வல்லாதிக்கப் போட்டியில் சிக்குண்டிருக்கும் சிறிலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சீனாவுக்கு 99 ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கியது தவறானது என தெரிவித்துள்ளார் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா. முன்னைய அரசே இந்த தவறை செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்த தவறவில்லை, ஆனால் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சா அரசே துறைமுக அபிவிருத்தியை சீனாவுக்கு வழங்கியது. ஆனால் சிறீலங்கா அரசால் நிதியை கட்டமுடியாது என்று உணர்ந்த ரணில் அரசு கடன் தொகையின் மீள்செலுத்தும் காலத்தை 99 ஆண்டுகளாக அதிகரித்தது.

அதனுடன் நின்றுவிடாது இந்தியாவை சமானதப்படுத்தி அதன் ஊடாக மேற்குலகத்தின் பார்வையில் இருந்து தப்பிக்கும் முயற்சியையும் கோத்தபாய மேற்கொண்டுள்ளார். அதாவது 2009 ஆம் ஆண்டு போரின் போது இந்தியாவை முன்நிறுத்தி அனைத்துலகத்தின் பார்வையில் இருந்து தப்பித்த உத்தியையே கோத்தபாய தற்போது கையாண்டு வருகின்றார்.

எனவே தான் இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் சிறீலங்கா பயணத்தின் பின்னனியும் கோத்தபாயவின் மூலம் தனது பிராந்திய ஆதிக்கத்தை இந்தியா தக்கவைக்கும் முயற்சியாகும்.Gotabaya Rajapaksa Modi visit Arvind Jain வல்லாதிக்கப் போட்டியில் சிக்குண்டிருக்கும் சிறிலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

கோத்தபயாவுக்கு அழுத்தங்களை கொடுக்கும் கருவியாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்வைப்பதன் மூலம் தனது பிராந்திய ஆதிக்கக் கனவை நிறைவேற்ற இந்தியா முயன்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தமிழகத்தில் ஒலிக்கும் எதிர்ப்பு அலைகளும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் இந்திய மத்திய அரசின் இராஜதந்திரிகளும், தொடர்ந்து அதனை கடைப்பிடிப்பார்களா என்பதை தான் தமிழ் இனம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய நேரம் இது.

உதாரணமாக சிறீலங்காவில் போர் உக்கிரமாக இடம்பெற்ற வேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் அவசரமாக 2008 ஆம் ஆண்டு இணைந்து கொண்ட அமெரிக்கா சிறீலங்காவுக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்து எதிர்காலத்து சிறீலங்கா அரசுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான ஆதாரங்களை திரட்டிய பின்னர் அதில் இருந்து வெளியேறியது போன்றதொரு சூழ்நிலையை தான் தற்போதைய இந்திய அரசியல் கொண்டுவரலாம் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழ் மக்களிடம் உண்டு.

1980 களில் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி அளித்த இந்தியா, பயிற்சியின் பின்னர் போராளிகள் எந்த இலக்குகளை தாக்கப்போகின்றனர் மற்றும் யார் அந்த தாக்குதல்களில் பங்குபற்றப்போகின்றனர் என்ற விபரங்களை தமக்கு தரவேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தபோதே உத்தரப்பிரதேசத்து பயிற்சிக் களத்தில் இருந்து வெளியேறிய விடுதலைப்புலிகளின் அணி தனக்கென ஒரு தனியான பயிற்சித் தளத்தை தமிழகத்தில் அமைத்துக் கொண்டது.Wu Jianghao with Gotabaya Rajapaksa 1 வல்லாதிக்கப் போட்டியில் சிக்குண்டிருக்கும் சிறிலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

அதாவது இந்தியா ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையை தனது பிராந்திய நலன்களை வலுப்படுத்திக் கொள்ளவே இதுவரைகாலமும் பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் மேற்குலகத்தின் கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்ற அஸ்திரம் உள்ளதால் தமிழ் மக்களின் பிரச்சனைக்குள் இந்தியா தன்னை அதிகம் திணிக்க முற்பட்டு நிற்கின்றது.

