யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர்

இன்று மாலை 6 மணியளவில், யாழ். பல்கலைக்கழகத்தை பொலிசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

மோட்டார் சைக்களில் வந்த இருவரை சிறப்பு அதிரடிப்படையினரும், பொலிசாரும் துரத்தி வந்த வேளை, அவர்கள் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறி, அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த அதிரடிப்படையினரும், பொலிசாரும் மாணவர்களை அச்சுறுத்திய போதும், பல்கலைகக்கழக நிர்வாகம் அவர்களைத் தடுத்து நிறுத்தாது, வேடிக்கை பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிசார் இருவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், சிறப்பு அதிரடிப்படையினர் 12பேர் 6 மோட்டார் சைக்கிளிலும் வந்ததாக கூறப்படுகின்றது.

தாம் துரத்தி வந்த இளைஞர்களை, தேடும் நடவடிக்கையில் படையினரும் பொலிசாரும் ஈடுபட்டிருந்த போதும், அவர்களை இனங்காண முடியவில்லை என்பதால், அங்கு கலை நிகழ்வுகளுக்காக நின்றிருந்த மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

அத்துமீறி நுழைந்த படையினரை உள்ளே விட்டு பிரதான வாயிலை மூடுமாறு நிர்வாகத்தினரிடம் மாணவர்கள் வலியுறுத்திய போதும், அவர்கள் அதை செய்யவில்லை. இதனால் சிறப்பு அதிரடிப்படையினரும், பொலிசாரும் அங்கிருந்து வெளியேறினர்.

சிறப்பு அதிரடிப்படையினரும், பொலிசாரும் துரத்தி வந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும், மதுபோதையில் வாகனம் செலுத்தி வந்ததால், அவர்களை துரத்தி வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தம்மை அச்சுறுத்திய சிறப்பு அதிரடிப்படையினரை வெளியேற அனுமதித்ததாகவும், அத்துமீறி நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பெருமளவு மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் கூடினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.