வல்லைவெளி குண்டு வெடிப்பு; கைதான இளைஞன் தொடர்ந்தும் விசாரணையில்

வல்லைவெளி இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளைமேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நீர்வேலிப் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தற்போதும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.