இலங்கையில் தமிழும் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் தமிழ் மொழியில் தடையின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுதல் வேண்டும்.எனினும் இதன் நடைமுறைத் தன்மை குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் மலையகப் பகுதிகளில் பல அலுவலகங்களில் தமிழ் மொழியுரிமை பல்வேறு இடங்களிலும் மீறப்படுகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இது பல்வேறு பாதக விளைவுகளுக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் மொழியுரிமை மீறப்படுமிடத்து அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு உரியவாறு அறிவித்து பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியது எம்மவர்களின் பொறுப்பாகும். இதிலிருந்தும் எவரும் விலகிச் செல்ல முற்படுதல் கூடாது.
எல்லா உயிர்களும் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கின்றன.என்றாலும் அவற்றின் தகவல் பரிமாற்றம் பழங்காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே தற்காலத்திலும் இருக்கின்றது.இயல்பாக அமைந்துள்ள இந்த தகவல் தொடர்பு என்பது அவற்றின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகின்றது.மனிதன் தனது இயல்பான சைகை, பேச்சு என்ற நிலைகளைக் கடந்து தகவல் தொடர்புக்கென்று பல வழிமுறைகளை இப்போது கையாண்டு வருகின்றான்.மனிதனின் கண்டுபிடிப்புக்களுள் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக மொழி விளங்குகின்றது.
மனித செயற்பாடுகளின் அச்சாணியாக மொழியே விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது.மொழி மனித நடவடிக்கைகளை இலகுபடுத்துவதோடு கருத்துப் பரிமாற்றத்தின் அத்தியாவசிய ஊடகமாகத் திகழ்கின்றது.
எனினும் மொழியுரிமையை உலகின் எல்லா சமூகங்களாலும் சரிவர அனுபவிக்க முடியவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.இந்த வகையில் இலங்கையின் தமிழ் சமூகத்தை குறிப்பாக மலையக சமூகத்தை குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
இலங்கைக்கும் மொழிக்குமிடையே பலமான பிணைப்பு இருக்கின்றது.மொழி ஆட்சியில் அமரப்போகும் அரசினை தீர்மானிக்கும் பிரதான சக்தியாக ஒரு காலத்தில் விளங்கி இருக்கின்றது.1956 ம் ஆண்டு இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது.இச்சட்டத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட பின்னர் அரசியல் இலாபங்களுக்காக தனிச்சிங்கள சட்டத்திற்கு வலுசேர்த்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.தனிச்சிங்கள சட்டம் இலங்கையர்களின் விரிசல்களுக்கு வித்திட்டதோடு அரசதுறை தொழில் வாய்ப்புகளில் எம்மவர்களின் சதவீதம் கணிசமாக வீழ்ச்சி காண்பதற்கும் உந்துசக்தியாக விளங்கியது என்பதனையும் மறுப்பதற்கில்லை.
தனிச்சிங்கள சட்டம் குறித்து பல்வேறு கருத்துக்கள் எதிரொலித்தன. “சிறுபான்மையினரை வலிந்து சிங்கள மொழியை ஏற்கும்படி நிர்ப்பந்திப்பது இனக்கலவரத்துக்கு வழிவகுப்பதாக அமையும்.இலங்கைக்கு மிகப்பெரிய ஆபத்து வரவுள்ளது.அம்மக்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணர்ந்தால் அவர்கள் நாட்டிலிருந்து பிரிந்து போகக்கூட தீர்மானிக்கலாம் ” என்று லெஸ்லி மிகத் தீர்க்கதரிசனமாகக் கூறியிருந்தார்.”மொழிகளின் சம உரிமையை ஏற்றுக்கொள்ளுதல் எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் கூட்டு ஒற்றுமைக்கும் வழியாகும்.இந்நிலையில் சிங்களம் மட்டும் சட்டம் எதிர்பாராத விளைவுகளைத் தரும்”. என்பது கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நிலைப்பாடாக இருந்தது.
உச்சகட்ட ஆதிக்கம்
இதற்கமைய தனிச்சிங்கள சட்டம் இந்நாட்டில் பல்வேறு தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தி இனங்களுக்கிடையே விரிசல்கள் ஏற்படவும் வித்திட்டது.இந்நிலையில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் இதுபற்றி கூறுகையில், ” தனிச் சிங்களம் எனும் கொள்கை இந்த நாட்டில் பொதுவாழ்க்கையில் தமிழ் மொழியை அதற்குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கிவைப்பதை மட்டும் கருதவில்லை.ஆனால் அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்க்கை என்பவற்றிலிருந்தே வெளியே தள்ளி வைக்கிறது” என்று உள்ளம் குமுறி இருந்தார்.மொழி உச்சகட்ட ஆதிக்கத்தை இலங்கையில் செலுத்தி இருந்தநிலையில் இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறைந்ததாக இல்லை என்பதும் தெரிந்ததேயாகும்.
