மலையக மக்களின் பிரச்சினைகள் அதிகமுள்ள நிலையில் இவற்றை தீர்த்து வைப்பதில் ஆட்சியாளர்கள் கரிசனை காட்டுவதில்லை.அவர்கள் இவ்விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்படுகின்றனர்.எனவே இம்மக்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தி உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க மலையக அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளீர்க்கப்படும் என்று ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ பிரன்ச், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினரிடம் அண்மையில் வலியுறுத்தி இருக்கின்றார்.இத்தகைய முன்னெடுப்புக்கள் மலையக மக்கள் சாதக விளைவுகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ள உந்துசக்தியாக அமையும் என்று கருதப்படுகின்றது.
19 ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வம்சாவளி மக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை பல்வேறு துன்ப துயரங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.இவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக காரணிகள் பலவும் அமைந்துள்ள நிலையில் இம்மக்களை ஒடுக்கி கோலோச்சுவதையே இனவாதிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் சரி அல்லது சுதந்திரம் பெற்ற பின்னரும் சரி இந்திய வம்சாவளி மக்கள் மீதான நெருக்கீடுகளுக்கு ஒரு போதும் குறைவிருக்கவில்லை என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இம்மக்களுக்கு பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றை டொனமூர் வழங்க முற்பட்டபோதும், அதன் பின்னர் இம்மக்களுக்கான சிற்சில அபிவிருத்திகளைப் பெற்றுக் கொடுக்க ஆட்சியாளர்கள் காய் நகர்த்தல்களை மேற்கொண்ட போதும் இனவாதம் எகிறிப் பாய்ந்தது.இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட இம்மக்கள் சமூகத்தினர் இலங்கையில் உரிமைகளை பெற்றுக் கொள்ள உரித்துடையவர்களல்லர்.எனவே இவர்களை மீளவும் இந்தியாவுக்கே திருப்பியனுப்ப வேண்டும் என்ற கோஷங்களும் ஒருகாலத்தில் வலுப்பெற்று காணப்பட்டது.இனவாத சிந்தனையாளர்கள் இதில் வெற்றியும் கண்டனர்.
இதனடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின் விளைவாக இந்தியத் தமிழர்கள் பலர் மீண்டும் தாயகம் செல்ல நேர்ந்தமை துயரமான நிகழ்வாகும்.இதற்கேற்ப 1971 இல் 25,384 பேரும், 1973 இல் 41,153 பேரும், 1975 இல் 24,570 பேரும், 1977 இல் 39,818பேரும்,1978 இல் 29,438 பேரும், 1980 இல் 18,867 பேரும், 1981 இல் 261,18 பேரும், 1983 இல் 32,526 பேரும் தாயகம் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறெனினும் 1971 இற்கும் 1984 இற்கும் இடையில் நான்கு இலட்சத்து 46 ஆயிரத்து 338 பேர் தாயகம் திரும்பி இருந்ததாக தகவல்கள் வலியுறுத்துகின்றன.இந்நிலையானது இலங்கையில் இந்திய தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சிநிலை ஏற்படுவதற்கு அடித்தளமாகியது.
1911 இல் இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கை 531,000 ஆகும்.இது இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 12.9 வீதமாக இருந்தது.1946 இல் 780,000, 1963 இல் 1,123,000, 1971 இல் 1,173,000, 1981 இல் 818,000 என்றவாறு இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கை அமைந்திருந்தது.இதேவேளை 2012 இல் 839,504 ஆக இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கை காணப்பட்ட நிலையில் இது இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 4.1 வீதமாக காணப்பட்டது.இவ்வாறாக இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சிநிலை ஏற்படுவதற்கு ஒப்பந்தங்கள் ஒருபுறமிருக்க இடம்பெயர்வுகள், பிழையான பதிவுகள் என்பனவும் வலுசேர்த்தன.எனினும் மேற்கண்ட தகவல்களின் நம்பகத்தன்மை தொடர்பில் புத்திஜீவிகள் சந்தேகமெழுப்பியுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாதல் வேண்டும்.
இந்திய வம்சாவளி மலையக மக்கள் இந்நாட்டில் சமகாலத்திலும் சரி அல்லது முன்னைய காலங்களிலும் சரி நெருக்கீடான வாழ்க்கைப் போக்குகளை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.லயத்துக் கலாசாரத்தின் தீய விளைவுகளுக்கு மத்தியில் வாழ்க்கை நடாத்தும் இவர்களில் பலருக்கு தனிவீட்டுக் கலாசாரம் என்பது இன்னும் எட்டாத கனியாகவே இருந்து வருகின்றது.இலங்கையில் வீடமைப்பு தொடர்பில் பல்வேறு விசேட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டபோதும் மலையக மக்கள் இவற்றில் உரியவாறு உள்ளீர்க்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
அரசாங்கம் இம்மக்களுக்காக பல்லாயிரக்கணக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்க உத்தேசித்துள்ளதாக வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலும், தேர்தல் விஞ்ஞானங்களிலும் கவர்ச்சியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.பெருந்தோட்டத்துறையில் 50 ஆயிரம் அலகுகளைக் கொண்ட வீட்டுத்தொகுதியை ஏற்படுத்தப்போவதாக 2014 ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட முன்மொழிவு வலியுறுத்திய அதேவேளை தோட்டத்துறையில் வீடமைப்பு அபிவிருத்திக்காக அடுத்த மூன்று வருடத்துக்குள் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுவதாக 2022 ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் வலியுறுத்தியது.
