மூன்று தசாப்த பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாது- விஜயகலா

முப்பது வருட பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாதென்றும் எதிர்வரும் 5 வருடங்களில் சிறந்த தீர்வைப் பெற, ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று வலி.வடக்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இங்கு உரையாற்றிய அவர்:

இன்று ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஊடாக மயிலிட்டி துறைமுகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.யுத்தம் காரணமாக கடந்த அரசாங்கம் 30வருடங்கள் இந்த இடங்களை பாதுகாப்பு வலயமாக  வைத்திருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், இந்தப் பிரதேசத்தில் இருந்த பாடசாலைகள் தேவாலயங்கள், கோவில்கள், தனியார் காணிகளில் இருந்த வீடுகளை இடித்துடைத்து தமக்குத் தேவையான வற்றை கடந்த அரசாங்கம் அமைத்தது.

கடந்தஅரசாங்கம் சட்டத்திற்கு முரணாக பல கட்டிடங்களை தம்வசம் வைத்திருந்தது. கடல் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஒரு இடம் தான் இந்த மயிலிட்டி துறைமுகம். அவற்றை இழந்து வீதியில் நின்ற மக்களின் எதிர்காலத்தை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மாற்றிக் கொடுத்துள்ளது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த,கடந்த கால அரசாங்கம் தமிழ் மக்களை எந்த இடத்திலும் திரும்பிப் பார்க்கவில்லை. முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அவலங்களை அந்த அரசு பொருட்படுத்தவில்லை. எமது அரசாங்கமே இவர்களுக்கு கை கொடுத்தது.

இன்று 5,000ஏக்கர் காணிகளை அரசாங்கம் மக்களிடம் கையளித்துள்ளது. பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

23,000 சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை உருவாக்க ஒத்துழைத்த, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.