இந்தியாவின் மூத்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் தற்போதைய இந்திய தூதுவர் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக மாற்றம் பெற்றுச் செல்வதாக இந்தியாவின் வெளிவிவகாரச் செயலகம் நேற்று (13) தெரிவித்துள்ளது.
ஜா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராக பணியாற்றி வருவதுடன், முன்னர் அமெரிக்கா, ரஸ்யா, உபகிஸ்தான் ஆகிய நாடுகளில் தூதுவராகவும், கொழும்பு, நியூயோர்க், புதுடில்லி ஆகிய பகுதிகளில் இராஜதந்திரியாகவும் பணியாற்றியிருந்தார்.
2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கும் (மகிந்த ராஜபக்சாவுக்கும்) இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவுகளை கட்டியெழுப்புவதில் ஜா முக்கிய பங்கு வகித்தவர்.
இலங்கையில் இனஅழிப்பு போர் உக்கிரமான 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையிலும் கொழும்பில் தங்கியிருந்து இந்தியாவுக்கான இராஜதந்திர பணிகளை இவர் மேற்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.