வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மறவன்புலவு சச்சி? களமிறக்க இந்திய, இலங்கை தரப்புகள் தீவிர முயற்சி

மறவன்புலவு  சச்சிதானந்தன். இவர் இலங்கை சிவசேனை அமைப்பின் தற்போதைய தலைவர். இவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். ஐ.நா.சபையின் ஆலோசகராக பணியாற்றியவர், பன்மொழி புலமை மிக்கவர், விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தவர், இந்திய மத்தியரசுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிப்பவர், சிறந்த புத்திஜீவி, சிரேஷ்டத்தும் என்று அவர் பற்றிய தகவல் பட்டியல் நீள்கின்றது.

இத்தகையவரை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு இலங்கை, இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே இவரை களமிறக்குவதற்கான பூர்வாங்க கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் மேலும் அறிய முடிகின்றது.

2013ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்படுவதிலும் இந்திய, இலங்கை தரப்பினரின் அனுசரணை முழுமையாக காணப்பட்டிருந்தது.

குறிப்பாக மஹிந்த ராஜபக்சவே விக்னேஸ்வரனை முதல் தெரிவாக கூறியதோடு அவர் முதலமைச்சராக வேண்டும் என்பதிலும் விருப்புக் கொண்டிருந்தார்.

அதன் காரணத்தினாலேயே அப்போது பங்காளிக் கட்சிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகியவற்றின் எதிர்ப்புக்களை மீறி சம்பந்தனால் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவ்வாறிருக்கையில் இம்முறை சச்சிதானந்தன் மீது பார்வை திரும்பியிருக்கின்றது. சச்சிதானந்தனைப் பொறுத்தவரையில், அவர் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பார் என்று இந்திய தரப்பு திடமாக நம்புகின்றது. அத்துடன் இந்திய மத்திய அரசின் ‘இந்துத்துவா’ கொள்கையையே கொண்டிருப்பவராக இருப்பது மேலதிக தகமையாக கருதப்படுகிறது

மேலும், வடக்கில் ‘சீன’ பிரவேசத்திற்கு இடமளிக்க மாட்டார் என்றும் கருதுகின்றர். அதேநேரம் கொள்கை, கோட்பாடு, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை விட்டுக் கொடுக்காதவராகவும் இருந்து வருகின்றார். ஆகவே அவ்விதமான ஒருவரே பொருத்தமானவர் என்றும் இந்தியத்தரப்பு கருதுகின்றது.

மறுபக்கத்தில் இலங்கை அரச தரப்பு,  சச்சிதானந்தன் , பௌத்த சிங்களத்தினை எதிர்க்கமாட்டார் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கின்றது. ‘தேரருக்கு தனது வேட்டியை வழங்கியவர்’ என்ற முன்னுதாரணத்தினை தனது நம்பிக்கைக்கு காரணமாக கூறுகின்றது.

இவ்வாறு பல விடயங்கள் இவரை முதலமைச்சர் வேட்பாளர் என்ற ஸ்தானத்தினை நோக்கிய கருத்தாடலுக்கு தள்ளிச் சென்றிருக்கின்றது.

எனினும், விடுதலைப்புலிகளுக்கும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் இடையில் இணைப்பாளராக செயற்பட்டவர், விடுதலைப்புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தவர் போன்ற விடயங்கள் இவர் மீது புலனாய்வுத் துறை ‘கண்’ வைத்திருப்பதற்கு காரணமாகின்றது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில்   குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்கும் ஒருவர்களில் சச்சிதானந்தனும் ஒருவராக இருப்பதோடு, தற்போது வரையில் அவர் தனது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை இலங்கை வருவதற்கு முன்னதாக இந்திய தரப்பிடம் ஒப்படைத்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எது, எவ்வாறாயினும், அண்மைக்காலங்களில் வடக்கு முதல்வர் வேட்பாளர் என்ற பட்டியிலில் சச்சிதானந்தன் இப்போதைக்கு புதுவரவாக இருக்கின்றார்.