வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுவருவதுடன் புதிய புதிய வீதி சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுவருவதனால் மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பல்வேறு பகுதிகளிலும் வீதி சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு சோதனைகளும் இடம்பெற்றுவந்தன.
எனினும் சில வாரங்களில் அந்த சோதனைச்சாவடிகள் பல மூடப்பட்டு இயல்பு நிலையில் வடகிழக்கு பிரதேசம் இருந்துவந்த நிலையில் நேற்றைய தினம் தொடக்கம் மீண்டும் சோதனைச்சாவடிகள் முளைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழங்குடா மற்றும் கல்லடி பகுதிகளில் அகற்றப்பட்ட சோதனைச்சாவடிகள் மீண்டும் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பினரின் இந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று வட மாகாணத்திலும் பல பகுதிகளில் நேற்று முதல் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.