ஜனாதிபதி தேர்தல் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தமது எதிர்கால கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றனர்.இந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ச மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகியோர் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.இதில் நாட்டின் அபிவிருத்தி குறித்த எதிர்கால திட்டங்கள், பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், தொழில்வாய்ப்பு உருவாக்கம், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.அத்தோடு மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் வாழ்வில் நலன்களை ஏற்படுத்துவது தொடர்பிலும் பல விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.இதற்கேற்ப நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தேர்தல் முதன் முதலாக 1982 இல் இடம்பெற்றது.இத்தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்தன 52.91 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.இதனைத் தொடர்ந்து 1988 இல் ரணசிங்க பிரேமதாசா 50.43, 1994 இல் சந்திரிகா குமாரதுங்க 62.28, 1999 இல் சந்திரிகா குமாரதுங்க 51.12, 2005 இல் மஹிந்த ராஜபக்ச 50.29, 2010 இல் மஹிந்த ராஜபக்ச 57.88, 2015 இல் மைத்திரிபால சிறிசேன 50.29, 2019 இல் கோட்டபாய ராஜபக்ச 52.25 வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தனர்.இந்த வகையில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 21 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் 39 வேட்பாளர்கள் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.இதுகாலவரை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இத்துணை அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்பதும் தெரிந்ததாகும்.2019 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிட்டனர்.இம்முறை ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச,அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ச, சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ச, உள்ளிட்ட பலரும் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில் இத்தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகின்றது.இதேவேளை இம்முறை தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வாழ்வாதார மேம்பாடு
தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தமது எதிர்கால முன்னெடுப்புக்களை வலியுறுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவது வழக்கமாகும்.இதனடிப்படையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களது எதிர்கால முன்னெடுப்புக்களை மையப்படுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுள்ளனர்.இவற்றுள் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் வேட்பாளர் பா.அரியநேந்திரன் ஆகியோர் மலையக மக்கள் தொடர்பாக எத்தகைய வாக்குறுதிகளை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளனர் என்பது குறித்து நோக்குவோம்.
பெருந்தோட்ட மக்களுக்கு லயன் அறை வாழ்க்கைக்கு பதிலாக சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்காக , அவர்களுக்கு வீட்டு உரிமைகள் மற்றும் சுதந்திரமான காணி உரிமைகள் வழங்கப்படும்.அதற்கமைய தோட்டத்துக்குப் பதிலாக கிராமங்களாக மாற்றப்படும்.இதற்கான வேலைத்திட்டங்கள் 2025 ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல தனித்துவமான நடவடிக்கைகளைகளை மேற்கொள்ளுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்டத்துறையில் புரட்சிக்க மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக முன்னதாக வலியுறுத்தி இருந்தார்.அத்தோடு மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும் மலையக மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய 10 பேர்ச் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மலையக மக்கள் தமது காணிகளில் தேயிலையை பயிரிட்டு, அவற்றை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கக்கூடிய வகையில் பெருந்தோட்டத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இதற்கு பெருந்தோட்டக் கம்பெனிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் கேட்டுக் கொண்டிருந்தார்.
சகலருக்கும் வெற்றி
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ‘ சகலருக்கும் வெற்றி ‘ என்ற தொனிப்பொருளில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளார்.வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், அனைத்து பிரஜைகளையும் வலுப்படுத்துதல், அரச துறையை மேம்படுத்தல், வாழ்க்கைத் தரத்தை பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பிரதான விடயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.அத்தோடு மலையக மக்கள் தொடர்பிலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்கள் காணப்படுகின்றன.இரண்டு நூற்றாண்டுகளாக மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வழங்கிய பெரும் பங்களிப்பை தாம் அங்கீகரிப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும் அவர்கள் அனுபவித்த கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பை கருத்தில் கொண்டு, இச்சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்த நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்ட தேசிய பாடசாலைகளை நிறுவுவது உட்பட இலக்கு நோக்கிய திட்டங்கள் மூலம் அனைத்து நிலைகளிலும் மலையக மாணவர்களின் கல்விச் சாதனைகளை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தோட்டத் தொழிலாளர்களை காணிக்குச் சொந்தமான சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான அரசாங்கக் கொள்கையை அறிமுகப்படுத்தி அமுல் படுத்துதல், இந்த இடம்பெயர் காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு முறையான சம்பளத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் உள்ளீர்க்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் 48 அம்ச நிபந்தனைகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்திருந்தது.7 அத்தியாயங்களைக் கொண்டு 48 அம்சங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணி தமது ஆதரவை பகிரங்கமாக அறிவித்திருந்தது.இளைய சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பு, காணி மற்றும் வீட்டுரிமை, பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி, மலையக மக்களை தேசிய நீரோட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல விடயங்கள் கூட்டணியின் 48 அம்ச கோரிக்கைகளில் உள்ளீர்க்கப்பட்டிருந்தன.
