மாகாணசபை முறையை ஒழிக்க இடமளிக்கமாட்டோம் – சுமந்திரன் திட்டவட்டம்

மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். ஆனால் வெறுமனே இருக்கின்ற மாகாணசபை முறை எங்கள் பிரச்னைக்கு தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்கவேண்டும். அது முழு அதிகாரங்களை பெற்றதாக ஒரு சமஷ்டி கட்டமைப்பில் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதுவருட தினமான நேற்று புதன்கிழமை அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்-

இன்றைய தமிழ் சிங்கள புத்தாண்டு இந்நாட்டிலே மக்கள் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என வாழ்த்துகின்றோம். நாட்டிலே பல விதமான பிரச்னைகள் இருக்கின்றன. பொருளாதார பிரச்னைகள் இப்போது முக்கியமாக மேலோங்கி நிற்கின்றன. இந்த சூழ்நிலையிலே இப்புத்தாண்டு கொண்டாடுவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களுக்காக நாங்கள் விசேடமாக அவர்களை நினைவு கூருகின்றோம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த புத்தாண்டிலாவது எங்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கின்றோம். பிரார்த்திப்பது மட்டுமல்ல அதற்காக தொடர்ந்து எங்களது பிரயாசையையும் கொடுத்துக் கொண்டேயிருப்போம். எங்களுடைய முயற்சி ஒருபோதும் கைவிடப்படமாட்டாது. அரசாங்கத்துக்குள்ளே மாகாணசபைத் தேர்தல் நடத்துவது பற்றி பெரியதொரு இழுபறி நடந்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்கு தெரிகிறது. அரசியல் கட்சியாக அவர்கள் அந்த இரண்டாவது நிலையிலேயும் தாங்கள் ஆட்சிகளை கைப்பற்ற வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால் கடும்போக்குவாத பின்னணியை கொண்ட பலர் இந்த அரசாங்கத்தை இந்தத் தடவை பதவிக்கு கொண்டு வந்தவர்கள் -விசேடமாக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இனவாத சிந்தனை உள்ள கடும்போக்குவாதிகள் மாகாணசபை முறை அகற்றப்படவேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கிறார்கள். ஆகையினாலே இந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையே நடக்கும் இழுபறி யாருக்கு வெற்றியில் முடியும் என்பதை எங்களால் சொல்ல முடியாதிருக்கிறது.

எங்களைப் பொறுத்தவரையிலே மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். ஆனால் வெறுமனே இருக்கின்ற மாகாணசபை முறை பிரச்னைக்கு தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்கவேண்டும். ஆனால் அது முழு அதிகாரங்களை பெற்றதாக ஒரு சமஷ்டி கட்டமைப்பில் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலர வேண்டும். அதற்கான எங்களுடைய யோசனைகளை இந்த அரசாங்கம் நியமித்துள்ள குழுவுக்கு முன்வைத்துள்ளோம். அவர்களுடன் நீண்டதொரு சம்பாசனை நடத்தி இருக்கின்றோம். அதற்குப் பிறகும் இரண்டு மூன்று கடிதங்கள் அவர்களுக்கு எழுதியுள்ளோம். ஆகையினாலே எங்களுடைய முயற்சி இது தொடர்பாக தொடர்ந்து நடைபெறும்.

மாகாணசபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. என்னுடைய பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அது பாதுகாப்பு தரப்பினருக்கு தான் தெரியும். இது அவர்களே நீதிமன்றத்துக்கு முன்பாக பல அறிக்கைகளை முன்வைத்து சொன்ன செய்தி.

பல ஆயுதங்களை கண்டெடுத்து 2019 திலிருந்து ஒரு நீதிமன்ற வழக்கில் இந்த 15 பேரையும் உட்படுத்தி என்னைக் கொலை செய்த முயற்சித்தார்கள் என்றும், வேறுபல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் தடுப்புக் காவலில் இருந்தவர்கள். அவர்களில் 11 பேர் சாட்சிகள் இல்லை என்று சட்டமா அதிபர் சொன்னதாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதனுடைய பின்னணி எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இதேபோல இன்னும் ஓரிரு வழக்குகள் இருப்பதாக அறிகிறேன்.

ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர , சுமந்திரனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. நான் அவருக்கு எச்சரிக்கை செய்து இருக்கின்றேன் என கூறினார். பிறகு பெப்ரவரி மாதத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி நடைபயணம் முடிவடைகின்றபோது என்னுடைய விசேட பாதுகாப்பு அகற்றப்பட்டது. அதைப்பற்றி எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது அன்றைய தினம் மூன்று தடவைகள் அவர் திரும்பத் திரும்ப பாராளுமன்றத்தில் கூறினார், அவருக்கு(சுமந்திரனுக்கு) உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது எங்களுடைய ஆராய்ச்சியின்படி அவருக்கு இப்போதும் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது.

ஆனால் அவர் நடைபயணத்தில் சென்ற காரணத்தால் இதனை நீக்குகிறோம் என்று சொன்னார். ஆகவே உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டே விசேட பாதுகாப்பை அவர் நீக்கிய காரணத்தினால்தான், எனக்கு ஏதாவது நடக்குமாக இருந்தால் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்றைக்கே பாராளுமன்றத்தில் சொல்லியிருந்தேன். இப்பொழுது என் பாதுகாப்பை நீக்கி என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்று அவர்களாகவே இரண்டரை வருடங்களாக தடுத்து வைத்திருந்த 11 பேரை விடுவித்துள்ளனர். ஆகவே அடுத்தடுத்ததாக என்ன நடக்கும் என்று சொல்ல தெரியாது. இதற்கு முழுப்பொறுப்பும் சரத் வீரசேகரவும், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும், அரசாங்கமும்தான் எடுக்க வேண்டும்-என்றார்.

Leave a Reply