மறைந்த முன்னாள் ஆயருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

தமிழ் தேசியத்தின்பால் ஓங்கி ஒலித்த குரல், ஓய்வுநிலை ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்க நாளான நாளை திங்கள்கிழமை (05/04/2021) மாலை 4, மணிக்கு மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தைசெல்வா நினைவுச் சிலை வளாகத்தில் அஞ்சலி நினைவு இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி சிரேஷ்ட தலைவருமான பொ.செல்வராசா அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்த அஞ்சலி நிகழ்வில், மறைந்த மன்னார் முன்னாள் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவு சுடர்கள் ஏற்றி மௌனப் பிரார்தனை செய்வதுடன் அன்னாரின் நினைவு தொடர்பாக “நினைவுரையும்” இடம்பெறும்.

ஆன்மீக தலைவராக இருந்து தமிழ்தேசியத்தின்பால் அக்கறையுடன் செயலாற்றி வடக்கு கிழக்கு மக்கள் பல நெருக்கடிகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், தடைகளையும் சந்தித்த வேளைகளில் எல்லாம் தேசியரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் துணிந்து குரல் கொடுத்த உன்னத மகான் ஆண்டகை இராயப்பு ஜோசப் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.