு  தொழில் அமைச்சின் ஒப்புதல்  கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

Nirmala 2 விருத்தி செய்யப்பட வேண்டிய சமூகநலன் வசதிகள் - துரைசாமி நடராஜாஇது ஒரு சிறப்பம்சமாகும் என்பதோடு இதன் சாதக விளைவுகளை தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள பேதங்களை மறந்து சகலரும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

19 ம் நூற்றாண்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு மலைப்பாங்கான இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். ஆரம்பகாலத்தில் இம்மக்கள் பல்வேறு தரப்பினராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக இருந்ததோடு இம்சைகளுக்கும் உள்ளாகினர். மேலும் கூலிகள், கள்ளத்தோணிகள்,வடக்கத்தையார், தோட்டக்காட்டார், இந்தியக்காரர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டுமுள்ளனர்.எனினும் சமகாலத்தில் நிலைமைகள் மிகவும் வேகமாக மாறிக்கொண்டு வருகின்றன.

தமிழ்த் தொழிலாளர்களின் துயரங்களும், இன்னல்களும் சுரண்டல் கொடுமைகளும் துயரங்களாகிக் கொண்டிருக்கின்றபோதிலும் கூட, தோட்டத்தொழிலாளர் மத்தியில் நாம் இதுவரை கண்டிராத அளவிற்கு விழிப்பும், எழுச்சியும், உரிமை வேட்கையும் முன்னேற்றமும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கதென்று கலாநிதி க.அருணாசலம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளமை நோக்கத்தக்கதாகும்.இதுவொரு வரவேற்கத்தக்க விடயமாகும் என்பதனை மறுப்பதற்கில்லை.

பெருந்தோட்ட தொழிலாளர் இந்நாட்டில் குடியேற்றப்பட்ட ஆரம்ப காலங்களில் அவர்களுக்கான நலனோம்பு திட்டங்களில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.அவர்களின் உழைப்பை உறிஞ்சுவதை மட்டுமே குறியாகக் கொண்டிருந்த நிர்வாகத்தினர் பல்வேறு உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கும் காரணகர்த்தாவாக இருந்தனர்.உழைப்பு என்ற ஒன்றைத்தவிர வேறெதுவும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படவில்லை. இதேவேளை ‘ தோட்ட மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு முற்றுமுழுதாக தோட்ட முறைமையிலேயே தங்கி இருக்கும் நிலை அங்கு காணப்படுகின்றது.

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தோட்ட எல்லைக்குள்ளேயே தனியொரு அமைப்பின் கீழ் வழங்கப்படுவதால் இவை சுயதேவைகளை பூர்த்தி செய்யும் அலகுகளாக விளங்குகின்றன.இதன் காரணமாக அவற்றை பூரணத்துவ தன்மை கொண்ட அமைப்புக்களென்று கருதுவது பொருத்தமானதேயாகும்.

வாழ்க்கையின் வேறுபட்ட மூன்று கூறுகளாகிய தொழில், வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு என்பவற்றுக்கு இடையிலான தடைகள் இங்கு உடைத்தெறியப்படுகின்றன.இதனால் இவை முற்றிலும் பூரணத்துவம் வாய்ந்தனவாக இல்லாதபோதும் அவ்வாறு கருதுவது ஏற்கக்கூடியதே ‘ என்று ஹொல்லப் என்ற அறிஞர் தெரிவிக்கின்றார்.

தொழிற்சட்டங்கள்

Nirmala 3 விருத்தி செய்யப்பட வேண்டிய சமூகநலன் வசதிகள் - துரைசாமி நடராஜாதோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி சுகாதார வசதிகள்,பிரசவ விடுதி,வீட்டுவசதி என்பன செய்துகொடுக்கப்பட்ட நிலையில் இவ்வசதிகள் குறைந்தமட்டத்திலேயே காணப்பட்டன.இதனால் போஷாக்கின்மை மற்றும் பல நோய் நொடிகளுக்கும் தொழிலாளர்கள் உள்ளானார்கள்.சிசு மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களும் போஷாக்கின்மை தொடர்பில் அதிகரித்த பாதிப்பினை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையிலேயே தொழிலாளர்களின் நலன்பேணும் பல சேவைகளையும் உறுதிப்படுத்துவதற்கு சட்டங்கள் பலவும் உருவாக்கப்பட்டன.

