நள்ளிரவு வேளையில் ஆயுதம் தாங்கிய சிப்பாய்களால் கைது செய்யப்பட்ட மாலி நாட்டின் அரச தலைவர் இப்ராகீம் போபாகர் கெயிறா (75) சில மணி நேரத்தின் பின்னர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி தனது பதவியை துறப்பாதாகவும், தனக்கு இவ்வளவு நாளும் ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த உரையின் போது அவர் கோவிட்-19 பாதுகாப்பு முகக்கவசம் அணிந்திருந்தார்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை எனவே அரசையும், நாடாளுமன்றத்தையும் கலைக்கிறேன். உயிர்கள் இழக்கப்படுவதை தடுப்பதற்காகவே நான் இந்த முடிவை எடுத்தேன். இதன் மூலம் இரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
கடந்த செவ்வாய்கிழமை (18) அதிகாலை அரச தலைவர் இல்லத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். பல உயர் அரச அதிகாரிகளையும் கைது செய்திருந்தனர். தம்மை மக்களை மீட்கும் தேசிய சபை என தெரிவித்த சிலர் இராணுவ உடைகளுடன் தொலைக்காட்சியில் தோன்றி தேர்தல் நடைபெறும் வரையில் இடைக்கால அரசின் பொறுப்பை ஏற்பதாக தெரிவித்தனர்.
நாட்டில் இடம்பெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்துவோம். நாம் அதிகாரத்தை கைப்பற்றப்போவதில்லை. ஆனால் நாட்டின் உறுதித்தன்மையை ஏற்படுத்தப்போகின்றோம் என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கேணல் மேஜர் இஸ்மேல் வாகே தெரிவித்துள்ளார்.
இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கால எல்லைக்குள் மேற்கொள்ள முடியும். பெதுத் தேர்தல் மூலம் தான் நாம் நம்பிக்கையையும், மக்களின் நல்வாழ்வையும் ஏற்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரச தலைவர் தொலைக்காட்சியில் தோன்றி தனது பதவியை துறப்பதற்கு முன்னரே அனைத்துலக நாடுகள் தமது கண்டனங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டன. மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு மாலியில் கடந்த சில வாரங்களாக மேற்கொண்ட அமைதி முயற்சிகள் பலன் தரவில்லை.
கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவந்தன. அரச தலைவர் பதவி விலகவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
எனினும் தற்போதைய இராணுவப்புரட்சியை ஆபிரிக்க கூட்டமைப்பு கண்டித்துள்ளதுடன், பொருளாதார தடைகளை கொண்டுவரப்போவதாகவும், தரை மற்றும் வான் வழியான வியாபார நகர்வுகளை தடை செய்யப்போவதாகவும் அது மிரட்டியுள்ளது. மாலியின் உறுப்புரிமையையும் அது நீக்கியுள்ளது. கைது செய்யப்படுள்ள அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
மாலியில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அங்கு சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குற்றெரஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன தமது கண்டனங்களை ஒரு பக்கச்சார்பாக வெளியிட்டுள்ளன. கடந்த பல வாரங்களாக வீதிகளில் இறங்கி போராடிய மாலி மக்களின் குரல்களையும் அவர்கள் கேட்க வேண்டும் என பிரித்தானியாவின் அபடீன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மனு லெகுன்ஸ் தெரிவித்துள்ளார்.
மாலி மக்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இராணுவம் வெளிவந்துள்ளது. கெயிறாவின் வெளியேற்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் விரும்பினார்கள். அவரின் வெளியேற்றம் என்பது நாடு புதிய பாதையில் பயணிப்பதற்கான வழியை திறந்துள்ளது. அரசியல் முறைமைக்கு அப்பாலான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு, பிரான்ஸ், ஐ.நா மற்றும் ஆபிரிக்க கூட்டமைப்பு ஆகியன தெரிவித்துள்ளன.
