மஹர சிறையில் 8 கைதிகள் உயிரிழப்பு

இலங்கை கம்பஹா – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

கம்பஹா – மஹர சிறையில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தக் கோரி போராடிய கைதிகள் மீதே சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்று தெரிய வருகின்றது. இதையடுத்து கைதிகளுக்கும் படைத்தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 71 பேர் காயமடைந்துள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார். காயமடைந்தவர்களில் இரண்டு அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு காயமடைந்தோரில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காயமடைந்தவர்களில் சுமார் 15 பேருக்கு சத்திர சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலருக்கு சத்திர சிகிச்சைகள் நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 71 பேரில், 48 பேருக்கு கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 26 பேருக்கு கோவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.