1987 ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதிகாரப்பரவலுக்கான அடிப்படையாக அரசியலுக்கு 13 ஆவது திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டு மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது.வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் இன்று தமிழும் அரசகரும மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்றது. எனினும் பல இடங்களில் பெயரளவிலேயே தமிழ் அரசகரும மொழியாக காணப்படுகின்றதே தவிர மொழிப் பயன்பாடு என்பது குறைந்தே காணப்படுகின்றது.மலையகத்தில் இந்நிலைமை அதிகமுள்ளது.
அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் காணப்படும் பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் பிழையாக எழுதப்பட்டு ” தமிழ்க் கொலை ” இடம்பெற்றுள்ளது.பஸ் வண்டிகளின் பெயர்ப்பலகைகளிலும் இத்தகைய எழுத்துப் பிழைகளை அதிகமாக காணக்கூடியதாக உள்ளது.சில சந்தர்ப்பங்களில் கொச்சையான விரும்பத்தகாத சொற்பிரயோகங்கள் கையாளப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு பொருத்தமான தமிழ்ச் சொற்களைக் கையாண்டு பெயர்ப்பலகைகளில் எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வருதல் வேண்டும்.இது குறித்த வழிகாட்டல்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏனையோரும் வழங்கியுதவ முடியும்.
இலங்கையின் மலையகப் பகுதிகளில் சில கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் தனிச்சிங்கள மொழியிலேயே இடம்பெற்று வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பலவும் முன்வைக்கப்பட்டிருந்தன.இதனால் சிங்கள மொழிப் பரிச்சயமற்ற ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.இதுபோன்றே அதிபர்கள் கூட்டங்களும் சில வலயங்களில் தனிச்சிங்கள மொழியிலேயே இடம்பெற்று வருகின்றன.
இதனால் அதிபர்களும் மொழி ரீதியான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இந்நிலையானது பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் தாக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதையும் கூறியாக வேண்டும்.
இதேவேளை அதிபர் கூட்டங்கள் அல்லது செயலமர்வுகளின்போது சிங்களம் தெரிந்த ஒரு சில தமிழ் ஆசிரியர்கள், தமக்கு தமிழ் மொழியில் விளக்கங்களை வழங்கத் தேவையில்லை என்று மேதாவித்தனமாக கூறி வருகின்றனர். இந்த மேதாவித்தனத்தால் நமக்கு நாமே குழிதோண்டிக் கொள்ளும் ஒரு நிலையே ஏற்படும் என்பதே உண்மையாகும். இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு மொழியுரிமைக்கு குரல் கொடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்.
ஜனநாயகத்துக்கு முரண்
இதேவேளை அரச அலுவலகங்களில் இருந்து பொதுமக்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது சுற்றுநிருபங்கள் என்பன தனிச்சிங்கள மொழியிலேயே காணப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.இந்நிலையும் மோசமானதாகும்.சிங்கள அல்லது ஆங்கில மொழியில் காணப்படும் கடிதங்கள் அல்லது சுறறுநிருபங்களுக்கான தமிழ் மொழிப்பெயர்ப்பு இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.அல்லது தனித்தமிழில் கடிதங்கள், சுற்றுநிருபங்கள் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
இதைவிடுத்து தமிழர்களுக்கு சிங்கள அல்லது ஆங்கில மொழியில் கடிதங்கள் மற்றும் சுற்றுநிருபங்களை அனுப்புவதன் மூலம் அவர்களின் மொழியுரிமையை பறித்தெடுப்பது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும் என்பதனை ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மொழியுரிமை என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில் எந்த சூழ்நிலையிலும் நாம் அதனை விட்டுக்கொடுப்பதற்கு முயற்சித்தலாகாது.” தமிழ் என்பது எமது உயிருக்கு நேர்” என்பது கவிஞர்களின் கருத்தாகும்.எனவே ஏதேனும் ஒருநிலையில் மொழியுரிமை மீறப்படும்சந்தர்ப்பங்களில் அதனை நாம் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிகாரத்தை பெற்றுக் கொள்ள முற்படுதல் வேண்டும். காலஞ்சென்ற பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில், மலையகத்தில் இருந்து மொழியுரிமை மீறல்கள் தொடர்பில் வரும் முறைப்பாடுகள் குறைவாகவே இருப்பதாக குறைபட்டுக் கொண்டார்.எனினும் மலையகத்திலேயே அதிகமான மொழியுரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.இதேவேளை மொழியுரிமை மீறப்படுமிடத்து எந்தளவுக்கு தாக்க விளைவுகள் ஏற்படும் என்பதனையும் பேராசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.இந்நிலையில் தொடர்ந்தும் நாம் மொழியுரிமை மீறல்களுக்கு இடமளிக்காது உரியவாறு குரல்கொடுத்து மொழியுரிமையை நிலைநாட்டிக் கொள்ள முற்படுதல் வேண்டும்.