ரணிலை ஆதரிக்கும் உறுப்பினா்கள் புறக்கணிப்பு – பொதுஜன பெரமுன நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரத்தோட்டை தொகுதியின் மாநாடு கூட்டத்தின் போது ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தற்போது நேரடியாக ரணில் விக்ரமசிங்க முகாமை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தலைமையில் இறத்தோட்டை தொகுதியில் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, கட்சியின் செயலாளர் சாகல காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, திஸ்ஸ குட்டியாராச்சி, டி.வீரசிங்க உள்ளிட்டோர் கூட்டத்தில்
கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு அறிவிக்காமல் அவர்களுடைய சொந்த தொகுதியில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவுக்கும் எந்தவொரு பொதுஜன பெரமுன உறுப்பினருக்கும் கட்சியில் இனி இடமில்லையென்பதை அறிவிப்பதற்காகவே அனுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் செஹான் சேமசிங்க புறக்கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் அமைச்சர் சந்திரசேனவை தவிர அனுராதபுர மாவட்டத்தில் உயர்மட்ட அரசியல் குடும்பமான சேமசிங்க குடும்பத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தார்.

இதன்மூலம் அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோக பூர்வமற்ற முறையில் தெரிவிக்கவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.