வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு 7 மனித உரிமை அமைப்புகள் கூட்டறிக்கை

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை தான்தோன்றித்தனமாக தடுத்து வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என 07 மனித உரிமை அமைப்புகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய ஒன்றியம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சோசலிச பாதுகாப்பு அமைப்பு, இலங்கை தொடர்பான சர்வதேச செயற்பாட்டுக் குழு மற்றும் சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை குழு ஆகியன கூட்டாக இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளன.

வசந்த முதலிகே கடந்த ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக அரசாங்கம் இரத்து செய்வதாக உறுதியளித்த இந்த சட்டம் ஒரு கொடூரமான சட்டம் என கூட்டறிக்கை விடுத்துள்ள அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும், இதுவரை அரசாங்கம் குறித்த சட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மிக்க ஆட்சி முறைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியதன் மூலமே அரசாங்கம் பதிலளித்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் வசந்த முதலிகேவை தடுத்து வைக்க எந்த காரணமும் இல்லை என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.