விக்கிவந்தால் கூட்டமைப்பு பலமாக திகழும்!! செல்வம் எம்பி!!

கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணைய தயார் என்று முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து என்னை பொறுத்த வரை நல்லவிடயமாக படுகிறது. அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு திகழும். என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற டெலோவின் தலைமை குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி எமது கட்சியின் 50 வது ஆண்டு விழாவை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அன்றயதினம் கட்சியின் செயலாளர் நாயகத்தை தெரிவிசெய்யும் முடிவையும் பாராளுமன்ற தேர்தலிற்கான தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளர்கள் யார் என்பதையும் நாம் தெரிவிக்க இருக்கிறோம்.
எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை நாம் மீள அழைக்கப்போவதில்லை. அவர்களிற்கு எமது கட்சியில் இடமில்லை.

கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணைய தயார் என்று முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து என்னை பொறுத்த வரை நல்லவிடயமாக படுகிறது. இதனை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் பேசி அப்பிடி ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை செய்யலாமே தவிர இது ஒரு சாத்தியமான விடயம் என நான் கூறமுடியாது.நாம் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் வடகிழக்கிலே அதிக ஆசனங்களை பெற்று எமது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆணையை வலுவாக பெற்றிருக்கமுடியும். எனவே அவரும் வெறும் பேச்சிலே கருத்துக்களை சொல்லக்கூடாது.

ஆனால் எமது மக்களின் இனப்பிரச்சனை தீர்கப்படவேண்டும் என்று வாயளவிலே சொல்லுகின்ற யாருமே எமது மக்களின் பிரச்சினையை தீர்க்கமுடியாது. ஆகவே உளரீதியாக சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் இந்த விடயத்திலே ஒற்றுமை கொள்ளகூடிய வாய்ப்பை உருவாக்கவேண்டும். அவருடை கூற்றினை நாம் சிந்திக்கவேண்டும். அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு திகழும். அந்த முயற்சியை டெலொ செய்யும்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையில் கூட சிங்கள மக்களின் ஜனாதிபதியாக தான் அவர் தனது கருத்துக்களை சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை. எனவே நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இப்படியான விடயங்களை கண்டிக்க வேண்டும். தமிழ் முஸ்லீம் மலையக மக்களை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அழுத்த்தை அவர்களிற்கு கொடுக்கவேண்டும். அடம்பிடிப்பது விடாப்பிடியாக செயற்படுவது அவர்களிற்கு நட்டத்தையே கொடுக்கும். எனவே ஜநா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் வரவிருக்கும் ஜநா அமர்வில் கூட்டமைப்பு சார்பாக களம் இறங்க தாயாராக இருக்குறோம்.என்றார்.