மயூரனின் கவிதைகள் நல்ல கவிதைகளுக்கான நம்பிக்கை! – ஓர் நூலாய்வு – கனகரவி

விஞர் இணுவையூர் மயூரனின் முதல் படைப்பாக “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்“ கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. இவரின் கவிதைகள் ஈழத்து வாழ்வியலையும் வலிகளையும் பேசுகின்றன. கவிதைகள் மனித மனங்களில் காட்சிகளை உருவாக்கும் சிந்தனையை மேம்படுத்தும் சக்தி மிக்கவையாகவே நான் பார்க்கிறேன். தற்காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏராளம் கவிதைகள் படைக்கப்படுகின்றன. மரபுக் கவிதைகளாகவும், புதுக்கவிதைகளாகவும் சிலவேளை மரபை விலக்கிவிட இயலாதவையாகவும் கவிதைகளை நாம் காணலாம். தொடர் வாசிப்பில்லாதோர் கவிதைகளை கண்டு கொள்வதில்லை என்பது போல் கவிதைகளைப் படைப்போரும் சிந்தனையைத் தட்டி விடாமல் விடுவதும் உண்டு. அழகியலைப் புறம் தள்ளி சொற்படிக் கட்டுகளை கவிதைகள் என எழுதுவோரும் உண்டு. ஆனால் மயூரனின் கவிதைகளைப் படிப்போர் நிறையக் காட்சிகளைக் காண்பார்கள்.

“இலக்கியம் உள்ளதை உள்ளம் உணர்ந்தபடி கூற முனைவதால் உணர்ச்சி, கற்பனை, உண்மை, அழகு, கலைநயம் என்பவற்றிற்கு அதில் அதிக இடமுண்டு“ எனக் கோடி காட்டுகிறார் ஈழத்தின் மூத்த இலக்கியப் படைப்பாளரான முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்கள்.

முல்லைமணி கூறியது போல உள்ளதை உள்ளம் உணர்ந்தபடி மயூரன் கவிதைகளைப் படைத்துள்ளார். இயல்பாக உள்ள இவரது கவிதைகள் கவிஞர் கஸ்தூரியின் கவிதைகள் போன்று பொருள் கொண்டதாகவும் என்னால் காண முடிகிறது. பாரதியோடு மயூரன் பற்றுக் கொண்டவராகக் காணப்படுகிறார். அதனைத் தொடர்ந்து வாசிக்கின்ற போது நீங்களும் காணலாம்.

வாசிப்பிலும் எழுத்திலும் பற்றுக் கொண்டவராகவும் கவிஞர் அவரின் படைப்பிற்குள் தெரிகிறார்.

“இன்னும் பல நூறு கதைகள் இந்தச் சந்ததி காணாத வாழ்வு

என்மனம் முழுக்க பரவிக்கிடப்பன!

சாவதற்குள் காலம் கூடினால்

கதை கதையாய் அத்தனையும் எழுதி வைப்பேன்”

எனக் கவிஞர் இந்தச் சந்ததி காணாத வாழ்வு (பக்கம் 21) என்ற கவிதையில் தனது எழுத்தின் மீதான ஆழ்மன விருப்பை அழுத்தமாகக் கூறுகிறார்.

‘சாதீ’ என்ற கவிதை சாதியைப் பற்றிப் பேசுவதே. அதை வளர்க்கும் அல்லது அடுத்த தலைமுறையினரிடம் அதனை நினைவுபடுத்தும் எனப் பேசுகின்றது.

“…முதுகுப் புண்ணைச் சொறிந்து

சொறிந்து சிற்றின்பம் காண்கிறோம்.

அரிப்பு இன்னும் அகலப்படும்

அது அடுத்த சந்ததியையும் காவு கொள்ளும் (பக்கம் 27)

மானிடர் தெளிவு பெற்றால் சாதியம் தோற்றுப் போகும். மனிதர் வேறுபாடுகளைக் கழைந்து வாழ்வர் எனவே இதைப் பேசு பொருளாக எடுக்காது விடுவதன் மூலமே இதனை உழித்து விடலாம் என்பதவர் கருத்து.

இந்தக் கவிதைத் தொகுப்பில் வித்தியாசமான கவிதையாக ‘நான்’ என்ற தலைப்பிலான கவிதையைப் பார்க்கிறேன்.

“இன்று வரை அவனை ஆள நானும்

என்னை ஆள அவனும் முயன்று

முயன்று முடிவு காணாது

இருவருமே தோற்றிருக்கிறோம்” (பக்கம் 53)

இதுவொரு பேசுபொருளை புதிய முறையில் சொல்ல முயன்ற மயூரனிடம் மறைந்திருக்கும் ஏராளம் நல்ல கவிதைகளை வெளிக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

‘பிறந்த மண்’ கவிதை சொந்த மண்ணை விட்டு வாழும் எல்லோரையும் விம்ம வைக்கும்.

