முள்ளிவாய்க்கால் நினைவு தினம் திட்டமிட்டபடி மே 18 நடைபெறும் – வேலன் சுவாமிகள்

வடக்கு – கிழக்கு கட்டமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெற இருக்கின்றது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த நூற்றாண்டிலே இன அழிப்பு இனப்படுகொலை 2009 ஆம் ஆண்டு மே மாதம் உள்ளிட்ட கடைசி மாதங்களில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறி இருக்கின்றன.

இன அழிப்புக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் நீதி கேட்டு ஈழத் தமிழினம் போராடி வருகின்றது. இந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும். இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் முற்படுத்தவேண்டும் என்கின்ற பிரதான வேண்டுகோளை முன்வைத்து அனைத்துத் தரப்பினரும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம் .

இந்த வேளையிலே கொடூரமான மிலேச்சத் தனமான இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட எங்களுடைய உறவுகள் அவர்களுடைய ஆத்ம சாந்திக்காகவும் அந்த உறவுகளை இழந்து தவிக்கின்ற அனைத்து எங்களது உறவுகளுக்கும் அவர்களுடைய மன ஆறுதலுக்காகவும் வருடாவருடம் இறந்தவர்களை நினைவு கூருகின்ற ஓர் அடிப்படை உரிமை மே மாதம் நினைவு கூற உரிமை இருக்கின்றது.

இந்த வருடமும் 12 ஆவது ஆண்டாக அந்த நினைவு தின நிகழ்வு இடம்பெற இருக்கின்றது கொடிய கொரோனா அச்சக் காலப்பகுதியிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தாலே சுகாதார நடைமுறைகளைப் பேணிமுள்ளிவாய்க்கால் நினைவு தினம் இடம்பெற்றிருந்தாலும் உங்களுடைய அனைத்து உறவுகளையும் உங்கள் உங்களது வீட்டிலேயே இருந்து நீங்கள் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்குபற்ற வேண்டும்.

முடியும் என்றால் காலை நேர உணவைத் தவிர்த்து மதியத்தில் உப்பில்லா கஞ்சி எங்களுடைய இனம் இறுதி யுத்தத்தில் ஒரே ஓர் உணவாக இருந்திருக்கக்கூடிய அந்த கஞ்சிஇந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி எங்களுடைய வீடுகளுக்குள்ளேயே செய்து சிறுவர்கள் இளைஞர்களுக்கு பரிமாற வேண்டும். எங்களுடைய இனத்தினுடைய வேதனையையும் வடுக்களையும் நடந்த சம்பவங்களையும் அதற்காக நாங்கள் போராட வேண்டிய ஒரு கட்டத்தில் இருப்பதையும் இளம் தலைமுறையினருக்கு எதிர்கால தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் கஞ்சியை உலகமெங்கும் வாழ்கின்ற அனைத்து உறவுகளும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று அன்பாகக் கேட்பதோடு, மாலை 6 மணிக்கு ஆலயங்கள் தேவாலயங்கள் என்று அனைத்து இடங்களிலும் மணி ஓசை எழுப்பி அகவணக்கம் செலுத்துங்கள். உள்ளங்களது வீட்டு முற்றம், மதில்களில் பொது இடங்களில் சனசமூக நிலையங்களில் தீபங்களை ஏற்றி இழந்த உறவுகளை நினைவு கூருகின்ற அந்த நிகழ்வை அனைவரும் ஒன்றுசேர்ந்து உரிமைக்காக செய்ய வேண்டுமென்று சமயத் தலைவர்கள் ஆகிய நாங்கள் அனைத்து உறவுகளையும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.

இது ஆத்மார்த்தமாக நாங்கள் செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. அந்த விதத்தில் இது ஆத்மார்த்தமாக நாங்கள் செய்யவேண்டும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மே 18 ஆம் திகதி எமது இனத்துக்காக நாங்கள் அனைவரும் இதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.