வவுனியா நகரசபை தலைவர் கைதுக்கு எதிராக மன்னார் நகரசபையில் இன்றைய தினம் 23.06.2021 கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபையின் 40வது அமர்வு இன்றையதினம் தவிசாளர் அன்ரனி டேவிற்சன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடந்த 15.06.2021 அன்று வவுனியா நகரசபை தலைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார் நகரசபை உறுப்பினரான சம்பூர்ணம் இரட்ணசிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கண்டன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது நகர சபை உறுப்பினர் சம்பூர்ணம் இரட்ணசிங்கம் பிரேரனையை முன்வைத்து உரையாற்றுகையில்,
“வவுனியா நகரசபை தலைவரின் கைது நடவடிக்கை என்பது மக்கள் ஆணையை பெற்றவர்களின் அதிகாரத்தை பறிக்கின்ற செயற்பாடு என்பதோடு நகரசபை தலைவரின் வினைத்திறனான செயற்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாத சில அரசியல் சக்திகள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறையினரின் துணையுடன் இவ்வாறு கைது செய்துள்ளார்கள்.
இவ்வாறன கைது நடவடிக்கையை முன்னுதாரணமாக கொண்டு ஆளும் அரசு தங்களுக்கு எதிரான உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முடக்க மேற்கொள்ளும் செயற்பாட்டை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
மக்கள் ஆணை பெற்ற மக்கள் பிரதிநிதியின் அதிகாரத்தையும் அரச ஊழியர்களின் கடமையையும் செய்யவிடாது தடுத்தமை ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தும் விடயமாக உள்ளது” என்றார்.