வாகரையில் 50 திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட கொடிய நாள்

நவம்பர் 8 – 2006  அன்று  மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 50 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் உள்நாட்டு போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாக தங்கியிருந்த பாடசாலைகளின் மீது இலங்கை இராணுவம் நடத்திய மிகமோசமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் நிகழ்வே வாகரை குண்டுத்தாக்குதல் ஆகும்.

வாகரையில் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் மக்களுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவு திட்டம் அடங்கலாக பலவித நிவாரண உதவிகள் வழங்கும் வழிகளை இலங்கை அரசு, தடுத்து வந்தது.

மேலும்,வாகரை குண்டுதாக்குதலில் காயமுற்றவர்களை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும் இராணுவம் தடைகள் விதித்தன.

மக்கள் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதால் வேண்டுமென்றே அனைத்து வழிகளிலும் வஞ்சிக்கப்பட்டு வந்தவர்கள் மேல் நடைபெற்ற படுகொலை தாக்குதல் இதுவாகும்.

அன்று அரசு சில பொய்களை சொல்லி இருந்தாலும் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாகவும், தவறுக்கு வருந்துவதாகவும் மேலும் எல்லாவற்றையும் விட நாட்டுப் பாதுகாப்பே முதன்மையானது எனவும் இலங்கை அரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை இந்த இனப்படுகொலையை இலங்கை அரசு திட்டமிட்டே செய்தது என்பதற்கு வலுவான ஆதாரமாகும்.

இந்நிகழ்வின்போது தாக்குதலுக்குள்ளான அகதி முகாமும் மக்களும் மனிதக் கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருந்தது.

இதனை தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றிலுமாக மறுத்து வந்தார்கள்.

இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தொடர்புடைய பாடசாலையிலும் அதனை அண்டியுள்ள பகுதியும் புலிகள் படைத் தளமாக பாவிக்கப்பட்டமைக்கான எந்தவொரு அறிகுறிகளையும் தாம் காணவில்லை என நேரடியாக சென்று பார்த்து தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாகரை நிகழ்வு இலங்கை வாழ் தமிழர் இடையில் அரசின் மீது பரந்த வெறுப்பையும் கோபத்தினையும் மென்மேலும் வளர்த்தது.

. இச்சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் அன்றைய காலத்தில் இலங்கைகான UNICEF தலைமை அலுவலகதின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடாத்திய முண்ணனி தமிழ் பாராளமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மறுநாளே கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிகழ்வு பற்றி குறிப்பிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு. கருணாநிதி, “எவ்வளவு காலம்தான் இந்தியா இலங்கையில் தமிழருக்கு எதிராக இராணுவத்தால் நிகழ்த்தப்படும் வன்கொடுமை கண்ணுறாமல் பொறுமை காப்பது?” என ஊடகங்களிற்கு செய்தி வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தியாவோ வேறு எந்த நாடுகளுமோ இன்று வரை சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்த எந்த ஒரு இடப்படுகொலையையும் கண்டிக்கவோ தடுத்து நிறுத்த எச்சரிக்கவோ இல்லை என்பதே உண்மை. மாறாக முள்ளிவாய்க்கால் படுகொலை போல் பலசமயங்களில் இந்தியாவும் ஆதரவாகவே நின்று இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

ஐக்கிய நாடுகள் அவை குறிப்பிடும்போது இந்நிகழ்வை காட்டமாக கண்டித்ததுடன் தாக்குதல் நடாத்தும்போது மக்கள் தொடர்பில் கரிசனமெடுக்குமாறு அரசை வலியுறுத்தி இருந்தது.

ஆனால் இந்த படுகொலை குறித்து அனைத்துலக மன்னிப்புச் சபை தனது கண்டனத்தைத் தெரிவித்ததுடன் உரிய விசாரணைகளை நடத்தும்படி கேட்டு இருந்தது.

இன்று இந்த படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் கழிந்து விட்டன.

ஆனால் இதை பற்றி விசாரணைகளோ நீதியோ எதுவுமே இந்த உலகிடம் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

கொன்றவர்களும் கூடி நின்றவர்களும் மறந்து போகலாம்.

எங்கள் இனம் தொடர்ச்சியாக படுகொலையாகி அடக்கப்பட்டு வருவதை தமிழ் மக்கள் நாம் எப்படி மறப்போம்?

நீதி கேட்டு போராடும் இனம் போராட்டத்தை வீச்சாகி நீதியை வென்றெடுப்பது ஒன்றே எம் மக்களின் படுகொலைகளுக்கு நீதியை வென்றெடுக்க நாம் ஆற்ற கூடிய கடனாகும்.

இந்த படுகொலை குறித்து ஒரு உறவின் பகிர்வு:

“இதுவும் முள்ளிவாய்க்காலுடன் ஒத்த ஒரு இன அழிப்புத்தான். ஏனெனில் சம்பூர் கட்டை பறிச்சான் முதல் வெருகல் ஆற்றுக்கு மறு பக்கத்திலிருந்த ஈச்சலம் பற்று பூனகர் முதலான பல கிராம மக்களை ஒதுக்கி ஒதுக்கி கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்த இடம் தான் கதிரவெளி முதல் வாகரை கண்டலடி வரை.

அதிலும் வாகரை கண்டலடியில் பயங்கரமான பீரங்கி தாக்குதல் காரணமாக அனேக மக்கள் கதிரவெளி பகுதியிலேயே தஞ்சமடைந்து இருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் தான் அந்த மக்கள் மீது அதுவும் குறிப்பாக கதிரவெளி பாடசாலைக்கு பக்கத்தில் இருந்த இடம்பெயர்ந்தோர் முகாமுக்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பிஞ்சுகளும் பெரியவர்களும் யுவதிகளுமாக 50 க்கும் மேற்பட்ட மக்கள் உடல் சிதறி பலியாகினர்.

பின்பு தொடர்ந்து வந்த நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கதிரவெளி தொடக்கம் கண்டலடி வரை வீதிக்கு வீதி தலையில்லா முண்டங்கள் ஒரு பக்கம் அவர்களின் தலை ஒரு பக்கம் என மிகக் கொடூரம் அரங்கேற்றப்பட்டது.”

இந்த கொடிய இனப்படுகொலை நிகழ்வுக்கு பலியாகி படுகொலையான அப்பாவி தமிழ் பொது மக்களுக்கும் அகவணக்கம்.

நன்றி.!
“செந்தமிழினி”