ரணில் மீட்பர் அல்லர்; சர்வதேச நிதி நிறுவனங்களின் சேவகர் – ஐங்கரநேசன் சாடல்

AYNGARANESAN 03 ரணில் மீட்பர் அல்லர்; சர்வதேச நிதி நிறுவனங்களின் சேவகர் - ஐங்கரநேசன் சாடல்
ராஜபக்ஷ சகோதரர்கள் அரியணையில் இருந்து துரத்தப்பட்டு அவ்விடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதியாகப் பிரதியீடு செய்யப்பட்டார். அவர் ஒரு பொருளாதார நிபுணர் , சரிந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவார், அடித்தட்டுமக்களின் வாழ்வு மேம்படும் என்று சொல்லியே முன்னிறுத்தப்பட்டார். ஆனால் , இன்று இலங்கையின் சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.2019ஆம் ஆண்டு பதினோரு சதவீதமாக இருந்த வறுமை இந்த ஆண்டு இருபத்தியாறு சதவீதமாக அதிகரித்திருக்கிறது.ரணில் மீட்பர் அல்லர். அவர் ஒரு பொருளாதார அடியாள் . உலக வங்கி , நாணய நிதியம் ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் தாழ்பணியும் ஒரு சேவகராகவே அவர் செயற்பட்டுவருகின்றார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் கடுமையாகச் சாடியுள்ளார்.

பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்கும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ ஐங்கரநேசன் இவ்வாறு சாடியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது ,

இலங்கையின் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2019ஆம் ஆண்டில் 6,966 ரூபாயாக இருந்த தனி நபர் ஒருவரின் அடிப்படைத்தேவைகளுக்கான மாதாந்த செலவு இப்போது 17,014 ரூபாவாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.உலக வங்கி தன்னுடைய அறிக்கையில் இலங்கையில் அறுபது வீதமான குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. வாங்கும் திறன் குறைந்ததால் உணவுப்பாதுகாப்பின்மை , ஊட்டச் சத்துக்குறைபாடு , வளர்ச்சிக்குறைபாடு என்பவற்றை மக்கள் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.பொருளாதார மறுசீரமைப்பு என்ற பெயரில் சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் கட்டளைகளை சிரமேற்கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற வரி விதிப்பு முறைகள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் எல்லாம் சேர்ந்து சமூகத்தின் மீது தொடுத்திருக்கும் தாக்குதலின் விளைவுகள்தான் இவை.

நாணய நிதியத்தின் சொற்கேட்டு அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளினாலும் , மூடும் நடவடிக்கைகளினாலும் இலட்சக்கணக்கான மக்களின் வேலைகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருகின்றார். நாளுக்கு நாள் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் ,அமெரிக்கப் பேரரசு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார நடவடிக்கைகளை அவ்வப்போது வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றது.இதன் பொருள் ரணில் நிறுவனங்களுக்கும் பெரும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும் இவற்றுக்கூடாகத் தங்களுக்கும் சிறந்த சேவகராக ,ஒரு பொருளாதார அடியாளாக இருக்கின்றார் என்பதுதான்.

ரணில் விக்கிரமசிங்கவை அடிக்கடி வெளிப்படையாகப் பாராட்டுவதன் மூலம் அவரை ஒரு பொருளாதார மீட்பராக மக்கள் மத்தியில் கட்டமைக்க அமெரிக்கா விரும்புகின்றது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த விம்பம் அவரை வெல்ல வைக்கும் என்றும் அமெரிக்கா நினைக்கின்றது. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை வல்லாதிக்க சக்திகளே தீர்மானிக்கின்றன.அதற்கேற்ப மக்களை, வாக்காளர்களை, மக்கள் பிரதிநிதிகளை மூளைச் சலவை செய்யும் வேலைகள் கனகச்சிதமாக இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.எமது மக்கள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.