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு இந்தியா முற்படுகின்றது என்ற தோற்றப்பாடு இருந்தாலும், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு பிராந்திய வல்லரசுகளின் நோக்கமும், பெரியண்ணாவின் (அமெரிக்கா) இந்துசமுத்திரப் பிராந்திய உள்நுளைவைத் தடுப்பது தான்.

எனவே தான கோத்தபாய ராஜபக்சாவுக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் முழங்க செங்கம்பள வரவேற்று அளித்துள்ள இந்தியா 450 மில்லியன் டொலர்ளையும் கடனாக வழங்கியுள்ளது. இந்தியாவால் வழங்கப்பட்ட இந்த நிதி அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் உடன்பாட்டில் சிறீலங்காவுக்கு வழங்கப்பட இருந்த நிதியின் அளவைக் கொண்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அது மட்டுமல்லாது சிறீலங்காவின் அபிவிருத்தியை முழுவதுமாக பொறுப்பேற்கவும் முன்வந்துள்ளது இந்தியா.

கோத்தபாயாவின் அரசியல் வரவு என்பது சிறீலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம்காண வைக்கும் என்பதே சிறீலங்காவின் எதிர்காலம் தொடர்பான பலரது கணிப்பாக இருந்தது.

அதாவது மேற்குலகம் மீண்டும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைகளை நிறுத்தலாம், முதலீடுகளைத் தவிர்க்கலாம். புலம்பெயர் தமிழ் சமூகம் தமது முதலீடுகளைத் தவிர்க்கலாம் என்ற அச்சங்கள் சிங்களவர்கள் மத்தியில் நிலவியபோதும், தமிழ் மக்கள் மீது கொண்ட பகை அவர்களை கோத்தாவின் பக்கம் திருப்பியிருந்தது.

ஆனால் சிங்கள மக்களின் அந்த அச்சத்தை போக்கியுள்ளது இந்தியா. ஆம் தனது பொருளாதாரம் இந்த காலாண்டு பகுதியில் எதிர்பார்த்த 6 விகிதத்தை எட்டாது 4.5 விகிதமாக வீழ்ச்சி கண்டபோதும், தனது 5 பில்லியன் டொலர் இலக்கை கைவிட்டு அதில் ஏறத்தாள 10 விகிதத்தை சிறீலங்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது.US Japan Ambassadors meets President Gotabaya Rajapaksa வல்லாதிக்கப் போட்டியில் சிக்குண்டிருக்கும் சிறிலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சீனாவும் இந்தியாவும் சிறீலங்காவை நெருக்கியுள்ள நிலையில் மேற்குலகத்தின் நிலைப்பாடு என்ன என்பது தான் தற்போதைய கேள்வி?

சிறீலங்காவிற்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான உறவில் உள்ள விரிசலை மேலும் ஆழமாக்கும் நடவடிக்கையாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் நுளைவு அனுமதிப் பிரிவில் கடமையாற்றும் பெண் மீதான கடத்தல் முயற்சி விவகாரம் அமைந்துள்ளது.

சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சா பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவரும் முக்கிய ஆவணங்களை வைத்திருக்கலாம் எனக் கருதப்படுபவருமான சிறீலங்கா குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நிசந்தா சில்வா சுவிற்சலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளது சிறீலங்கா அரசை அச்சமடைய வைத்துள்ளது.

அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அவர் சுவிஸ் தூதரகத்தில் நுளைவு அனுமதியை பெற்று வைத்திருந்தாரா என்பதே சிறீலங்கா அரசின் தற்போதைய கேள்வி. எனவே தான் நுளைவு அனுமதிப் பிரிவில் பணியாற்றும் பெண்ணை கடத்தும் முயற்சிகள் மேற்ககொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் சிறீலங்கா அரசின் இந்த முயற்சிகள் அனைத்துலக மட்டத்தில் குறிப்பாக மேற்குலக இராஜதந்திர மட்டங்களிலும், ஊடகங்களிலும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது ஒருபுறம் இருக்க சிறீலங்காவில் இருந்து வெளியேறும் அதிகாரிகளுக்கு புகலிடத்தஞ்சம் கொடுத்து அவர்களை வரவேற்பதில் ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டுவதும் சிறீலங்காவின் தற்போதைய அரசுக்கு சாதகமானதல்ல.