தொழிற்சட்டங்களும் இதில் உள்ளடங்கும்.இந்த வகையில் முதலாவது கட்டளைச் சட்டமாக 1841 ம் ஆண்டு 5 ஆம் இலக்கம் கொண்ட  ‘கூலி மற்றும் சேவைகள் ஒப்பந்த கட்டளைச் ‘சட்டமானது விளங்குகின்றது.இக்கட்டளைச் சட்டத்தின் கீழ் கண்காணிமார்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை வழங்கும் முகவர்கள் மூலமாக வெள்ளை இன தோட்ட உரிமையாளர்களுக்கு அல்லது துரைமார்களுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வரக்கூடியதாக இருந்தது.1958 ம் ஆண்டின் 15 ம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம், 1980 ம் ஆண்டின் 46 ம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் என்பனவும் தொழிற்சட்டங்களில் குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின்றன.

1865 ம் ஆண்டு சேவை ஒப்பந்த சட்டம் முக்கியத்துவம் மிக்கதாகும். வைத்தியசாலைகளில் இறப்போரின் வீதம் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட சமூகத்தினரிடையே அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில் சுகவீனமுற்றுள்ள காலப்பகுதியில் அவர்களுக்கு இருப்பிட வசதி,உணவு,வைத்திய வசதி போன்ற குறைந்தபட்ச வசதிகள் செய்து கொடுக்கப்படுவதை இச்சட்டம் வலியுறுத்தியது.1984 ம் ஆண்டு 14 ம் இலக்கச் சட்டம் தொழிலாளர்களின் சமூக நலனிற்கு தொழில் வழங்குநரே பொறுப்பு என்பதனை வலியுறுத்தியது.தொழிலாளருக்கான மருத்துவ நலன் திட்டங்களை நிதிப்படுத்துவதற்கும் முகாமை செய்வதற்கும் அரசாங்கமே பொறுப்பென தோட்டக் கம்பனிகள் வாதிட்டு வந்த நிலையில் 1880 ம் ஆண்டு  17 ம் இலக்க மருத்துவ தேவைகள் சட்டத்தின் கீழ் அரசாங்மே இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.1912 ம் ஆண்டு 9 ம் 10 ம் இலக்க மருத்துவ உதவிச் சட்டங்கள் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில்  முக்கியத்துவம் வாய்ந்த உதவிச்சட்டங்களாக விளங்குகின்றன.

இச்சட்டம் முதன் முறையாக ஒரு வயதிற்குக் குறைந்த பிள்ளைகளின் முறையான பராமரிப்பு, போஷாக்கு என்பவற்றிற்கு தோட்ட முகாமையாளரே பொறுப்பு என விதித்தது.மேலும் தோட்டங்களில் காணப்படும் சுகாதார வசதிகளையும் தோட்ட மக்களுக்கான சமூகநலன் வசதிகளையும் அரசாங்க மாவட்ட வைத்திய அதிகாரிகள் மேற்பார்வை செய்வதற்கும் இச்சட்டம் வழிவகுத்தது.அத்தோடு தோட்டங்களில் மலசல கூடங்களை அமைப்பதற்கும், வடிகாலமைப்புக்களை திருத்துவதற்குமான சட்டவிதிகளை உருவாக்குவதற்கும் இது அனுமதியளித்தது.

Malayakam 1 விருத்தி செய்யப்பட வேண்டிய சமூகநலன் வசதிகள் - துரைசாமி நடராஜா1907 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 8 ம் இலக்க ஆரம்ப கல்விச் சட்டம் தினமும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வி புகட்டுவதை கட்டாயமாக்கியது.இதேவேளை 1920 ம் ஆண்டு கல்விச் சட்டம் தோட்டங்களில் ஆரம்பப் பள்ளிகள் நடத்தப்படுவதை கட்டாயமாக்கி இருந்தது.1941 ம் ஆண்டு பிரசவ நன்மைகள் சட்டம் கொண்டு வரப்பட்டது.இதனால் சாதக விளைவுகளை ஓரளவு  தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்தது.