இதேவேளை மலையக மக்களை தற்போதைய லயன் வாழ்க்கையில் இருந்து மீட்டெடுத்து காணி உரிமையுடன் கூடிய சகல வசதிகளும் கொண்ட நவீன மயமான கிராமிய சூழலில் தனி வீடுகளும்,பொது வசதிகளும் அமைத்துக் கொடுப்பதுடன் இத்திட்டம் முழுமையாக தோட்ட நிர்வாகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் பிரதேச சபைகளின் மூலம் சேவைகளை பெறக்கூடியவாறு உருவாக்கிக் கொடுக்கப்படும் என்று ‘மாற்றத்தை நோக்கி ஒன்றிணைவோம். மைத்திரியின் 100 நாள் ஆட்சியில் புதிய நாடு’ தொடர்பான நாட்குறிப்பு வலியுறுத்தியது.எனினும் இவையெல்லாம் பின்னர் ஏட்டளவில் முற்றுப்பெற்று ,காற்றில் பறந்த வாக்குறுதிகளாகியமை யாவரும் அறிந்த விடயமாகும்.இத்தகைய நிலைமைகள் அரசாங்கத்தின் மீதான மலையக மக்களின் நம்பகத்தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
பொருளாதார அபிவிருத்தி, ஊதிய அதிகரிப்பு, சுகாதார மற்றும் மருத்துவ மேம்பாடு, கல்வி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற சகல விடயங்களிலும் ஆட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதிகள் கானல் நீராகியமையையே அவதானிக்க முடிந்தது.இதன் தொடர்ச்சி இன்னும் முற்றுப் பெற்றதாக இல்லை.
ஆய்வின் வெளிப்பாடுகள்
அத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதை இழுத்தடிக்கும் நோக்கில் அவ்வப்போது விசேட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டமையையும் காணமுடிந்தது.வரலாற்றில் தொடர்ச்சியாகவே இந்நிலைமையை அவதானிக்க முடியும்.இக்குழுக்களின் முன்வைப்புக்கள் மலையக மக்களின் பின்தங்கிய வெளிப்பாடுகளை படம் பிடித்து காட்டுவதாக அமைந்தது.இதற்கமைய 1976 இல் நிகழ்ந்த ‘இலங்கை போஷாக்கு அளவீடு’ கிராமிய சிறுவர்களைவிட தோட்டப்புற சிறுவர்களே பெருமளவு நீடித்த போஷாக்கின்மையாலும், குறை போஷாக்கினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தியது.உலக சுகாதார நிறுவனம் பல சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட ஆய்வுகளும் மலையக மக்களின் பல்வேறு பின்தங்கிய வெளிப்பாடுகளுக்கு சான்றாக அமைந்தன.
பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார நிலையைப் பற்றி ஆராய்வதற்கென 1992 ம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.அக்குழு மலையக மக்கள் பின்வரும் விடயங்களில் பின்தங்கி இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தது.இதற்கேற்ப குடியுரிமை, தொழில் வாய்ப்புகள் , கல்வி, தொழிற்பயிற்சி, வீட்டு வசதியும் சுகாதாரமும்,சமூகநலன் பேணல், மின்சார வசதி,தொடர்பாடல் வசதிகள், சமூக, கலாசார மேம்பாடு, விளையாட்டு பொழுதுபோக்கு என்பவற்றுக்கான வசதிகள், பிரதான தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் என்பவற்றில் மலையக மக்கள் பின்தங்கிக் காணப்படுவதாக குழு சுட்டிக்காட்டி இருந்தது.
எனினும் குழுவின் அறிக்கை எந்தளவுக்கு சாதக விளைவுகளை இம்மக்கள் சார்பில் ஏற்படுத்தி இருந்தது என்பது கேள்விக்குறியாகும்.மலையக மக்களின் அபிவிருத்தி கருதி முன்வைக்கப்பட்ட ஐந்தாண்டு மற்றும் பத்தாண்டு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டதையே அவதானிக்க முடிந்தது.
மலையக மக்கள் இந்நாட்டு ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டும், பிரச்சினைக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படாது இழுத்தடிக்கப்பட்டும், உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டும் வந்த நிலையில் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியே மலையக மக்களிடம் தலைதூக்கியது.மலையக அரசியல்வாதிகளும் அவ்வப்போது தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் முன்வைத்து தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் அதிகரித்து வந்தன.இதற்கேற்ப மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான முன்வைப்புக்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அறிக்கையில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளன.பேரவையின் இவ்வருடத்துக்கான அறிக்கையில் மலையக விவகாரம் குறித்து குறிப்பிடப்படாமை குறைபாடாகும் என்று ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ பிரன்ச் ஏற்றுக்கொண்டுள்ளதோடு இவ்விவகாரம் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினரிடம் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தொடரில் பெருந்தோட்ட மக்களின் 200 வருடகால கசப்பான வரலாறு,வாழ்க்கை முறை மற்றும் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடியுள்ளதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருக்கின்றார்.மேலும் இக்கூட்டத்தொடரில் பிறநாட்டினுடைய தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளிடமும் மலையக மக்கள் சார்பாக பல விடயங்களை முன்வைத்திருப்பதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருக்கின்றார்.ஐ.நா.பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் சென்றிருந்தமை தெரிந்ததே.
இதேவேளை மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.அதற்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் வலியுறுத்தி இருந்தமையும் நோக்கத்தக்கதாகும்.எவ்வாறெனினும் இலங்கையின் ஆட்சியாளர்களை அல்லது சர்வதேசத்தை வலியுறுத்தி மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசரமும் அவசியமாகும்என்பதே உண்மை.