இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் பாடி வைத்த கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் வரி தமிழன் என்பவன் யார் என்பதையும் எத்தகைய பண்பினன் என்பதையும் உலகிற்குச் எடுத்துச் சொல்லும்!
“உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே” என வாழ்ந்ததோடு உலகிற்கு பொதுமைச் சிந்தனையோடு வாழச் சொல்லிக் கொடுத்தவன் தமிழன் என்பதற்குச் சான்று பகர்கின்ற வரி இதுவாகும்!
மூவேந்தர் ஆண்ட வரலாற்றுச்சிறப்பைக் கொண்டு வட வேங்கடம் முதல் தென் குமரி வரை ஆண்ட தமிழினம் இன்று மாண்ட வரலாற்றுத் துன்பங்களை உலகின் மூத்த குடியான தமிழ்க் குடி இன்று மலையளவாகச் சுமக்கின்றது!
இவ்வண்ணம் வந்தாரை வாழ வைத்த தமிழன் இன்று சொந்த மண்ணில் வாழும் உரிமை இழந்து தனக்கென்றோர் தேசமின்றி ஏதிலியாய் அகில வீதிகளில் அலைகின்றான்!
சொந்த மண்ணிலேயே ஆளும் உரிமையற்ற அடிமைகளாக வாழும் கொடிய வாழ்வினை ஒட்டுமொத்த தமிழர்களும் இன்று வாழ்வெனக் கொண்டுள்ளனர்!
இத்தனை கோடி தமிழர் உலகெங்கும் பரந்து இருந்தும் தமிழர் ஆண்ட தம் தாய் மண்ணாம் தமிழ் நிலங்களை இழந்து அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழ்கின்றனர் தமிழகத்திலும் தமிழீழத்திலும்!
உலகெங்கும் அலைந்து அகதியாகச் சென்ற தமிழர்கள் தாம் அடைக்கலம் புகுத்து வாழும் தேசங்களில் கரையொதுங்கி வாழ்வதற்கான சகல உரிமைகளும் பெற்று தம்மை வாழ்வியலாக வளர்த்துக்கொள்ளும் உரிமையும் பெற்று ஆட்சியில் பங்கேற்கும் உரிமையும் பெற்றுள்ளனர்.
ஆனால் அன்னைத் தமிழகம் என்று சென்ற அகதிகள் வாழ்வோ கண்ணீரில் தத்தளித்து சந்ததிகள் கடத்தும் உரிமைகள் ஏதுமின்றி வலிகளோடு தொடர்கின்றது!
“தனி ஒருவனிற்கு உணவில்லை என்றால் செகத்தினை அழித்திடுவோம்!” என்றான் பாரதி!
தனி ஒரு சமூகமாக ஏதிலிகளாக ஈழத் தமிழ் அகதிகள் தமிழக முகாம்களில் படும் துயரங்கள் வாய்விட்டுச் சொல்ல முடியாதவை!
அதை வாய் திறந்து பேச எவரும் வலிமையாக முன் வரவில்லை என்பது பெருங்குறையாகவுள்ளது!
இந்தக் குறை போக அதை ஓரளவுக்கேனும் சொல்ல வேண்டும் என்ற துடிப்போடு எடுக்கப்பட்ட திரைப் படமாக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற திரைப்படம் சிறியளவில் ஒரு புரட்சி செய்துள்ளது!
“திரைப் படங்களில் மூழ்கி கருத்துக்களை அலை அலையாக அள்ளி வீசும் தமிழ் சினிமா இரசிகர்கள் இந்தத் திரைப்படத்தைப் பெரியளவில் பேசுபொருளாக்காதது ஏன்?” என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியவில்லை.
ஆனால் விமர்சனங்களிற்கு அப்பால் இந்தத் திரைப்படம் தமிழக அகதி மக்களின் துயரை ஓரளவு வெளிக்கொண்டு வந்து இதயங்களை உருக்கும் வகையில் மனித்த்தை தட்டி எழுப்கிச் சொல்லியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!
நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நடிகர் விஜய் சேதுபதியின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படம் தடைகளைத் தாண்டி வெளியாகியுள்ளது.
இதில் முக்கிய பாத்திரமேற்று நடித்த நடிகர் விவேக் இன்று எம்மோடு உயிரோடு இல்லை!
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரு நடித்துள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் தடைகளை தாண்டி 2 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ளது.
புனிதன் என்ற பெயரில் ஈழத் தமிழரான விஜய் சேதுபதி தன்னுடைய இசையால் உலகை வலம் வந்து சாதிக்கும் பெருங் கனவை இலக்கெனக்கொண்டு அதை அடைய தனக்கென ஒரு குடிமகன் அடையாளம் வேண்டும் எனப் போராடுகின்றார்.
இலக்கை அடைய ஒரு அகதியாக விஜய் சேதுபதி என்ன வரிகளைக் கையாண்டார்.. இதனால் என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்? என்பதே இப்படத்தின் கதையாகும். இது கதை அல்ல! யதார்த்தத்தின் உண்மைகள்!
