தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அரசியல் கட்சிகள் காட்டிவரும் அசமந்தப் போக்கு தொடர்பில் அதிருப்தியை தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களே முடிவெடுக்கக்கூடியவாறு செயற்படும் ஒரு ஜனநாயகமே தமது தேவை என்றும் பிரிட்டனிலிருந்து வருகை தந்த அமைச்சரிடம் வலியுறுத்தியது.
யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கழிந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இடம்பெறவில்லை. சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றும் குறிப்பிட்டது.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொது நலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும் முரண்பாடுகளுள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத் பிரபு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சம்பந்தன் குறிப்பிடுகையில்,
அரசியல் அதிகார பரவலாக்கத்தின் மூலம் இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம். நாங்கள் பிரிபடாத பிரிக்க முடியாத ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வொன்றையே வேண்டுகிறோம்.
ஆனால் இதுவரையிலும் எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படவில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அரசியல் கட்சிகள் காட்டிவரும் அசமந்தப் போக்காக செயற்படுகிறது. மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களே முடிவெடுக்கக்கூடிய வகையில் செயற்படும் ஒரு ஜனநாயகமே எமது தேவை. நாம் எமது நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக முறையில் முன்வைத்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய யுத்தம் இடம்பெற்றது.
ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கழிந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இடம்பெறவில்லை. விடுதலை புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது.
அக் காலகட்டத்தில் பிரிட்டன் உட்பட இணைத்தலைமை நாடுகளாவிருந்த நாடுகளிற்கு இனப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு நிச்சயம் காணப்படும் என இலங்கை அரசாங்கம் வாக்களித்திருந்தது.
சர்வதேச சமூகம் இந்த வாக்குறுதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்யவேண்டும். இனப் பிரச்சினை தொடர்பில் ஒரு நிரந்தர ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றை எட்டுவதை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், ஐக்கிய இராஜ்ஜியம் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறலை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கத்தோடு ஆக்கபூர்வமான இரு நாடுகளிற்குமிடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் செயற்படும் என உறுதியளித்தார்.