விடிவைத்தேடி தொடரும் வாழ்க்கைப் போராட்டம்- கோ. ரூபகாந்

102
126 Views

தாயகத்தில் யுத்தம் ஓய்ந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும், யுத்தத்தின் வடுக்கள் ஆறாத வடுக்களாகவே உள்ளன. மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்களென அரச வீடுகள் அமைத்துக் கொடுப்பதும், வீதிகள் செப்பனிடுவதுமென மேலோட்டமாக பார்க்கும்போது தாயக உறவுகள் செல்வச் செழிப்புடனேயே வாழ்ந்து வருவதாகவே தெரியும். 

ஆனால் அவர்களின் வீட்டின் அடுப்பங்கரையை சென்று பாருங்கள், அப்போது தெரியும் அவர்கள் உண்மைநிலை; உணவு சமைத்து எத்தனை நாட்களாகி விட்டன என்று.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களும், யுத்தத்தில் அவயவங்களை பறிகொடுத்த நிலையில் வாழும் ஆண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுமே அதிகம் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் தமது அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக தினமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தத்தின் பின், வடபுலத்திலும், கிழக்குப் பகுதியிலும் தென்னிலங்கையரின் ஆதிக்கம் அதிகளவில் செல்வாக்குச் செலுத்துவதால், இவர்களின் தொழில் வாய்ப்புக்கள் குறைந்து, வாழ்க்கைச் செலவை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலையே தாயகத்தில் அரங்கேறுகின்றது.
விவசாயம், மீன்பிடி, வியாபாரம், வீதி செப்பனிடுதல், கூரைவேலை, அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் சிங்களவரை அதிகம் உள்வாங்குதல், உயர் பதவிகளை வகிப்பவர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள் என தென்னிலங்கை சிங்களவரின் ஆதிக்கம் தாயகத்தில் அதிகம் செல்வாக்குச்  செலுத்துகின்றது.

வேலை வாய்ப்புக்களைப் பெறுத்தவரை, கூலிவேலை முதல், அபிவிருத்தி வேலைகளுக்கெல்லாம் சிங்களவருக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதால், தாயகத்தில் யுத்த வலிகளை அனுபவித்த, வாழ்வாதாரத்தை தேடத் தவிக்கும் உறவுகளுக்கு தொழில் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

பொன்விளையும் தாயகமண்ணில் விவசாயிகள் வெய்யில், மழை என்று பாராமல் மரக்கறி வகைகள், நெல், தானியங்கள், பழவகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றனர்.  உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தைக்குச் சென்றால், அங்கும் சிங்களவரின் ஆதிக்கம். விளைவிப்பவன் பொருட்களின் விலையை தீர்மானிக்க முடியாது. கடினமாக உழைத்த தமிழனின் விளைபொருட்களின் விலைகளை தீர்மானிப்பவன் சிங்களவன், கடின உழைப்புக்கு ஏற்ற விலை தாயக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

அதே போன்று காற்று, மழை, வெய்யில் என்று எவற்றையும் பொருட்படுத்தாமல் பாரிய அலைகளைத் தாண்டி கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் சந்தை வாய்ப்பையும் சிங்கவன்தான் தீர்மானிக்கின்றான். அத்துடன் நின்றுவிடாது, தமிழர் தாயகத்தில் குறிப்பாக முல்லைத்தீவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டன்கேணி, புல்மோட்டை, திருகோணமலை கரையேரங்களில் தமிழருக்குச் சொந்தமான கடற்கரையில் சிங்களவர்கள் சட்டவிரோதமான முறையில் வலைகளையும், இழுவைப் படகுகளையும் பயன்படுத்தி அதிகளவில் மீன்பிடித்து வருகின்றனர். அதனால் தமிழர்களின் கடல்வளம் சூறையாடப்படுகின்றது.

வீதி ஒப்பந்தம் முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டட ஒப்பந்ததாரர் வரை சிங்களவருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. கூலிவேலைக்குகூட தென்னிலங்கையிலிருந்து சிங்களவர் வரவழைக்கப்பட்டு, வேலைகளைச் செய்கின்றார்கள். அந் நிலையில் கால், கை, அவயவங்களை இழந்த தாயக உறவுகளால் எவ்வாறு வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்..? கணவனை இழந்த பெண்களால் எவ்வாறு சமூகத்தில் வாழமுடியும்..?
நாட்டில் நல்லாட்சி என்று மேடை போட்டு கத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்சரி, கடந்தகால வடமாகாண அமைச்சர்களும் சரி தமது சுய அரசியல் இலாபத்துக்காக, காணாமல்போன உறவுகள், தமிழீழம், தமிழ்த்தேசியம், நல்லிணக்கம், சர்வதேச விசாரணை என உணர்வுபூர்வமாக ஆசை வார்த்தைகள் பேசுகின்றார்களே தவிர தாயக மக்களின் வாழ்வாதாரம் பற்றி அக்கறை செலுத்துபவர்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்பவர்களே தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தமது குடும்பச் செலவை ஈடுசெய்ய போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அன்றாடம் கூலிக்கு வேலைசெய்து அரைவயிற்றுக் கஞ்சிக்காக போராடும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் நிலையை நீங்களே ஊகித்து பார்க்க முடியும்.

இந்த நிலையில், தமிழ் மண்ணுக்காக தமது கணவர்களைப் பறிகொடுத்த பெண்களையும், விசேட தேவைக்குட்பட்ட ஆண்களையும் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களில் தங்கி வாழும்  சிறுவர்களின் வயிற்றுப் பசியை யார் தீர்த்து வைக்கப் போகிறார்கள்..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here