மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? – பவா சமத்துவன்

மியான்மர், 

1948ஆம் ஆண்டு இந்த நாடு பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெற்றது. எனினும் நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு இராணுவ ஆட்சியில்தான் இருந்தது.

2010ஆம் ஆண்டு காலப் பகுதியில்  மெல்ல ஜனநாயகத்திற்கு திரும்பிய மியான்மரில்,   2015ஆம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிங்கியாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக இராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாட்டை விட்டு  அகதிகளாக வெளியேறினர்.

இந்த சூழலில் 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி,  ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது மியான்மர் இராணுவம். அத்தோடு ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள்  பெரும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டங்களின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இராணுவத்தினரால் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்த சம்பவங்களுக்கு ஐ.நா மற்றும் பல நாடுகள் தமது கண்டனங்களை தெரிவித்து வருவதோடு போராட்டக்காரர்கள் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மியான்மர் இராணுவம்  போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துவதாக இல்லை. அதன் காரணமாக மியான்மர் அமைதியற்று காணப்படுகின்றது.

இந்த நிலையில், மியான்மரில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல் குறித்து  இந்திய சமூக நீதி ஊடக மையத்தின் தலைவர் ‘ஊடகச் செம்மல்’ பவா சமத்துவன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வி.

கேள்வி:-மியான்மரில் இடம்பெற்ற இராணுவ புரட்சியின் பின்னர் அங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- உலகில் வேறு எங்கும் இல்லாத வித்தியாசமான அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ளது மியான்மர்.

ஒரு நாட்டின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்ட காரணம் அந்த நாட்டின் அரசியலையும் அதிகாரத்தையும் கைப்பற்றி ஆட்சி நடத்துவதற்காக ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்படுத்திக்கொண்ட விநோதம் மியான்மரில் நடந்தேறியது.

1948 பிரிட்டனில் இருந்து விடுதலை பெற்ற மியான்மர், அதன் வரலாற்றில் பெரும்பான்மையான ஆண்டுகளை இராணுவத்தின் பிடியில் கழித்திருக்கிறது.

1962இல் ராணுவ புரட்சி ஏற்பட்டு 15 ஆண்டுகாலம் மக்களாட்சி முடக்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்ற இந்த நாட்டில் 2008 அளவில் தான் ஓரளவு ஜனநாயகத்தின் வெளிச்சக் கீற்றுகள் விழுந்தன .

இதன்படி ஒரு புதிய அரசியல் சட்டத்தை இராணுவம் உருவாக்கியது. அன்று உருவாக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் இருக்கிற மியான்மர் அரசியல் சட்டத்தின்படி மொத்தமுள்ள 664பாராளுமன்ற உறுப்பினர்களில் 166 பேர் அதாவது 25% இராணுவத்தின் பிரதிநிதிகளாக இருப்பர்.

எந்த ஒரு அரசும் இதை நீக்க விரும்பினால் அதற்கு 75 சதவீத பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதை எப்போதும் எட்ட முடியாத வகையில் இராணுவமே ஒரு கட்சியை உருவாக்கி வைத்திருக்கிறது.

யு.எஸ்.டி. பி. (Union Solidarity and Development party) எனப்படும் இந்த அரசியல் கட்சியானது எப்போதுமே இராணுவத்தின் நலன் சார்ந்தே செயல்படுகிறது .

இந்நிலையில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) ஆட்சியை பிடித்தது.

அப்போது நடந்த ரோஹிங்கியா முஸ்லிம்களின் கிளர்ச்சியை மியான்மர் இராணுவம் மிகக்கடுமையாக ஈவு இரக்கமின்றி ஒடுக்கியது. இதில் பல நூறு ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட, ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் அருகில் உள்ள வங்கதேசம் உட்பட சில நாடுகளுக்கு அடைக்கலம் தேடி இடம்பெயர்ந்தனர்.

001 02 மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? - பவா சமத்துவன்

“இதை இனத்தூய்மை வாதத்திற்கான  இந்த நூற்றாண்டின் ஆபத்தான எடுத்துக்காட்டு..!” என ஐ.நா அவை வர்ணித்தது.

