வியட்நாமிலிருந்து 23 இலங்கையர்கள் நாடு கடத்தல்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள் வியட்நாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

303 இலங்கையர்களுடன் வியட்நாம் கொடியுடன் சென்ற மீன்பிடிப்படகொன்று கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் விபத்திற்குள்ளானது. இது குறித்து இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட குறித்த இலங்கையர்கள் , வியட்நாமில் அகதிகளாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 151 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர். எஞ்சிய 23 பேரும் கடந்த புதன்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 19 – 50 வயதுக்கு இடைப்பட்ட 6 பெண்களும் , 15 ஆண்களும், 18 வயதுக்கு குறைவான இருவரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் , வவுனியா, கிளிசொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் குடிவரவு – குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.