இதேவேளை தற்போது கிடைக்கப்பெறும் சம்பளத்தை விட கூடுதலான ஒரு தொகையினை தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள முடியுமான ஒரு முறைமையின் ஊடாக அவர்களின் நாளாந்த வருமானத்தை உயர்வடையச் செய்வதோடு, மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியுமான கால்நடை வளர்ப்பு மற்றும் மாற்றுப் பயிர்ச்செய்கைகள் போன்ற புதிய துறைகள் மீது தோட்டத் தொழிலாளர்கள் நாட்டம் கொள்ளக்கூடிய வகையில் கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.பெருந்தோட்டக் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும்.புதிதாக பத்து தேசிய பாடசாலைகளும் பல்கலைக்கழகம் ஒன்றும் நிறுவப்படும்.பெருந்தோட்ட பாடசாலைக் கல்வியில் நிலவும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டின் ஏனைய பாடசாலைகளின் தரங்களை ஒத்த வகையில் அபிவிருத்தி செய்யப்படும்.பெருந்தோட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு பிரதான நீரோட்டத்தில் காணப்படும் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு விரிவு படுத்தப்படும் என்று சஜித் பிரேமதாசா ‘ஒன்றாய் முன்னோக்கி’ என்ற தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னதாக 2019 இல் தெரிவித்திருந்தமையும் நோக்கத்தக்கதாகும்.
மலையக பல்கலைக்கழகம்
இதேவேளை பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணியை உடனடியாக நிறுவுதல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களை உள்ளடக்கியதாக மலையகத்தில் 10 தேசிய பாடசாலைகளை கணித விஞ்ஞான உயர்தர பிரிவுகளுடன் கூடியதாக நிறுவுவதற்கும் நுவரெலியா மாவட்டத்தில் மலையக பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுத்தல்.இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களை உறுதிசெய்யும் வகையில் மலையகத்தில் கைத்தொழில் வலயங்களையும் அதனோடு இணைந்த தொழில் பயிற்சி நிலையங்களையும் அமைத்தல்.பெருந்தோட்டத்துறை நிறுவன மேற்பார்வையாளர்களின் கீழ்வரும் பெருந்தோட்ட சமூக விவகாரங்களை, அரச பொது நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்குள்ள தடைகளை அகற்றி புதிய எல்லை மீள்நிர்ணயத்துடன் மேலதிக பிரதேச செயலகங்கள், மேலதிக கிராம சேவகர் பிரிவுகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் போன்றவற்றை நாட்டின் ஏனைய பகுதிகளில் இருப்பதைப் போன்று நிறுவுதல்.பெருந்தோட்ட சமூகத்தை வலுப்படுத்தும் சிறப்பு அபிவிருத்தி நடவடிக்கையாக (Affirmative Action) நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல்.இதனூடாக மலையக சமூகம் அரச தொழில் வாய்ப்புகள் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்களில் மலையகத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் குறித்தும் 2019 ம் ஆண்டு புதிய ஜனநாயக முன்னணி கவனம் செலுத்தி இருந்தது.
இதேவேளை ‘வளமான நாடு அழகான வாழ்க்கை ‘ என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட மேலும் பல விடயங்களை தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வலியுறுத்துகின்றது.சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டுக்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக்கூடிய வகையிலும் உள்ளூராட்சி, மாவட்ட, மாகாணங்களுக்கும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் அரசாளுகைக்கான அனைத்து இனத்தவர்களினதும் அரசியல் பங்காண்மையை உறுதி செய்கின்ற வகையிலுமாக இத்திட்டம். முன்னெடுக்கபபடும் என்று பல விடயங்களையும் இக்கொள்கைப் பிரகடனம் வலியுறுத்துகின்றது.அத்தோடு 2023.10.15 ம் திகதி தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும், உரிமைகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், மலையக தமிழ் சமுதாயத்தின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவகையில்* அதிகரித்தல், மக்கள் கௌரவமான வருமானத்தை பெறுவதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் மலையக மக்களின் நலன் கருதி தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
தோளோடு தோள் நிற்றல்
இதேவேளை தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், புதிய அரசியலமைப்பு தமிழர்களை சுயநிர்ணய உரிமையுடைய தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு நீதிப்பொறிமுறை ஊடாக விசாரணை அவசியம் போன்ற பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.மேலும் மலையக மக்கள் குறித்து கூறுகையில், மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை அங்கீகரிக்கின்றோம்.அதன்படி அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.அத்தோடு அவர்களது உடனடிப் பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாக கோரி வரும் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.அதனை முன்னிறுத்தி போராட்டத்தில் நாம் மலையக மக்களுடன் தோளோடு தோள் நிற்போம் என்றும் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கட்டமைப்பின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளமையும் தெரிந்ததேயாகும்.
இவ்வாறாக வேட்பாளர்கள் தமது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ள நிலையில் மலையக மக்களின் காணியுரிமை, வீட்டுரிமை, ஊதியம், சிறுதோட்ட உரிமையாளர்களாக இம்மக்களை மாற்றியமைத்தல், தோட்டங்களை கிராமங்களாக மாற்றுதல், மாற்றுத்தொழில் ஏற்பாடுகள்,சுகாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தேசிய பாடசாலைகளின் உருவாக்கம் என்று பலதரப்பட்ட விடயங்களும் இதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.இவ்வாறாக கடந்த காலங்களிலும் பல வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டு அவை புஷ்வாணமாகிய நிலைமைகளே அதிகமாகும்.இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.இந்நிலையில் வெற்றி பெறும் வேட்பாளர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை உரியவாறு நிறைவேற்றுவதோடு, ஏனைய வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள மலையக மக்கள் குறித்த முக்கிய விடயங்களையும் நிறைவேற்ற முனைவது மிகவும் அவசியமாகும்.