வாக்களிப்பின் போது ஏற்பட்ட வன்முறைகள்; குறிவைக்கப்பட்ட தமிழர்கள்

426 Views

இன்று நாட்டின் எட்டாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி
தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை இன்று மதியம் வரை இடம்பெற்ற
வன்முறைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தமிழர்களைக்
குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மதியம்
1மணிவரை 139 வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் மட்டும் 22 வன்முறைகள் பதிவாகியுள்ளன.
காலை 11.45 மணியளவில் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிக்கச் சென்ற
மக்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வீதிக்குக் குறுக்கே மரங்களைப் போட்டு
வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. சாரதியின்
சாதுரியத்தால் மக்கள் காப்பாற்றப்பட்டனர். குறித்த சம்பவம் மன்னார் தந்திரிமலை
என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது.

இதற்கமைவாக கேகாலை தெரணியாகலவில் வாக்களிக்கச் சென்ற தமிழர்கள்
சிலர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியதுடன், குறிப்பிட்ட ஒருவருக்கே
வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்தியுள்ளனர். இதைத் தவிர்த்து தமக்கு விரும்பிய
வேட்பாளருக்கு வாக்களித்த மலையக தமிழர்கள் தமிழர்கள் மீதே தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே பகுதியில் வீடு ஒன்றிற்குள் நுழைந்த சிலர் வீட்டிலிருந்தவர்கள் மீது
தாக்குதல் நடத்தியதுடன், ஆண் ஒருவரை கத்தியால் வெட்டியும் உள்ளனர். வெட்டுக்
காயங்களுக்கு உள்ளானவர் தெரணியகல வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடு சேதமானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வாக்களிப்பு நிலையங்களுக்கும், மக்கள் குடியிருப்பிற்கும் பொலிஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பதுளை-அப்புத்தளை பகுதியிலும் வன்முறை ஒன்று பதிவாகியுள்ளது.
அரசியல்வாதிகள் சிலர் எதிர்த் தரப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன்,
பெண்ணொருவர் வெட்டி தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பெண்
பொரலந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply