மாற்றுத் தொழில் முயற்சி –  துரைசாமி நடராஜா

அண்மைகால வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது வருமான மேம்பாட்டின் அதிகரித்த தேவைப்பட்டினை வலியுறுத்தி வருகின்றது.இத்தேவைப்பாடு மலையக மக்கள் தொடர்பில் இரட்டிப்பாகியுள்ள நிலையில் மாற்றுத்தொழில் வாய்ப்பு கருதிய சிந்தனைகளும் முடுக்கி விடப்பட்டு வருகின்றன.இதேவேளை மலையக இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு கருதி இந்திய முதலீட்டாளர்கள் மலையகப் பகுதிகளில் முதலீட்டினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருக்கின்றார்.

07 economic crisis மாற்றுத் தொழில் முயற்சி -  துரைசாமி நடராஜாபெறுமதிசேர் வரி அதிகரிப்பு நாட்டு மக்களின் பொருளாதார நெருக்கடியை உச்சப்படுத்தியுள்ளது.இதன் தழும்புகள் பல துறைகளிலும் எதிரொலிக்கும் அதேவேளை பெறுமதிசேர் வரி அதிகரிப்பு நெருக்கடி இரண்டாம் காலாண்டின் பின்னர் படிப்படியாக குறைவடையுமென்றும் மக்கள் இதனை சாத்தியப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அரச தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.

எவ்வாறெனினும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரிச் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் கடும் வறுமை நிலைக்கு உள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை குறிப்பிடுகின்றது.2019 ம் ஆண்டு காலப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த இந்த வறிய மக்கள் முழு சனத்தொகையில் 25 இலட்சமாக பதிவாகியிருந்தபோதும் தற்போது வறிய மக்கள் பிரிவுக்கு புதிதாக சுமார் 30 இலட்சம் பேர் இணைந்திருக்கின்றனர்.இதன் பிரகாரம் ஜனசவிய, சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற வறுமை நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களின் சதவீதம் 11.9 இலிருந்து 25 சதவீதத்துக்கு அதிகரித்திருக்கின்றது.

பெறுமதிசேர் வரி வீதத்தை அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 27.9 வீதமானவர்கள் 2024 இல் வறுமை நிலைக்கு உள்ளாவர் என்று கடந்தகால உலகவங்கியின் அறிக்கை தெளிவுபடுத்தியது.எனினும் சமகால பெறுமதிசேர் வரி அதிகரிப்பானது நாட்டில் வறிய மக்களின் எண்ணிக்கையில் மேலும் கணிசமான அதிகரிப்பை தோற்றுவிக்கும் என்று பொருளியல் மற்றும் நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

இந்நிலையில் வரி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் கிளர்ந்தெழுந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதேவேளை உடனடி மறுசீரமைப்புக்களை நடைமுறைபடுத்தி இருக்காவிட்டால் லெபனான், ஆர்ஜன்டீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலையைத்தான் இலங்கையும் அடைந்திருக்கும்.இவ்வாறான மிக மோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறுகிய காலத்தில் அதிலிருந்து விரைவாக மீண்ட ஒரேயொரு நாடு இலங்கை தான் என்றும் அரச தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.

இலங்கையில் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஆய்வுகள் புலப்படுத்தும் அதேவேளை 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் உள்ளனர்.இதேவேளை 6.3 மில்லியன் மக்கள் இன்னமும் ஓரளவு அல்லது மோசமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.யுனிசெப்பின் அண்மைய  அறிக்கைக்கமைய 5.7 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுகின்றது.இவர்களுள் 2.3 மில்லியன் பேர் குழந்தைகளாவர்.மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15.7 சதவீதமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

மோசமடையும் வாழ்க்கை

thjc SriLanka food மாற்றுத் தொழில் முயற்சி -  துரைசாமி நடராஜாநாட்டின் தேசிய நிலைமைகள் இவ்வாறிருக்க பெருந்தோட்டப் பகுதிகளில் 51 வீதமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகம் கொடுத்திருப்பதுடன் நாட்டின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே அதிகளவானோர் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவிக்கின்றது.பின்தங்கிய மற்றும் நலிவுற்ற சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் நாளாந்தம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக் கொண்டுள்ளன.இதேவேளை கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் உணவு சார்ந்த மாற்று உத்திகளைக் கையாளும் குடும்பங்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் அறிக்கை மேலும் வலியுறுத்துகின்றது.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் வருமான ஈட்டலானது தேயிலைத் தொழிற்றுறை என்ற ஒரு வழிப் பாதையில் மட்டுமே சென்றுகொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயமாகும்.எனினும் இத்தொழிற்றுறை ஊடான வருமானம் இம்மக்களின் வாழ்வியலை மேம்படுத்த எவ்விதத்திலும் போதுமானதாகாது என்ற ரீதியில் மாற்றுத் தொழில் முயற்சி குறித்த சிந்தனைகளும் முடுக்கிவிடப்பட்டமை தெரிந்ததாகும்.