“…..கனக மடி தவழ்ந்து களித்திடவே

      காத்துக் கிடக்கிறேன்.

“………கனலாடும் நெஞ்சம்

        காத்துக் காத்து விம்முகிறது” (பக்கம் 22)

இது பிறந்த மண்ணில் வாழ முடியாத ஏக்கம் நிறைந்தோரின் விம்மலாகும். தெரிந்தும் தெரியாமல் உள்ள பேசுபொருளிது. மண்ணை விட்டு வெளியேறியோர் உலகின் பல நாடுகளிலும் ஏக்கத்துடன் வாழ்வதை காண்கிறோம். சிலர் வெளியில் சொல்வர். சிலர் வெளியில் சொல்லத் தெரியாது வாழ்வர். பிறந்த மண் மீதான காதல் தான் இந்த விம்மலைத் தருகிறது.

பாரதியின் ‘தேடிச் சோறு நிதந் நின்று’ என்ற கவிதையை நினைவுட்டுவதாகவே இவரின் “மமதை“ என்ற கவிதை உள்ளது.

“….மனதில் கனம் இல்லாததால்

மமதையோடு நிமிர்கிறேன்” (பக்கம் 65)

என மமதையுடன் கவி பாடுவது தற்துணிவானதே! இந்தக் கவிதையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக எழுதி இருக்கலாமோ? என நான் கருதுகிறன். எனினும் அவரின் மமதை ஏனைய படைப்பாளர் அல்லது படிப்பாளிகளை பற்றிக் கொள்ளும் அப்படி ஓர் தேவையைக் கொண்டதாக இந்தக் கவிதையை மீளவும் வாசித்துப் புரிந்து கொண்டேன்.

உலாத்தலில் ஆர்வம் கொண்ட கவிஞர், ‘உலாவருகிறாள் கண்ணகி’ என்ற கவிதையில் சினங் கொள்கிறார்.

“…உருக்குலைந்த ஊர் பார்க்க

ஊர் ஊராய் உலா வருகிறாளாம்!”

என்பவர்,

“…தன் பிள்ளைகளை அழித்துப்

பகைவர் நாட்டிய தூண்களில்

ஏற்றிய ஒளிதனில் நிம்மதி கொண்டு

விடுப்புப் பார்க்க வீதியுலா வருகிறாளாம்” (பக்கம் 69)

நீதி கேட்டு மதுரைக்கே தீ வைத்த கண்ணகியை தீயால் சுடுவதற்கு ஒப்பாக கவியால் சுடும் சினங் கொண்ட கேள்விக் கணையைத் தொடுக்கிறார் கவிஞர்.

‘(சு)தந்திர நாள்’ இந்தக் கவிதையின் தலைப்பே கதையொன்றைச் சொல்கிறது.

“….. என் தாத்தன் முதுகில்

சிங்களச் சிறி…”

எனச் சுட்டுபவர்,

“…தான் யாரென்றே தெரியாத

இனமொன்றின் வாரிசு ஆவதும்…” (பக்கம் 73)

என ஏக்கத்துடன் சுதந்திர நாளை தந்திர நாள் என்கிறார் கவிஞர். இது உண்மையான சுதந்திர வேட்கையுடையோரின் மனக்கிடக்கையை தட்டிவிட வல்லதாகவே கருதலாம்.

ஒவ்வொரு கவிதைகளோடும் படம் ஒன்றையும் இணைத்து வரும் கவிஞர் தாய் மொழி நாள் என்ற கவிதைக்கான படமாக தமிழ் மொழிக் கடவுளான தமிழ்த்தாயின் படத்தைப் பொருத்தமாகப் போட்டுள்ளார்.

“…உன்றன் உடலில் சொல்லெழுத்து

உன்னைப் போற்றிப் பாடுகிறேன்!

உலகம் உள்ள மட்டும் வாழியவே!

என்னுள் நிறையும் தமிழவளே!” (பக்கம் 79)

இது தாய் மொழி மீதான பற்றின் காரணமாக ஊற்றெடுத்த கவிதையாகவே தெரிகிறது.

‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ மீண்டும் பாரதியை நினைக்க வைக்கும் தலைப்பிது. படத்தையும் பாரதியின் படமாகப் போட்டுள்ளார்.

