மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணவேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்திற் கொண்டு இலங்கையுடன் கலந்துரையாடி இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும் என மத்திய அரசை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவரான பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய் யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகளையும் முன்னெடுப்பது இல்லை எனவும் இதனால் தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மேற்படி மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகள் உள்ளிட்ட உடைமைகளை விடுவிக்கவும், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீன்வளத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கூட்டு பணிக்குழுவின் 6 ஆவது கூட்டத்தை இந்தியா சார்பில் கூட்ட வேண்டும் என குறித்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த வழக்கை எதிர் வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர். அதற்குள் தமிழக மீனவர்களின் அவல நிலையை மத்திய அரசு கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப்பணிக்குழு கூட்டத்தைக் கூட்டி, இலங்கையுடன் கலந்துரையாடி மிக விரைவாக பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.