ஆனால் ஆபிரிக்காவின் பல நாடுகளில் அரசியல் முறைமைக்கு அப்பாலான பல நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. ஐவேரி கோஸ்ட்டில் அரச தலைவர் மூன்றாவது தடவை பதவிக்கு முயற்சி செய்கின்றார் ஆனால் ஐ.நா எதுவும் கூறவில்லை. குனியா கொனக்றே மாலிக்கு அதிக தொலைவில் இல்லை. அங்கும் அதிபர் மூன்றாவது தடவை பதவிக்கு வர முயற்சி செய்கின்றார். எனவே அரசியல் யாப்புமுறையின் படி எதுவும் நடக்கவில்லை என்பதே தெளிவானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழல், தேர்தல் முறைகேடுகள், பாதுகாப்பு அற்ற தன்மை தொடர்பில் மக்கள் மாலி அரசின் மீது கடுமையான எதிர்ப்பு மனநிலையில் இருந்தனர் அதுவே போராட்டமாக மாறியது. கெயிறாவின் கட்சிக்கு மேதலிகமாக 10 ஆசனங்களை வழங்குவதற்கு அரசியல் யாப்பு திருத்த நீதிமன்றம் கடந்த ஏப்பிரல் மாதம் முயற்சி செய்ததும் அங்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது கட்சி 31 ஆசனங்களை பெற்றிருந்தது.
இராணுவம் தலையிட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஜுலை மாதம் வன்முiறாக மாற்றம் பெற்றது. இந்த சம்பவங்களில் 14 பேர் கொல்லப்பட்டிருந்ததாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய அரசின் நீக்கம் என்பது ஆச்சரியமானது ஒன்றல்ல என அபிரிக்காவின் அனைத்துல ஊடக குழுவின் ஆய்வாளர் மாறே றொஜர் பிலேவா தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மாலியின் நிலமை பதற்றமாகவே இருந்தது. அது கடந்த வாரங்களாக உக்கிரமடைந்திருந்தது. இந்த நிலையை இராணுவம் தனக்கு சாதகமாக்கியுள்ளது. இராணுவத்திடம் போதுமான ஆயுதங்கள் இல்லை, அதனால் அங்கு ஜிகாத் குழுக்களுடன் இடம்பெற்று வந்த மோதல்களை இராணுவத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை. இராணுவம் பலரை இழந்திருந்தது. இதனால் இராணுவம் அரசு மீது நம்பிக்கையிழந்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இராணுவப் புரட்சி மூலம் முன்னைய அரச தலைவர் அமடோ ரோமானி ரோறி பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலின் பின்னர் 2013 ஆம் ஆண்டு கெயிறா பதவிக்கு வந்திருந்தார். ஆனால் அவர் நாட்டை ஒருமைப்படுத்த முயன்றதாக கூறுகின்றார் வொசிங்டனில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் வில்லியம் லோரன்ஸ்.
2018 ஆம் ஆண்டு அவர் மீண்டும் அரச தலைவரான தெரிவுசெய்யப்பட்டபோதும், நாட்டில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவில்லை, மேலும் வடக்கில் இடம்பெறும் மோதல்களையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற தேர்தல் முறைகேடுகள் அங்கு மிகப்பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனோ வைரசின் தாக்கமும் பொருளாதாரத்தில் கடுமiயான பாதிப்புக்களை எற்படுத்தியுள்ளது. வடபகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதான எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ததும் இந்த அனர்த்தத்திற்கு காரணம் என வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரச தலைவரை பதவியில் இருந்து நீக்கியது அங்கு உறுதித்தன்மையை குலைத்துள்ளதாக பாதுகாப்பு துறைகளுக்கான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் போபகர் சங்கரே தெரிவித்துள்ளார்.
மாலியில் தோன்றியுள்ள இந்த நிலமை அதனை சுற்றியுள்ள நாடுகளினதும் உறுதித்தன்மையை பாதிக்கலாம் என மேற்கு ஆபிரிக்க நாடுகள் அஞ்சுகின்றன. இந்த பிரச்சனை தமது நாடுகளில் இடம்பெறும் தேர்தல்களில் அல்லது அரசியலில் எதிரொலிக்கலாம் என அந்த நாடுகள் அச்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி: அல்ஜசீரா
தமிழில்: பிரபா