முல்லைத்தீவு மன்னகண்டனில் வேகமாக அழிக்கப்படும் காடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில், வெளிவயல் குளத்தின் அருகாமையில் உள்ள பிரதேசங்களில் காடழிப்பு மிக மோசமாக இடம்பெற்று வருகிறது. செல்வாக்குப் படைத்தவர்களே இதன் சூத்திரதாரிகளாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காணி ஆக்கிரமிப்புக்காகவே காடுகள் அழிக்கப்படுகின்றன.

வயல்நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் பாரிய மரங்கள் அழிக்கப்படுகின்றன. குளத்தின் தடுப்பணை ஒன்றும் அழிக்கப்பட்டு காணி ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளமை குறித்து பலதரப்பினருக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் அரச அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

‘மன்னாகண்டல் வெளிவயல் குளத்தின் கீழ் காலம் காலமாக விவசாயம் செய்து வருகின்றேன். எனது வயலுக்கு மேற்குப் பக்கமாக வெளிவயல் குளத்தின் மேலதிக தண்ணீர் பாய்வதற்கான நிலப்பகுதி காணப்படுகின்றது. மேலதிக தண்ணீர் எனது வயல் காணிக்குள் வந்து எனது விவசாய நிலத்தைப் பாதிக்காத வகையில் நீண்ட காலமாக தடுப்பு அணை கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

இவ்விடயம் இங்கு விவசாயம் செய்து வரும் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் கடந்த 14.10.2019 அன்று கனரக வாகனம் பயன்படுத்தி ஏற்கனவே இருந்த தடுப்பு அணை அகற்றப்பட்டது. இக்குளத்தின் மேலதிக தண்ணீர் பாயும் பிரதேசத்திற்குக் குறுக்காக பாரிய வரம்பு அமைத்து இப்பகுதியில் இருந்த பாரிய மருதமரம் உள்ளிட்ட மரங்களை பிடுங்கியுள்ளார்கள். இந்த செயற்பாடு எமது விவசாய நடவடிக்கையைப் பாதிப்பதுடன் வெளிவயல் குளத்தையும் பாதிக்கும். எனவே இதற்கு நடவடிக்கை எடுத்து எனது விவசாய நடவடிக்கையைப் பாதுகாக்குமாறு கோருகிறோம்’.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,காணிப் பகுதியுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் இதனைத் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.இருப்பினும் யாரும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கவலை தெரிவித்தார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் மன்னாகண்டல் கமக்கார அமைப்பின் தலைவர் செல்லையா பாலசிங்கம் கருத்துத் தெரிவித்ததாவது:

‘எங்கள் பிரதேசம் ஒரு தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இது தொடர்பில் நாங்கள் அரசாங்க அதிபருக்கும் கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது ஒருவர் காணிகளைப் பிடிப்பதும், காடுகளை அழிப்பதுமாக இருக்கின்றார். இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் ஒருவராலும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. வெளிவயல்குளம் எனும் ஒரு குளம் உள்ளது. அது எட்டு, ஒன்பது தலைமுறையாக இருந்து வருகின்றது. வயல்களுக்கு மேலதிக தண்ணீர் வராது அணைக்கட்டு உடைக்கப்பட்டுள்ளது’. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே இருட்டுமடு பகுதியிலும் காடழிப்பு, காணி அபகரிப்பு இடம்பெற்றதாக மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர். தற்போது மன்னாகண்டலிலும் இக்குற்றம் இடம்பெறுகிறது. இங்குள்ள வசதி படைத்தவர்களது இந்த செயற்பாடுகளை அதிகாரிகளும் கண்டு கொள்ளாதது வேதனை தருகிறது. அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே செல்வந்தர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதே ஏழை மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

நன்றி – தினகரன்