முள்ளிவாய்க்காலில் நினைவு நிகழ்வுகள் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் பொது வெளியில் அமைக்கப்பட்ட பொது மண்டபத்தில் ஆண்டு தோறும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமை. இந்த ஆண்டு கொரோனா நிலைமையினை காரணம் காட்டி இந்நிகழ்வை தடை செய்வதற்கு முல்லைத்தீவு பொலிசார் நீதிமன்றத் தடை உத்தரவை பெற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்த பகுதியில் ஏற்பாட்டுக் குழுவினால் நினைவுக்கல் கொண்டு சென்ற வேளை பொலீசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன், குறித்த நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது. அத்துடன் நினைவுத் தூபியும் சேதப்படுத்தப்பட்டுளளது. இது தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலர் தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவு நிகழ்வு மேற்கொள்வதற்கோ, மக்கள் கூடுவதற்கோ இடமளிக்க முடியாது என்று கோரி முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்றுள்ளார்கள்.

கொரோனா நிலையினை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது. மக்கள் கூடக் கூடாது. பொது இடத்தில் வைத்து நினைவுகூரக் கூடாது என்றும் கோரி முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றில் வழக்கு சமர்ப்பித்து இந்த தடை உத்தரவினைப்  பெற்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலீஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏ.ஆர் 418 கீழ் 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் தடை உத்தரவினை பெற்று, உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.