நிலம், நாடு, அரசியல் போன்றவற்றால் உலக மக்கள் பிரிக்கப்பட்டிருப்பது,
அடக்குமுறையாளர்கள் இனப்படுகொலையாளிகளால் தமிழ் மக்கள் அகதிகள் ஆக்கப்படுகையில் உருவாகும் அவர்களின் மன வலிகள், உள்ளத்தின் எதிர்பார்ப்புகள் என ஈழ்த்தமிழர்களின் நியாயப்பாடுகளை ஓரளவிற்குச் சொல்லெடுத்த முயற்சிகள் போற்றப்பட வேண்டியவை!
இந்த முயற்சியின் வெற்றி தோல்விகளிற்கு அப்பால் உலகம் ஊமையாகிப் பாராமுகமாகிக் கடந்து செல்ல நினைத்த ஒரு உண்மையை அழுத்தி உரத்துச் சொன்னமைக்குப் படத்தின் படைப்பில் கைகோர்த்த அனைவரிற்கும் பாராட்டுக்கள்!
இந்தக் கதைக்கு வசனம் எவ்வளவு முக்கியமானது என்பதை பொறுப்போடு உணர்ந்து கையாண்டிருக்கின்றார்கள்!
கியூ பிரிவினரின் விசாரணையின்போது “ என்னுடைய உடையைச் சரி செய்ய எனக்கு அனுமதி கொடுங்கோ” என கண்ணீரின் மத்தியிலும் கன்னிகா வீரம் கொப்பளிக்கச் சொன்ன காட்சி..
அதி உயர் கல்வித் திறன் இருந்தும் மருத்துவக் கல்விக்கு வாய்ப்பின்றிப் போன நிலையிலும் மருத்தவராக தன்னை வளர்த்துக் கொண்ட ஈழ அகதிப் பெண் மருத்துவம் பார்த்த காட்சி..
இன்னொரு முகாம் வாழ் இளைஞனை காதலிக்கும் அவள் காதலை அவன் மனமார விரும்பியும் அதை ஏற்க மறுத்து
“நான் ஒரு அகதி…அவள் ஒரு அகதி.. நாங்கள் பெறும் பிள்ளை அகதியாகி துன்பப்பட வேண்டுமா? ஒரு அகதிச் சந்ததியை உருவாக்க வேண்டுமா?”
எனக் கேட்கும் ஈட்டியால் இதயத்தில் குத்தும் வலி தரும் காட்சி…
இறுதிக்கட்ட பேசாமொழி அரங்கேறிப் பேசி இதயங்களை உலுப்பிய காட்சி…
போற்றுதற்குரிய கதை வசனம், இயக்கம்!
குறிப்பாக படத்தின் உச்சக்கட்ட (கிளைமேக்ஸ்) காட்சி மிகச்சிறப்பாக பேசப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் உயிரோட்டமாக பேசியமைக்குச் சிறப்பு பாராட்டுகள்!
சொந்த நாட்டில் வாழ முடியாமல், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு எதிர்கால வாழ்வு பற்றிய பெரும் கனவுகளோடு அந்நிய தேசங்களிற்கு வாழ்வு தேடி அகதிகளாகச் சென்றவர்க்கே இந்த கதையில் சொல்லப்பட்ட வலிகளின் ஆழம் புரியும்!
“அகதியாக வாழ்ந்து பார்! அகதிகளின் வலி புரியும்!” என்பர்.
இன்று தமிழகத்தில் முகாம்களில் வாழும் மக்களின் வலிகளைப் பட்டும் படாமல் சொல்ல முனைந்த இந்தப்படம் சிறையை விட கொடியதான சிறப்பு முகாமில் முடக்கப்பட்டிருக்கும் 70 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளின் துயரைத் துளியளவும் தொட்டிருக்கலாமே எனும் ஒரு குறை மட்டும் எம்மை ஏங்க வைக்கின்றது!
எவ்வாறெனினும் தமிழக முகாம்களில் அகதிகளாக இருக்கும் மக்களின் வலிகளை படம் பார்ப்பவர்களின் கண்கள் கலங்கும்படி சொன்னமைக்குப் பாராட்டுகள்!
அகதிகள் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தானே என்ற எண்ணத்தை ஆழமாக ஏற்படுத்துகிறது இப்படம்!
படத்தில் நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை இரசிக்கும்படி உள்ளது.
நடிகர் சிம்புவின் எழுச்சிக் குரலில் வெளிவந்த “முருகா” பாடலைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!
மொத்தத்தில் அன்னைத் தமிழகத்துல் சந்ததி கடந்தும் குடியுரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்பு உரிமை என எந்த உரிமைகளுமின்றி அகதிகளாக வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையின் வலிகளை சொன்ன ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போற்றப்பட வேண்டிய திரைப் படங்களில் ஒன்று..!
பார்த்து உலகத் தமிழ் மக்கள் ஆதரவு தர வேண்டிய திரைப்படம்!