வடக்கு மாகாண ஆளுனருக்கு அவசர வேண்டுகோள்!!

வடக்கு மாகணத்தில் உள்ள கிராமப்புற பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் இருந்து உயர் தரம் வரை ஆசிரியர் வளப் பங்கீடு சீராக இல்லாத காரணத்தால் யுத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஏழை பெற்றோர்களினுடைய மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுகொண்டு இருக்கின்றனர்.

வடமாகாணத்தில் இருக்கக்கூடிய சில வலயங்களில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாகவும் சில பாடசாலைகளில் ஐந்து தொடக்கம் பதினைந்து வருடகாலம் ஒரே பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு  இடமாற்றம் வழங்காமல் கிராமபுறத்தில் இருக்க கூடிய பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கே அதிகளவான இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன.கல்வி அனைவருக்கும் சமம் என்று ஏட்டளவில் இருந்தாலும் நகர் புறப்பாடசாலைகளுக்கும் கிராமபுற பாடசாலைகளுக்கும் இடையில் பௌதீகள வளத்திலும்,ஆசிரிய ஆளனி வளத்திலும் மிகமோசமான பாரபட்சம் நிலவுவதாக பாடசாலை அதிபர்களும் பெற்றோர்களும் விசனம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக வவுனிய தெற்கு வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட செட்டிகுளம் கோட்ட பாடசாலைகளில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவிக்கொண்டிருக்கும் நிலையில் பதிலீட்டு ஆசிரியர்களை நியமிக்காமல் வலயக்கல்வி பணிப்பாளரினால் பல இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது இதனால் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் வீண் பொழுதை கழித்து வீடு திரும்ப வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதோடு ஒரு சில வலயக்கல்வி பணிப்பாளர்கள் மாணவர்களின் கல்வியிலும் அக்கறை இன்றி தங்களின் கடமையையும் மறந்து ஏனோதானோ என்று பணம் சம்பாதிப்பதிலும் தங்களுடைய தனிப்பட்ட சுகபோகங்களிலுமே மூழ்கி இருக்கின்றனர்.இவ்வாறன வலயக்கல்வி பணிப்பாளர்கள் சம்பந்தமாக பல ஆதாரபூர்வமான அதிர்ச்சி தகவல்கள் எமது செய்திசேவைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இவர்கள் தங்களது பொறுப்புக்களில் இருந்தும் கடமைகளிலிருந்தும் மீறுவார்களாயின் பெயர் குறிப்பிட்டு எம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வெளிவிடுவோம் என எச்சரிக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தினுடைய ஆளுனர் அவர்களே நீங்கள் இருக்கப்போவது இன்னும் ஒரு சில மாதங்களே ஆதலால் யாழ்பாணத்திற்குள் மட்டும் மூழ்கி இருக்காமல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயங்களிற்கும் பாடசாலைகளிற்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு பாடசாலைகளின் அதிபர்களும்,ஆசிரியர்களும்,மாணவர்களும் பெற்றோர்களும் படும் துன்பத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக கிராமப்புற பாடசாலைகளின் ஆசிரியர் பிரச்சினைகளை தீர்த்து வைத்து விடைபெறுங்கள். அவ்வாறு செய்யாது விட்டால் தமிழ் மாணவர்களுடைய கல்வியானது அதளபாதளத்திற்கு தள்ளப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.