“….பழிகளின் மீது

படி அமைத்து ஏறி

நடக்கிறேன்….! ( பக்கம் 83)

இதொரு பட்டறிவின் பரிநாமம் இல்லையென்றால் இப்படி எழுத முடியாது. மயூரனைத் தெரியாதோரும் கவிதையின் உட்கிடக்கையைப் புரிந்து கொள்வார்கள்.

‘விரசம் ஏதும் கொள்ளாதீர்’ என்ற கவிதை படிப்போர். இந்தக் கவிதையை எப்படி முடிப்பார் என வேகமாக வாசிக்கத் தூண்டும் கவிதையாகும்.

“…..மூடியதைத் திறந்து

முழு நிலவாய்

எனைக் காண வாராயோ…” (பக்கம் 89)

சிலேடையாகப் படைக்கப்பட்டுள்ளது. எதைச் சொல்கிறார் எனக் கருதும் கணப்பொழுதில் இதையா என மனம் ஆற்றுப்பட்டு நகைக்கிறது. இதுவும் தேவையற்ற கவிதை அல்ல.

viber image 2021 06 08 14 00 28 மயூரனின் கவிதைகள் நல்ல கவிதைகளுக்கான நம்பிக்கை! - ஓர் நூலாய்வு - கனகரவி

 

‘சபிக்கப்பட்டவர்கள்’ கவிதை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பேசுகின்றது. அதற்குப் பொருத்தமான ஒளிப்படத்தையும் போட்டுள்ளார்கள். ஒவ்வொரு உறவுகளின் துயரையும் கவிஞர் வெளிப்படுத்துகிறார். இந்தக் கவிதையின் மொழியும் இன்னும் நயம் மிக்கதாக இருந்திருக்கலாமோ? என நினைக்கிறேன். சட்டென படிப்போர் விளங்கியுணர்வர். இந்தக் கரு கவிதையாகின்ற போது படிப்போரின் சிந்தனைப் பரப்பில் ஓர் அழியாக் காட்சியை உருவாக்கும் இதனை ஆழமாக்குவதற்கு தான் மொழியின் நயம், கட்டிறுக்கும் கொள்ளல் நல்லதென நினைக்கின்றேன்.

“….தொலைந்த பிள்ளைகள்

முகம் காணாது

துயருறும் பெற்றவர் எத்தனை!!

தந்தை குரல் கேட்க

காத்திருப்போர் எத்தனை!!…” (பக்கம் 115)

இந்தக் கவிதையில் “கருவினில் கேட்ட தந்தை குரல் கேட்க” என்ற வரிகள் மிகுந்த பொருளுடையது தான். எத்தனை காலம் சென்ற பின்னரும் இப்படியெல்லாம் ஈழத்தமிழினம் துயர்பட்டதோ? என வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வரிகள்.

கவிஞருக்கு கண்ணகி மீது கடுங் கோவம் போலவுள்ளது. ‘கண் திறவாக் கண்ணகியே’ என்ற கவிதை கண்ணகி மீதான சினத்தை மட்டுமல்ல. பல்லாயிரக் கணக்கான மக்கள் ஈழ மண்ணில் கொன்றழிக்கப்பட்ட போது பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் மீதான சினமாகவும் தெரிகின்றது. இதனை ஒரு குறியீட்டுக் கவிதையாக வாசகர் கொள்வர் என நம்புகின்றேன்.

“…..கண் கலங்கித் தொழுதோரை

கடைசிவரை காத்தருள வராமல்

கயவர்க்கு அருள் சொரிந்து எமைக்

காணாது கிடர்தாயோ?…”

இது தமிழ் மக்களைக் கொன்றழித்த போது கொலை செய்வோரிற்கு துணை நின்ற அனைவரையும் நோக்கி எழுப்பும் கேள்வியாகக் கொள்ளலாம்.

‘ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்’ சுவிற்சர்லாந்தில் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளர்களிடையே புதிய கவிஞர் ஒருவரை வரலாற்றில் தடம் பதிக்க வைத்துள்ளது. இங்கே தான் குறிப்பிட்ட கவிதைகளை விடவும் பல கவிதைகள் உள்ளன. அவற்றை வாசகர் படித்துணர்ந்து கொள்க. கவிஞர் இணுவையூர் மயூரன் பல நல்ல கவிதைகளைப் படைத்துள்ளார். தற்காலத்தில் தமிழுலகிற்கு இன்னும் நல்ல கவிதைகளைத் தருவார் என்ற நம்பிக்கையை தனது முதல் படைப்பில் இவர் விதைத்துள்ளார். ஈழத்தின் படைப்பிலக்கியத் துறையில் மயூரன் வரலாற்றுத் தடம் பதிப்பார்.

நட்புடன் –  கனகரவி

சுவிற்சர்லாந்து.

Leave a Reply