முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றம் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் முல்லைத்தீவு, தண்ணீரூற்று, மற்றும் முள்ளியவளை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்தார் இதன் பின்னணியில் இந்த பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்மையில் குருந்தூர் மலை விவகாரத்தில் அதன் உரிமை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட து.ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிராக ஒருசிலர் செயற்பட்டுள்ளமையினை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்கள் இராணுவ புலனாய்வாளர்களின் பின்னணியில் செயற்படுகின்றார்காள என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை (12) முல்லைத்தீவு, தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளை பகுதிகளில் ஒட்டப்பட்ட துண்டு பிரசுரங்களில் இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்தினை குலைக்க துரைராசா ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் வெளிநாட்டில் இருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள் மக்கள் சிந்தித்து செயற்படவும் என்று எழுதப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் புதன்கிழமை (12) முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றம் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பின்னர் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறித்த செயற்பாடானது வெலிஓயா சப்புமல்தன்ன விகாரை, மற்றும் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் அவரோடு இணைந்து செயற்படும் புலனாய்வாளர்கள் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.