இதனிடையே கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் 80 சதவீதம் வாக்குகள் பெற்று ஆங்  சாங் சூகி  தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைக்கும் நிலை வந்தது. மியான்மர் இராணுவத்தின் பினாமி கட்சியான யு.எஸ்.டி.பி. 33 இடங்களையே பிடித்தது .

பிரிட்டன் குடிமகனை கணவனாகப் பெற்ற ஆங் சாங் சூகி புதிய அரசியல் சாசனப்படி பதவி ஏற்க முடியாத சூழலில் அரசின் தலைமை ஆலோசகராக இருக்க கடந்த பெப்ரவரி ஒன்றாம் நாள் அதிபர் வின்- மின்ட் தலைமையில் புதிய அரசு பங்கேற்க இருந்த நிலையில், டட்மெடாவ் (Tatmadav ) என்று அழைக்கப்படும் மியான்மர் இராணுவம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

ஜெனரல் மின் -ஆங் -லெய்ங் தலைமையிலான மியான்மர் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி ஒரு ஆண்டு காலத்திற்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என மியான்மர் இராணுவம் காரணம் கூறினாலும், இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் எந்த ஆதாரங்களையும் இதுவரை அதனால் தர முடியவில்லை.

மியன்மர் தேர்தல் ஆணையமும் இந்த குற்றச்சாட்டை மறுத்து விட்ட நிலையில்  இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது மியான்மர் இராணுவம்.

மியான்மர் மக்களின் ஏகோபித்த செல்வாக்கை பெற்ற ஆங் சாங் சூகியை ஆட்சி அமைக்க விடாமல் செய்த இராணுவத்தை எதிர்த்து மியான்மர் மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

மாண்டேலா, நோபிடா, யாங்கூன்  என மியான்மர் நகரங்கள் தோறும் பரவிவரும் இந்த போராட்டத்தில் இதுவரை 268 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 26பேர் சிறுவர்-சிறுமியர்.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி கின்.மியோ- கிட்  இராணுவத்தால் சுடப்பட்டு இறந்து கிடந்ததை மியான்மர் நவ் தொலைக்காட்சி ஊடகம் உலகிற்குக் காட்டியது.

மார்ச் 3 புதன்கிழமை நடந்த போராட்டங்களில் 38 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை “இரத்தம் தோய்ந்த நாள்..!”என  ஐ.நா . கவலையுடன் கூறியது.

“எல்லாம் சரியாகிவிடும்.. சமாதானத்துடன் வாருங்கள்!” என தனது மென்னடை (T -Shirt)மூலம் அழைப்பு விடுத்த 18 வயது இளைஞி இராணுவத்தின் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இறந்து கிடந்ததை உலக ஊடகங்கள் பலவும் வெளிச்சமிட்டுக் காட்டியது.

” என்னை கொன்றுவிடுங்கள். ஆனால் குழந்தைகளை ஒன்றும் செய்யாதீர்கள்..!” என்று இராணுவ அணி முன் மண்டியிட்டு கேட்கும் கன்னியாஸ்திரியின் படம் மியான்மரில் நடந்து வரும் குழந்தைகள் மீதான வன்முறை கொடூரத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

nun மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? - பவா சமத்துவன்

” எங்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கவோ அல்லது போராட்டக்காரர்களை எச்சரிக்கை விடுக்கவோ இல்லாமல், அப்படியே துப்பாக்கியை எடுக்கிறார்கள் பிறகு சுடுகிறார்கள்..! என ராய்ட்டர் செய்தி நிருபரிடம் கூறினார் மொனிவா என்ற மியான்மர் வாசி .

இந்த நிலையில் மார்ச் 22 அன்று போராட்ட இடங்களில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர் ஆங்- தோரா  கைது செய்யப்பட்டு, பல்வேறு அழுத்தம் காரணமாக இராணுவத்தால் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

“மியான்மர் இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்!” என கோரிக்கை விடுத்திருக்கிறார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.

எது எப்படி இருப்பினும் மியான்மர் ஆட்சி ஆளுகையில் இராணுவத்தின் பங்கு இருக்கும் வகையிலான புதிய அரசியல் சட்டம் அகற்றப்படும் வரை மியான்மரில் ஜனநாயகம் மலர எந்த வழியும் இல்லை.

 

Leave a Reply