யாழ், திருமலை வன்னியில் இதுவரையில் 25 விகித வாக்குப்பதிவு – பதுளையில் அதிக வாக்குகள்

சிறீலங்காவில் இன்று இடம்பெற்று வரும் அரச தலைவர் தேர்தலில் காலை 10 மணிவரையில் 25 விகித வாக்குப்பதிவுகள் இடம்பெறறுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், திருமலை மற்றும் வன்னி பகுதிகளில் 25 விகதமும், மன்னார் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 30 விகிதமும், கொழும்பில் 34 விகிதமும், பதுறையில் அதிக அளவாக 54 விகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இன்று காலை 07மணி முதல் ஆரம்பமாகியுள்ள இந்த வாக்களிப்பு நடவடிக்கைகளில் மக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மைக்கேல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையிலான மதகுருமார்கள் வாக்களித்ததுடன் அனைவரும் தமது கடமையினை செய்யவேண்டும் என ஆயர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு சிசிலிய பெண்கள் தேசிய பாடசாலையில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தாண்டவன்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவுசெய்ததுடன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (3,98,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் 4991 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலீஸ் உத்தியோகத்தர்கள்,320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை சர்வதேச மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தங்களது கண்காணிப்பு பணிகளையும் வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொண்டுவருகின்றனர்.