ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்துக்கொண்டு பரந்தபட்ட கூட்டணியின் கீழ் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது என்று அக்கட்சியின் உறுப்பினர் ஜே.சி.அலவதுவல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு –
“ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி குறுகிய காலப்பகுதிக்குள் 54 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முதல் சுற்றில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம். எனவே, அடுத்தடுத்த சுற்றுகளில் பலமான அணியாக களமிறங்கி வெற்றிபெற திட்டமிட்டுள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஓர் கூட்டமைப்பு. அதில் கட்சிகள் இணையலாம். ஐக்கிய தேசியக் கட்சி இணைந்தால்கூட அக்கட்சியையும் இணைத்துக்கொண்டு பரந்தப்பட்ட கூட்டணியின்கீழ் தேர்தலை சந்திக்கலாம். அது மேலும் வலுவாக இருக்கும். எனவே, ஐ.தே.க. எம்முடன் இணைவதை நாம் வரவேற்போமேதவிர ஒருபோதும் எதிர்க்கமாட்டோம்.
அதேவேளை, அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் சில குறைப்பாடுகள் உள்ளன. அவை சீர்செய்யப்படவேண்டும். ஆனால், ஜனாதிபதியின் பதவிகாலம் உட்பட மேலும் சில விடயங்கள் மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.