இதிலொரு அம்சமாக பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை இளைஞர் யுவதிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் முயற்சி தொடர்பில்  தோட்ட நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே அதிகமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.எனினும் இவை பூரணத்துவம் பெறாத நிலையில் இழுபறி இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.இதேவேளை இம்மக்களின் சுயதொழில்  அபிவிருத்தி முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வாய்ப்புக்களையும், உதவிகளையும் அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மலையக சமூகம் சார்ந்த நலன்விரும்பிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும் இதுவும் திருப்தி தருவதாக இல்லை.நாட்டின் ஏனைய மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக அல்லது தனியாரின் ஊடாக கிடைக்கின்ற பல்வேறு உதவிகளும் மலையக மக்களைப் பொறுத்தமட்டில் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன.’அஸ்வெஸ்ம’ போன்ற உதவிகளும் இதற்கொரு உதாரணமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.எனவே இத்தகைய உதவிகளைப் பெற்றுக் கொள்ள மலையக மக்களும் அதிகளவில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற கோஷங்களும் வலுப்பெற்று வருகின்றமை தெரிந்ததாகும்.

இந்நிலையில்  பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறை சமகாலத்தில் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு இத்துறையில் புரட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். மலையக மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய 10 பேர்ச் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த ஜனாதிபதி, மலையக மக்கள் தமது காணிகளில் தேயிலையைப் பயிரிட்டு அவற்றை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கக் கூடிய வகையில் பெருந்தோட்டத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த கம்பனிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கம்பனியினரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்கள் என்ற நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசியம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினாலும் அண்மையில் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் தெரிந்ததேயாகும்.

malaiyakam மாற்றுத் தொழில் முயற்சி -  துரைசாமி நடராஜாபெருந்தோட்டத்தை நிர்வகிக்கும் கம்பனிகள் கூட்டு ஒப்பந்த நடைமுறை தொடர்பில் அதிருப்தியையே வெளியிட்டு வருகின்றமையும் நீங்கள் அறிந்ததாகும்.150 வருட வேதன முறையை மாற்றியமைத்து வருமான பங்கீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்பதே கம்பனிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.இதனூடாக அதிகரித்த வருமான ஈட்டலை பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதும் கம்பெனிகள் இதற்கு மலையக அரசியல்வாதிகளும்,தொழிற்சங்கங்களும் தம்மாலான உச்சகட்ட பங்களிப்பினை வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன.

இவ்வாறாக பெருந்தோட்ட மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பில் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு பேசப்பட்டு வருகின்றபோதும் இவையனைத்தும் ஏட்டுச்சுரைக்காயாகிப் போனதே அதிகமாகவுள்ளது.இதனிடையே இம்மாத இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்றும் ஜனாதிபதி இது தொடர்பில் பெருந்தோட்ட மக்களுக்கு சாதகமான பதிலை அறியத்தருவார் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இத்தகைய பல கூற்றுக்கள் பொய்த்துப்போயுள்ள நிலையில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கூற்றின் நம்பகத்தன்மை குறித்து பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

புத்திஜீவிகளின் கோரிக்கை

மலையக பாடசாலைகளில் க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர் தரம் என்பவற்றை முடித்துக் கொண்டு வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வெளியேறுகின்றனர்.இவர்களில் ஒரு சிலரே பல்கலைக்கழக கல்வியை தொடரும் வாய்ப்புடையவர்களாக காணப்படுகின்ற நிலையில் அநேகமானவர்கள் தொழிலின்றி அல்லல்படுவதை காணமுடிகின்றது.

இவர்களின் தொழிலற்ற நிலையானது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.இளைஞர் யுவதிகள் பெற்றோரில் தங்கி வாழும் நிலைமை அதிகரித்து காணப்படும் நிலையில் இது ஏனைய பல பிரச்சினைகளுக்கும் உந்துசக்தியாகியுள்ளமையும் தெரிந்ததாகும்.இதனிடையே இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பு கருதி தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை மலையகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மலையக இளைஞர்களின் தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்தியினை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதார மேம்பாடு கருதியும் இந்திய முதலீட்டாளர்கள் மலையகத்தில் முதலிட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் சென்னையில் இடம்பெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.’

இலங்கையைப் பொறுத்தவரையில் மலையக இளைஞர், யுவதிகளுக்கு அனைத்து திறமைகளும் இருக்கின்றன.ஆனால் அவர்களுக்கு சந்தர்ப்பம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.பொருளாதார ரீதியில் நாங்கள் பின்னடைந்தவர்களாகவே இருக்கின்றோம்.எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இந்திய முதலீட்டாளர்கள் முன்வருவார்களானால் அது இம்மாநாட்டிற்கு கிடைத்த ஒரு வெற்றியாகக் கருதுகின்றேன்’ என்றும் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் பொருளாதாரத்தின் வகிபாகம் இன்றியமையாததாகும்.இந்த வகையில் பின்தங்கிய நிலையிலுள்ள மலையக மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதோடு இதற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படுதலும் வேண்டும்.இது இம்மக்களின் வாழ்வில் பல்துறை அபிவிருத்தி ஏற்பட உந்துசக்தியாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.