1969 இல் தேசிய மரண விகிதம் 1000 இற்கு 8 ஆகவிருந்த நிலையில் பெருந்தோட்டத்தில் இது 12 ஆகக் காணப்பட்டது.1982 இல் நுவரெலியா மாவட்டத்தில் பிரசவ மரண விகிதம் 1000 இற்கு 1.8 வீதமாக இருந்தது.1985 ம் ஆண்டின் பிரசவ சலுகைகள் திருத்தச் சட்டம் பிரசவ சகாயங்கள் பலவற்றையும் பெற்றுக் கொடுத்தது.இச்சட்டம் பிரசவ காலத்தில் ஊதியத்துடன் கூடிய 12 வாரகால விடுமுறைக்கு வித்திட்டதோடு, கர்ப்பமுற்ற ஆறாம் மாதத்திலிருந்து அதிக உயரமற்ற இடங்களில் வேலை கோரும் உரிமையை கர்ப்பிணிகளுக்கும், குழந்தை காப்பகங்களின் அருகே வேலை கோரும் உரிமையை பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஏட்டுச் சுரைக்காய்

தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் நலன்புரி விடயங்கள் என்பவற்றை பாதுகாக்கும் நோக்கில் சட்டங்கள் பல காணப்பட்டபோதும் பல சந்தர்ப்பங்களில் இச்சட்டங்களின் செயலிழந்த போக்கினையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.ஏட்டுச் சுரைக்காயாக இச்சட்டங்கள் முடக்கம் பெற்றுள்ள நிலையில் தொழிலாளர்கள் மழுங்கடிப்பிற்கு உள்ளாகின்றனர்.கம்பனிகள் தோட்டங்களை பொறுப்பேற்றதன் பின்னர் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மற்றும் நலன்புரி விடயங்களில் கம்பனிகள் கரிசனை காட்டுவதில்லை என்ற மிகப்பெரும் குற்றச்சாட்டும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும் அவர்களுக்கான நலன்புரி விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.இந்த யோசனைக்கு தொழில் அமைச்சின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

இதற்கமைய இது தொடர்பான சட்ட மூலத்தை  பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதற்கு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் இணக்கம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.இதேவேளை தொழில் சட்டத்துக்கு புறம்பாக மேலதிக சட்டமாகவே இச்சட்டம் அமுலுக்கு வருமென்றும் இது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகும் என்றும் இ.தொ.கா.வின் உபதலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்திருக்கின்றார். மேலும் கடந்த காலத்தில் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே நலன்புரி விடயங்கள் பாதுகாக்கப்பட்டன.எனினும் நலன்புரி விடயங்கள் முழுமையாக தொழிலாளர்களை சென்றடையவில்லை.

இந்நிலையில் தற்போது புதிய சட்டத்தின் ஊடாக தொழில் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களைப் பாதுகாக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் பாரத் தெரிவித்துள்ளார்.சட்டங்கள் இயற்றப்படுவது சிறப்பாகும் அதேவேளை அவற்றை உரியவாறு நடைமுறைபடுத்தவும் சகலரும் அழுத்தம் கொடுப்பது அவசியமாகும்.

இந்நிலையில்  ‘தோட்டங்களில் உள்ள லயன் தொடர் அறைகளில் அல்லது வீடுகளில் குடியிருப்பதன் காரணமாகவே சமூகநலன் வசதிகளை ஏற்படுத்துவதில் பிரச்சினைகள் தோன்றுகின்றன.இவ்வீடுகள் குடியிருப்போருக்கே உரிமையாக்கப்பட்டு தோட்டக் குடியிருப்புகளும் கிராமக் குடியிருப்புக்களாக மாற்றம் பெறுமிடத்து, நாட்டின் ஏனைய துறைகளைப் போன்று இங்கும் சமூகநலன் வசதிகளை வழங்குவது சாத்தியமாகும்.

அத்துடன் இம்மக்களை இலகுவாக தேசிய நீரோட்டத்திற்குள் இணைக்கக் கூடியதாகவும் இருக்கும்.தோட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த சமூகநலன் வசதிகளை ஏற்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான வழியுமாகும்’ என்று பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்