யாழில் கப்பம் கோரும் அநாமதேய தொலைபேசி அழைப்புகள்

யாழில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு கப்பம் கோரி அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வருவதாக அறிய முடிகின்றது. அதுவும் புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னரே இவ்வாறான செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.

இன்றைய தினம் இவ்வாறு கப்பம் கோரியதாகக் கூறி அளவெட்டியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்புடைய மற்றொருவர் ஏற்கனவே கைதாகி காங்கேசன்துறை சிறைச்சாலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் போராளிகள், குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, அவர்களை விசாரணைியிலிருந்து விடுவிக்க பணம் கோரியதாகவும் அந்தத் தொகைகளை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறும் கோரி தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதே வகையில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த வாரம் வந்த அழைப்பை அடுத்து, 75ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் வைப்புச் செய்துள்ளார். பின்னர் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதால், குறித்த நபர் வங்கி றிசீதுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணையில் ஈடுபட்ட பொலிசார் குறித்த நபரை இன்று அளவெட்டியில் வைத்து கைது செய்தனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தொலைபேசி அழைப்பை விடுத்தவர் காங்கேசன்துறை சிறைச்சாலையில் இருப்பவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை இவ்வாறு தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்படுமிடத்து அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.

Leave a Reply